Close
நவம்பர் 22, 2024 9:56 காலை

அன்னூர் டிட்கோ தொழிற் பூங்காவுக்காக விவசாய நிலங்களை எடுக்க முயற்சி: தமாகா குற்றச்சாட்டு

ஈரோடு

தமாகா இளைஞரணி மாநிலத்தலைவர் எம். யுவராஜா

கோவை மாவட்டம், அன்னூரில் டிட்கோ தொழிற்பூங்கா அமைப்பதற்காக  அப்பாவி விவசாயிகளின்  நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்க திமுக அரசு திட்டமிடுவதாக தமாகா குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞரணித் தலைவர் எம். யுவராஜா வெளியிட்ட அறிக்கை:  திராவிட மாடல் அரசு தேர்தல் வாக்குறுதியாக விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் விளை நிலங்களை வேறு பயன் பாட்டிற்கு மாற்றுவதை தடுத்திடவும், புஞ்சை நிலங்க ளையும்,  தரிசு நிலங்களையும் தகுந்த விளைச்சல் நிலங்க ளாக மாற்றிட புதிய தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்த வும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று  கூறி ஆட்சியில் அமர்ந்தார்கள்.

சில நாட்களுக்கு முன்பு  சென்னைக்கு அருகே பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக 2300 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டார்கள். தற்பொழுது அதன் தொடர்ச்சியாக வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயலாக கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் தாலுகா சுற்று வட்டார கிராமங்களில் தொழிற்பூங்கா அமைக்க தமிழக அரசு முடிவு செய்து 3731 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த அரசாணை வெளியிட்டு ள்ளார்கள்.

மேலும், இன்று விவசாய நிலங்களை விடுத்து, தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமாக உள்ள தரிசு நிலங்கள் (1630 ஏக்கர்) மட்டும் தொழிற்பூங்கா அமைக்க கையகப்படுத்தப் படும்.

மேலும், எந்தவித கட்டாயமும் இன்றி, விவசாயிகள் மனமுவந்து கொடுக்க முன்வரும் நிலங்களுக்கு, திருப்திகரமான இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக அரசின் தொழிற்துறை தெரிவித்துள்ளது.

இப்படி சொல்லி விவசாயிகளை ஏமாற்றி படிப்படியாக அவர்கள் அனைத்தையும் கைப்பற்றி தொழிற்பூங்கா அமைக்கும் முயற்சியில் ஈடுபடுவதுதான் உள் நோக்கம் ஆகும்.

ஏற்கெனவே ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் அமைக்கப் பட்டுள்ள தொழிற் பூங்கா சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் மாசடைந்து ஈரோடு மாவட்டமே புற்றுநோயின் பிறப்பி டமாக திகழ்ந்து கொண்டிருக்கின்றது.

இந்தசூழ்நிலையில் புதிதாக மேலும் தொழிற் பூங்காக்கள் அமைக்கப்பட்டால் பவானி பாசனத்தால் பலனடையும் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு அப்பகுதி விவசாயிகள் விவசாயத்தை கைவிடும் சூழ்நிலை உருவாகும்.

தொழிற் பூங்காக்கள் அமைக்கப்பட்டால் பவானி ஆறு முழுவதும் மாசுபடும் சூழ்நிலை உருவாகும் இதன் காரண மாக கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் பெரும் பகுதிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பவானி ஆறு நோய் பரப்பு மையமாக மாறிவிடும்.

குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக நிறைவேற்றப்பட்டு கொண்டிருக்கும் அத்திக்கடவு அவிநாசி திட்டம் மூலம் மாசுபட்ட கழிவுநீரைத்தான் குளங்களில் நிரப்ப முடியும். இதன் மூலம் இத்திட்டத்தினுடைய நோக்கமே கேள்விக்குறியா கிவிடும்.

அன்னூர் சுற்று வட்டாரத்தில் உள்ள மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களான கால்நடை வளர்ப்பு, ஆடு, கோழி வளர்ப்பு, பால் உற்பத்தி உள்ளிட்ட தொழில்களை செய்து வருகின்றனர். கிணற்றுப் பாசனம் மூலமே, விவசாயம் செய்து வருகின்றனர்.

தொழில் பூங்கா அமைத்தால், விவசாயம் பாதிக்கும். அத்திக்கடவு – அவிநாசி நீர் செறிவூட்டல் பணி நடந்து வரும் நிலையில், தண்ணீர் பஞ்சம் நீங்கும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர்.  இச்சூழலில், தொழில் பூங்காவிற்காக விவசாய நிலங்கள் அதிகளவில் கையகப்படுத்தும் முயற்சி  அதிர்ச்சி அளிக்கிறது.

அதேபோல தொழில் பூங்காவினால் சுற்று வட்டாரத்தில் உள்ள நிலம், நீர், காற்று மாசு ஏற்படும். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே இந்த முயற்சியை கைவிட வேண்டும்.

விவசாயிகள் மட்டுமல்லாமல் விவசாயத்தை நம்பியுள்ள தொழிலாளர்களும் இருக்கின்றனர். தொழிற்சாலைகள் வந்தால் விவசாயத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் நம்பியுள்ள ஒரு லட்சம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும்.

கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும் என்பார்கள். ஆனால் ஆட்சியாளர்கள் கொங்கு மண்டலத்தையும் நோய் பரப்பும் மண்டலமாக மாற்ற திட்டமிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  மக்களுக்காகத்தான் திட்டங்களே தவிர, திட்டங்களுக்காக மக்கள் அல்ல என்பதை  ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆட்சியாளர்களின் இந்த செயலைப் பார்க்கும் போது விவசாய நிலங்களை எல்லாம் தொழில் பூங்காக்கள் என்ற பெயரில் தனியாருக்கு தாரை வார்த்து கொடுக்கும் செயலாக இருக்குமோ என்ற ஐயமும் அச்சம்  ஏற்படுகிறது.

மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை செயல்படுத்தாமல் மக்களுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்தினால் அதை தமிழ் மாநில காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கும். தற்போது திமுக அரசால் செயல்படுத்தப்பட உள்ள தொழிற்பூங்காக்கள் அப்பாவி விவசாயிகளைப் பாதிக்கும் திட்டமாகும்.

விவசாயிகளுக்கு மதிப்பளித்து உலகின் தலையாய தொழிலான உழவுத் தொழில் மேலோங்கும் வகையில் உழவர்கள் உயர்வடையும் வகையில் கோயம்புத்தூரில் தொழில் பூங்காக்கள் அமைக்கும் முடிவை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top