Close
நவம்பர் 22, 2024 5:43 காலை

புதுக்கோட்டையில் இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனம் அமைக்க திமுக எம்பி கோரிக்கை

புதுக்கோட்டை

மாநிலங்களவை திமுக உறுப்பினர் புதுக்கோட்டை எம்.எம். அப்துல்லா

புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றை அமைக்க வேண்டி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார்.

தலைநகர் டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்ற மாநிலங்களவை  திமுக  உறுப்பினர் புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

அதில் “ஒன்றிய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் 2006ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் கடந்த 2012 ஆம் ஆண்டில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களாக அறிவிக்கப்பட்டன.

மேலும், அவை அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான நாட்டின் முன்னணி நிறுவனங்களாக மேம்படுத்தப்பட்டன. இன்று வரை, நாட்டில் 7 இடங்களில் மட்டுமே இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளது என்பதனால் இது அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்கு போதுமானதாக இல்லை.

அதேபோல் தமிழ்நாட்டின் மையப் பகுதியில் அமைந்துள்ள மாவட்டங்களில் ஒன்றான புதுக்கோட்டையில் அத்தகைய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் எதுவும் இதுவரை அமைக்கப்படவில்லை. எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுபோன்றதொரு கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றை இப்பகுதியில் நிறுவுவதன் மூலம் இப்பகுதியை மேம்படுத்த மிகவும் உதவும். ஒன்றிய அரசிடம் இதை அமைக்க போதுமான நிலமும் உள்ளது.

என்ஐடி திருச்சியுடன் இணைந்து அறிவியல் துறையில் நாட்டின் வளர்ச்சியை விரைவாக முன்னேற்ற முடியும். எனவே, விரைவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றினை திறக்க வேண்டும்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு புதுக்கோட்டை சமஸ்தானம்தான் முதன்முதலில் நம்பிக்கையோடு இந்தியாவுடன் இணைந்தது. இருப்பினும் இதுவரையிலும் சாதாரண திட்டங்களைக் கூட ஒன்றிய அரசிடம் இருந்து பெறாமல் நாங்கள் பின் தங்கியுள்ளோம். இந்தியாவோடு இணைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும் இதை நான் கேட்கிறேன். எனவே அவசியம் ஒன்றிய அரசு எங்கள் மாவட்டத்திற்கு இதைத் தர வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என வலியுறுத்தினார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top