கர்நாடக மாநிலத்திவ் பாஜகவின் தோல்வி பிரதமர் மோடிக்கு கிடைத்த தோல்வி என்றார் திருச்சிராப்பள்ளி தொகுதி காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்ற திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கறம்பக்குடியில் மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் ராமதாஸ் இல்லத்துக்கு நேரில் சென்று அவரது உருவப்படத் திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் எம்பி திருநாவுக்கரசர் மேலும் கூறியதாவது: கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். இதற்கு காரணம் 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பாஜக தான் மக்களுக்கு எந்த ஒரு நன்மையும் செய்யாமல் ஊழல் அரசாக விளங்கியது.
தேர்தல் பிரச்சார நேரங்களில், மக்களிடத்தில் 40% ஊழல் அரசு என்று சொன்னால், அதைக்கேட்டு மக்கள் சிரிக்கக் கூடிய அளவிற்கு, ஒருமோசமான அரசாங்கத்தை அங்கு நடத்திக் கொண்டிருந்தார்கள்.
விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம்,கொரோனா போன்ற மக்கள் பாதிப்புக்குள்ளாகிய சமயங்களில் எந்த நன்மையும் உதவியும் செய்யவில்லை என்ற மனக்குறையும், பல்வேறு கிராமப்புறங்களில் சாலை வசதி, குடிநீர் வசதி போன்ற பல்வேறுவிதமான குறைபாடுகள் இருந்தது. இதுவே காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கு வழிவகை செய்தது.
இது கர்நாடக மாநில பாஜகவுக்கு கிடைத்த தோல்வியல்ல பிரதமர் மோடிக்கு கிடைத்த தோல்வி என்பதுதான் உண்மை என்று கூறினார்.
கறம்பக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறையால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். இது சம்பந்தமாக சுகாதாரத்துறை அமைச்சரிடம் கூறி விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் காலிபணியிடங்கள் உடனடியாக நிரப்பப்புவதற்கும் முயற்சி செய்வதாகவும் பொதுமக்களிடம் எம்பி திருநாவுக்கரசர் உறுதி அளித்தார்.