Close
செப்டம்பர் 20, 2024 1:32 காலை

புதுக்கோட்டை முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமரன் 11 -வது ஆண்டு நினைவு (ஏப்ரல் 1) நாள்

புதுக்கோட்டை

மறைந்த புதுகை எம்எல்ஏ முத்துக்குமரன்

2012 ஏப்ரல் முதல் நாள், இலங்கை அதிபர் மரணம் என்ற குறுஞ்செய்தி செல்போன்களுக்கு வந்தது. பின்னர் அது முட்டாள்கள் தினம் என்பதால் அனுப்பப்பட்ட செய்தி என்று தெரிய வந்தது.

அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் புதுக்கோட்டை எம்எல்ஏ எஸ்.பி.முத்துக்குமரன் மரணம் என்ற செய்தியும் பரவியது. இதுவும் பொய் செய்தி தானோ என அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தபோது அவர் சாலை விபத்தில் அகால மரணம் அடைந்ததுவிட்டார் என்பது உறுதி ஆனது. அந்தச் செய்தி யைக் கேட்ட அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உள்பட பலரும் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை.

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமத்தில் சி.பழனிவேல் – முல்லையம்மாள் தம்பதியருக்கு ஒரே மகனாக (16-6-1968) பிறந்த முத்துக்குமரன் புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர்.

பள்ளிப் பருவத்திலேயே பொதுவுடைமை இயக்கத்தின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த முத்துக்குமரன் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தில் சேர்ந்து, பல ஆண்டு காலம் செயல்பட்டார்.

அனைத்திந்திய மாணவர் பெரு மன்றத்தின் தமிழ் மாநிலத் தலைவராகவும் பின்னர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளராகவும் பொறுப்பு வகித்த முத்துக்குமரன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் பொறுப்பை ஏற்றுச் செயலாற்றி வந்த வேளையில் கடந்த ஆண்டு (2011) நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் புதுக்கோட்டைத் தொகுதியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தலில் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்த வேளையில் இவரது தாயார் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டப் பேரவையில், பொதுவாக ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில், தனது புதுக்கோட்டைத் தொகுதியைப்பற்றிப் பேசிய தோடு நிற்காமல், எடுத்த எடுப்பிலேயே தமிழகத்தில் லோக் ஆயுக்த, அரசு அறிவித்த புதுவாழ்வுத் திட்டத்தைச் செயல்படுத்துவது, வேலைவாய்ப்பு, மாநில நதிகளை இணைத்தல், வீட்டுமனை வழங்கும் திட்டம்.

அரசுத் திட்டங்கள் கிராமங்களைச் சென்றடைவதற்கு கிராமங்களை ஒருங்கிணைக்கும் திட்டம் என்று மாநில அளவிலான மக்கள் பிரச்னைகளிலும் ஈடுபாட்டுடன் கேள்விகளை எழுப்பி , தான் ஒரு கம்யூனிஸ்ட் என்று மெய்ப்பித்தார் முத்துக்குமரன்.

எல்லாவற்றுக்கும் மேலாக, இலங்கைத் தமிழர்கள் உரிமைப் பிரச்னையில் அக்கறை கொண்டு, தமிழ் வரலாற்றில் முதன்முறையாக ஒரு சிறப்புமிகு தீர்மானம் கொண்டு வந்தமைக்காக, தமிழக முதல்வருக்கும், தீர்மானத்துக்கு ஆதரவு கொடுத்த கட்சிகளுக்கும் பேரவையில் நன்றி, அந்த நன்றியையே ஆக்கபூர்வமான கருத்து நடவடிக்கையாக வெளிப்படுத்திய பெருமைக்குரியவர்.

தொகுதிக்குள் கட்சி அடையாளத்துக்கு அப்பால், எந்த ஒரு குடிமகனுடைய கோரிக்கையையும் கனிவுடன் கேட்டு ஆவன செய்யும் முத்துக்குமரன், சட்டப் பேரவையில் பண்புடன் நடந்து, நற்பெயரெடுத்தவர்.

சட்டப்பேரவையில் மக்கள் பிரச்னையைப் பற்றி அவையில் கேள்வி கேட்கும் போது, கட்டுரையாகக் கேட்காதீர்கள்; மாறாக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் மாண்புமிகு எஸ்.பி.முத்துக்குமரனைப் போல நறுக் கென்று ஒரே வரியில் கேளுங்கள் என்று சட்டப் பேரவைத் தலைவர் டி.ஜெயக்குமார் அவையில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

சுமார் 11 மாதங்களே பணியாற்றினாலும், அந்த ஆண்டின் சட்டப்பேரவை கூட்டத் தொடர்களில் (ஆயிரத்துக்கும் மேல்) அதிக கேள்விகள் எழுப்பிய உறுப்பினர் என்ற சாதனையை செய்தார்.

முத்துக்குமரன் விபத்தில் காலமான ஞாயிற்றுக்கிழமை( 01-04-2012 )அன்றும் மறுநாள் திங்கள்கிழமையும் (02-04-2012) கம்யூனிஸ்ட் கட்சியினர் மட்டுமின்றி, ஏராளமான பொது மக்கள் திரண்டு வந்து தங்கள் குடும்ப உறுப்பினரை இழந்தது போல அவரது இறுதிச்சடங்கில் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் நிற்பவர் யார் என்ற பாடல் வரிக்கு இலக்கணமாகத் திகழ்பவர் தோழர் முத்துக்குமரன் என்றால் அது மிகையில்லை. அவர் மறைந்து 11 ஆண்டுகள் கடந்து விட்டாலும் அவர் நினைவு மக்களை விட்டு அகலாது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top