Close
நவம்பர் 25, 2024 4:12 காலை

ஜனநாயகப் போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பு… காவல்துறைக்கு சிபிஎம் கட்சி கண்டனம்

புதுக்கோட்டை

சிபிஎம் கட்சி கண்டனம்

அரசியல் சாசன சட்டம் வழங்கியுள்ள ஜனநாயகப் போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கும் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக்குழு கூட்டம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சண்முகம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஐ.வி.நாகராஜன், எம்.சின்னதுரை எம்எல்ஏ.. ஆகியோர் பேசினர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை விளக்கி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு.

பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்து சொல்லும் உரிமை போன்றவைகள் அரசியல் சாசன சட்டம் பொதுமக்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள். இதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு ஜனநாயக இயக்கங்கள் பொதுமக்களிடம் தங்களின் கருத்துகளை எடுத்துச் செல்வதற்கும், அரசுகளின் கவனத்தை ஈர்பப்தற்கும் ஆர்ப்பாட்டம், தர்ணா, உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களை நடத்துவதும் அரசியல் சாசன சட்டம் வழங்கியுள்ள உரிமைகள் ஆகும்.

புதுக்கோட்டை நகரில் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், சின்னப்பா பூங்கா, திலகர் திடல் ஆகிய பகுதிகளை காவல்துறை மேற்படி போராட்டங்களுக்கு அனுமதித்து வந்தது. அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் மேற்படி இடங்களுக்கு விண்ணப்பிக்கும் போது காவல்துறை அனுமதியும், பாதுகாப்பும் வழங்கி வந்தனர்.

ஆனால், சமீப காலமாக திலகர்திடலைத் தவிர மற்ற இடங்களில் அனுமதி மறுத்து காவல்துறையினர் அராஜகமான முறையில் அடம்பிட்டித்து வருகின்றனர். போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும் எந்தவித இடையூறும் இல்லாமலேயே போராட்டங்கள் கடந்த காலங்களில் நடந்துவந்தது. சட்டம் ஒழுங்கு கெடும் வகையில் இதுநாள் வரை அங்கு எந்தவிதமான சம்பவங்களும் நடந்ததில்லை. ஆனால், தற்பொழுது திலகர் திடலைத்தவிர மற்ற பகுதிகளில் அனுமதிக்க மாட்டோம் என்று சொல்வதன் மர்மம் என்ன.

திலகர்திடல் என்பது ஆட்கள் நடமாட்டமே இல்லாத பகுதி. அந்த இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதால் எந்தப் பயனும் இருக்கப்போவதில்லை. சமீப காலமாக புதுக்கோட்டை மாவட்ட காவல் துறையின் செயல்பாடு தமிழக அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் நோக்கத்திலேயே உள்ளதாக நாங்கள் கருதுகிறோம். காவல் துறையினரின் இத்தகைய நடவடிக்கைகள் திராவிட மாடலுக்கு முற்றிலும் எதிரான செயலாகும்.

புதிய பேருந்து நிலையம், அண்ணாசிலை, சி;னனப்பா பூங்கா ஆகிய பகுதிகளில் ஜனநாயகப் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்க முடியாது என காவல் துறையின் செயல்பாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இது ஜனநாயகத்தின் குரல் வளையை நசுக்கும் செயலாகும்.

எனவே, தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் இதில் உடனடியாக தலையிட வேண்டும். மேற்படி இடங்களில் அரசியல் கட்சிகள் மற்றும் ஜனநயாக இயக்கங்கள் நடத்தும் ஜனனநாயகப் போராட்டத்திற்கு அனுமதி அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு  அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top