Close
நவம்பர் 22, 2024 3:09 காலை

மரம் வளர்ப்பதற்கான விழிப்புணர்வைப் போல குழந்தைகள் வளர்ப்பிலும் ஏற்படுத்த  வேண்டும்: எம்எல்ஏ சின்னத்துரை

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா எல்.என்.புரம் ஊராட்சிக்க உட்பட்ட சுக்கிரன்குண்டு கிராமத்தில் எய்டு இந்தியா தொண்டு நிறுவனத்தின் மூலம் ரூ.1.85 லட்சத்தில் படிப்பகத்தை திறந்து வைத்த எம்எல்ஏ- சின்னத்துரை

மரம் வளர்ப்பதற்கு ஏற்படுத்தும் விழிப்புணர்வைப் போல குழந்தைகள் வளர்ப்பிலும் ஏற்படுத்த வேண்டும் என்றார் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா எல்.என்.புரம் ஊராட்சிக்க உட்பட்ட சுக்கிரன்குண்டு கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் சாலையில் இருந்து சுமார் 3 அடி பள்ளத்தில் சிறிய மழை பெய்தாலும் தண்ணீர் சூழும் பகுதியில் சுவரற்ற குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர்.

பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள இக்கிராமத்தில் இருந்து தன்னார்வலர்களின் முயற்சியால் 40 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் பயின்று வருகின்றனர். கற்றல் திறனில் மிகவும் பின்தங்கியுள்ள இக்கிராம மாணவர்களுக்காக எய்டு இந்தியா தொண்டு நிறுவனத்தின் மூலம் ரூ.1.85 லட்சத்தில் கட்டிய படிப்பகம் சனிக்கிழமை திறக்கப்பட்டது.

புதுக்கோட்டை
நூலகத்தை திறந்து வைத்த எம்எல்ஏ சின்னத்துரை

நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி தலைமை வகித்தார்.  கந்தர்வக்கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை படிப்பகத்தை திறந்து வைத்து, மாணவர்களுக்கான நோட்டு, புத்தகங்களையும் வழங்கினார்.

பின்னர் அவர் பேசும்போது, இந்தக் கிராமத்து குழந்தைகள் ஆடைகள்கூட இல்லாமல் சுற்றித் திரிவதைப் பார்க்கும்போது மிகவும் வேதனையாக இருக்கிறது. மரம் வளர்ப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதைப் போல குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது.

கல்வியில் 300 ஆண்டுகள் பின்தங்கிய மாவட்டம் புதுக்கோட்டை. அறிவொளி இயக்கம், வளர்கல்வி இயக்கம் போன்ற திட்டங்கள் மூலமாக படிப்படியாக 72 விழுக்காடு எழுத்தறிவைப் பெற்றுள்ளது. இதை இன்னும் அதிகரிப்பதற் கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.

கல்வி குறித்து விழிப்புணர்வும், தங்கள் பிள்ளைகளை உயர்கல்வி படிக்க வைக்க வேண்டும் என்ற விழிப்புணர்வும் பெற்றோர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்த விழிப்புணர் வானது கல்வியில் முன்னோடி மாவட்டமாக புதுக்கோட்டை யை உயர்த்தும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

சொந்த மனை, சொந்த வீடு இல்லாமல் சுக்கிரன்குண்டு கிராம மக்கள் வசிக்கின்றனர். இதுபோன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். இவர்களும் இந்திய நாட்டு மக்கள்தான். இதுதான் இந்தியா. அடுத்த வேளை சோற்றுக்காக உழைக்கும் ஏழைகள் வாழ்வது ஒருபுறம்.

சொகுசு வாழ்க்கை நடத்தும் மக்கள் மறுபுறம். இப்படியாக இந்தியாவானது இரட்டை நாடாக திகழ்கிறது. ஆனால், சிலர் ஒரே இந்தியா என்பதை வேறு விதமாக சித்தரிக்கின்றனர். இதை மாற்றி, அனைவருக்கும் அனைத்தையும் சமமாக்கும் வகையிலான ஒன்றுபட்ட இந்தியாவாக மாற்ற வேண்டும். இதை அடைவதற்கு, அனைவருக்கும் எழுத்தறிவு, வேலை வாய்ப்பை உருவாக்குவதோடு, கலாசார ரீதியான மாற்றத்தையும் உருவாக்க வேண்டும் என்றார் எம்எல்ஏ சின்னத்துரை.

பின்னர் செய்தியாளர்களிடம்  எம்எல்ஏ சின்னதுரை கூறியதாவது: இந்தப் பகுதி மக்களுக்கு மனைப்பட்டா கிடைப்பதற்கும், அவர்களுக்கான மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கும் தொகுதி அமைச்சரான சிவ.வீ.மெய்யநாதன் ஏற்பாடுகள் செய்து வருவதாக அறிகிறேன். இங்கு படிக்கும் மாணவர்களுக்கு உண்டு, உறைவிடப் பள்ளியை ஏற்படுத்துவதற்கும் அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

நிகழ்ச்சியில் எய்டு இந்தியா இணைச் செயலாளர் முனைவர் தாமோதரன், சாஜிடெக்(பி) சொலிசன்ஸ் லிமிடெட் சரவணன், சுரேஷ், எய்டு இந்திய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி.ராஜா மற்றும் நிர்வாகிகள் சாமிநாதன், சுப்ரமணியன், பிரியங்கா, ஊராட்சி மன்றத் தலைவர் புவனேஸ்வரி சின்னத்துரை, ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.ஆர்.ஜி.முருகேசன், ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜாக்கண்ணு, நாணயவியல் கழகத்தின் தலைவர் எஸ்.டி.பசீர் அலி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top