Close
செப்டம்பர் 19, 2024 10:51 மணி

கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு: சுகாதாரத் துறை அமைச்சர் பதவி விலக தமாகா வலியுறுத்தல்

ஈரோடு

தமாகா மாநில இளைஞரணித் தலைவர் எம்.யுவராஜ்.

தவறான சிகிச்சையால் கால்பந்து வீராங்கனை உயிரிழந்த சம்பவத்தை தடுக்கத்தவறிய  தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் பதவி விலக வேண்டுமென தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி  வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக தமாகா மாநில இளைஞரணித்தலைவர் எம். யுவராஜ் வெளியிட்ட அறிக்கை:

வியாசர்பாடியை சேர்ந்தவர் 17 வயது மாணவி பிரியா. இவர் கால்பந்து விளையாட்டில் கொண்ட ஈடுபாடு காரணமாக தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பல சாதனைகள் படைத்து வந்தார்.

சென்னை ராணிமேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த இவர், அங்கு கால்பந்து விளையாட்டில் பயிற்சியும் பெற்று வந்தார். சமீபத்தில் பயிற்சியின் போது மாணவிக்கு காலில் தசை பிடிப்பு ஏற்பட்டது. அவர், கடந்த மாதம் 20- ஆம் தேதி வலது கால் வலியால் அவதிப்பட்டுள்ளார்.

இதையடுத்து பெரியார் நகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடந்த தவறான அறுவை சிகிச்சை காரணமாக மறுநாளே கால் பெரிய அளவு வீங்கி இருக்கிறது. இதையடுத்து அவரது உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் கூறியதையடுத்து, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிரியாவுக்கு வலது கால் துண்டித்து அகற்றப்பட்டது. இந்நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கால்பந்து வீராங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையின் காரணமாக உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்திற்கு காரணமாக இந்த விளம்பர அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.  மேலும் பிரியாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்கப்பட வேண்டும்.

மருத்துவர்கள் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்பந்து வீராங்கனை பிரியாவின் குடும்பத்திற்கு தமிழக அரசால் அறிவிக்கப் பட்டுள்ள ரூ.10 லட்சம் இழப்பீடு போதுமானதல்ல. அவரது குடும்பத்திற்கு ரூ.2 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்.

அனைத்து துறைகளிலும் விளம்பரம் தேடிக் கொள்ளும் இந்த திறமையற்ற அரசு,  நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் குழந்தை பெற்றெடுத்த விஷயத்தில் காட்டிய அக்கறையை கால்பந்து வீராங்கனை பிரியாவில் மருத்துவ சிகிச்சை  விஷயத்தில் காட்டாதது ஏன்? போலி விளம்பரங்களை மட்டுமே மக்களுக்கு வாக்குறுதிகளாக அளித்து ஆட்சிக்கு வந்து, ஒவ்வொரு துறையிலும் ஒரு விளம்பரத்தை தேடிக் கொள்ளும் இந்த அரசின் அவல நிலை கேலி கூத்தாக உள்ளது.

இதில் மருத்துவத்துறையும் சேர்ந்துள்ளது தான் அவலத்தின் உச்சம். மக்களுக்கு விடியலை தருவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசின்   பொழுது எப்போது முடிவுக்கு வரும் என்று மக்கள் நினைக்கும் அளவுக்கு  திமுக அரசின் திறனற்ற செயல்பாடுகள் உள்ளன.

தமிழக அமைச்சர்கள் ஏற்கெனவே மருத்துவத் துறையில் போதிய மருந்து பற்றாக்குறை, ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுவதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்கள். சுகாதாரத் துறையில் தொடர்ந்து இது போன்ற தவறுகள் நடைபெற்று வருகிறது.

இதன் மூலம் பாதிப்பு அரசுக்கோ அல்லது அந்தத் துறையைச் சார்ந்த அமைச்சருக்கோ இல்லை. சாதாரண பொது மக்களுக்குத் தான் இந்த பாதிப்பு. எனவே சுகாதாரத் துறையை வழிநடத்த முடியாத சுகாதாரத்துறை அமைச்சர்  இதற்கு தார்மீக பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

மேலும் உயிரிழந்த சகோதரி பிரியாவின்  குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, இனி வரும் காலங்களில் இது போன்ற உயிரிழப்புகள் நடக்காமல் தடுக்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என தமாகா இளைஞரணி சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என யுவராஜ் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top