புதுக்கோட்டையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் நூற்றுக்கணக்கானோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மத்திய பாஜக அரசின் ராகுல்காந்தியின் மீதான அரசியல் பழிவாங்கும் போக்கை கண்டித்து புதுக்கோட்டையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 126 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
இந்திய ஒற்றுமை பயணத்தின் மூலம் மக்களின் பேராதரவை பெற்று, எதிர்க்கட்சிகளின் உரிமைக் குரலாக ஒலித்த தலைவர் ராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதன் மூலம் உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா கடுமையான அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறது.
தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கும், அதானிக்கும் இருக்கிற உறவு குறித்து குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறி வருகிறார். பிரதமர் மோடி, தமது நண்பர் கவுதம் அதானிக்கு பொருளாதார ரீதியாக ஆதாயம் அடைவதற்கு பல்வேறு உதவிகளை செய்ததை மக்களவையில் தலைவர் ராகுல் காந்தி ஆதாரத்துடன் பேசியதை பாஜக-வினரால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
அதனால் அவரது உரையை அவைக்குறிப்பில் இருந்து நீக்குகிற ஜனநாயக விரோத செயலை செய்திருக்கிறார்கள். தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட மறுநாளே அவசர அவசரமாக அவரது மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது.
இத்தகைய ஜனநாயக விரோத பாசிச நடவடிக்கைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் மட்டுமல்ல, கட்சி எல்லைகளை கடந்து கோடிக்கணக்கான மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். தலைவர் ராகுல் காந்திக்கு இழைக்கப்பட்ட அநீதியின் மூலம் இந்திய ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் பாஜக-வின் சர்வாதிகார நடவடிக்கைக்கு எதிராக தலைவர் ராகுல் காந்தியின் கரங்களை வலுப்படுத்து கிற வகையில், மாவட்ட தலைநகரங்களில் ரயில் மறியல் போராட்டத்தை நடத்தும்படி கட்சித் தலைமை அறிவித்திருந்தது.
இதையொட்டி, புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சனிக்கிழமை ரயில் நிலையத்தில் தெற்கு மாவட்டத் தலைவர் ராம.சுப்புராம், வடக்கு மாவட்டத்தலைவர் வி. முருகேசன் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கா னோர் திரண்டனர்.
மறியல் போராட்டத்திற்கு தயாராக இருந்த நிலையில், ரயில் நிலையத்திலிருந்து 100 அடி தொலைவுக்கு முன்னதாகவே தடுப்புகளை காவல்துறையினர் அமைத்து காங்கிரஸ் கட்சியினரை போராட்டத்திற்கு உள்ளே அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர்.
இதனை அடுத்து காவல்துறையிடம் காங்கிரஸ் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு காவல்துறை அமைக்கப்பட்ட தடுப்பணைகளை கீழே தள்ளிவிட்டு ரயில் நிலையம் உள்ளே சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர் .இதனை அடுத்து போராட்டத்தை ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதில், மாநில பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஏ. சந்திரசேகரன், மாநில துணைத்தலைவர் ஏ. இப்ராஹிம்பாபு, நகரத்தலைவர் பாரூக், நகர்மன்ற உறுப்பினர் ராஜாமுகமது, நிர்வாகிகள் அரிமளம் இப்ராஹிம், செம்பைமணி,குட்லக் அப்துல்லா, சூர்யாபழனியப்பன், கண்ணன், சித்ராக்கண்ணு, முத்துக்காடு பழனிசாமி, சரண், சகாயராஜ், தர்மசெல்வராஜ், முத்துக்குமார், சேரனூர் தங்கவேல், முருகானந்தம், சுப்ஜி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.