கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா, துணை முதலமைச்சராக சிவக்குமார் பொறுப்பேற்பார் என காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முதலமைச்சர் பிரச்னை ஓய்துள்ள நிலையில், தற்போது அமைச்சர்கள் யார் என்று தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.பெங்களூரில் நாளை மறுநாள்(மே.21) பதவி ஏற்பு விழா நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 224 சட்டசபை தொகுதிகளில், காங்கிரஸ் 135 இடங்களில் வெற்றி பெற்றது. தனிப்பெரும்பான்மை பெற்ற காங்கிரஸ் கட்சியில் முதலமைச்சர் பதவியை பிடிப்பதில் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாருக்கு இடையே கடும் போட்டி நிலவியதால் முதலமைச்சர் பதவி யாருக்கு என்பதில் இழுபறி நீடித்து வந்தது. சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவரும் டெல்லியில் முகாமிட்டு மல்லிகார்ஜூனா கார்கே உடன் தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டனர். கடந்த 48 மணி நேரமாக மாறி மாறி ஆலோசனைகள் செய்யப்பட்டன.
முதல்வராக சித்தராமையா..
இந்த நிலையில் முதலமைச்சர் யார் என்ற இழுப்பறி முடிவுக்கு வந்துள்ளது. கர்நாடக முதல்வராக சித்தராமையா நியமிக்கப்படுகிறார் என காங்கிரஸ் மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ரன்தீப் சுர்ஜேவாலா மற்றும் கே.சி.வேணுகோபால் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கர்நாடக முதலமைச்சராக சித்தராமையாக நியமிக்கப் படுகிறார். ஒரே ஒரு துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் தேர்வாகி உள்ளார். பார்லிமெண்ட் தேர்தல் வரை கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக டி.கே.சிவக்குமார் தொடருவார். ஒருமித்த கருத்துடன் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 7.30 மணியளவில் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தில் முதலமைச்சர் தேர்வு செய்யப்பட உள்ளார்.
பெங்களூருவில் நாளை மறுநாள் (20 ந்தேதி) பகல் 12.30 மணி அளவில் பதவியேற்பு விழா நடைபெறும். அப்போது சில அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொள்வார்கள்.தகுதிவாய்ந்த பல தலைவர்கள் உள்ளதால், முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டது என தெரிவித்தார்.
கொடுக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டேன்
இது தொடர்பாக டி.கே.சிவக்குமார் கூறுகையில், “காங்கிரஸ் கட்சி கர்நாடக மக்களுக்கு கடமைப்பட்டுள்ளது. மேலும், நாடு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் காந்தி குடும்பத்தினரின் முடிவுக்கு நான் கட்டுப்பட வேண்டிய தார்மீக பொறுப்பு உள்ளது. அதனால் நான் இந்த பார்முலாவுக்கு ஒப்புக் கொண்டேன்.
சித்தராமையா முதல்வராக இருந்தால்தான் என்ன? பனிக்கட்டி ஒரு கட்டத்தில் உடைந்துதானே ஆக வேண்டும். அதனால் பார்முலாவை ஏற்றுக் கொண்டேன். கட்சியின் உச்ச இலக்கு மக்களின் நலன். கர்நாடக மக்களின் நலனுக்காக, நான் எனக்கு கொடுக்கப்பட்டதை ஏற்றுக் கொண்டேன்” என்றார்.
இதற்கிடையில் டி.கே.சிவகுமாரின் சகோதரர் டி.கே.சுரேஷ் கூறுகையில், “நான் இவ்விவகாரத்தில் முழுமையாக மகிழ்ச்சி கொள்ளவில்லை. ஆனால் கடமையைத் தட்டிக் கழிக்க முடியாது. அதனால் சிவக்குமார் ஏற்றுக் கொண்டார். காலம் பதில் சொல்லும். டி.கே.சிவக்குமாருக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என நினைத்தேன் ஆனால் கிடைக்கவில்லை. அதில் எனக்கு வருத்தமே” என்றார்.
சோனியா தலையிட்டதால் முடிவுக்க வந்த விவகாரம்
இந்த விவகாரத்தில் சோனியா காந்தி தலையிட்டு இருக்கிறார். அவர் பேசிய பின்பே டி.கே. சிவக்குமார் துணை முதல்வராக இருக்க ஒப்புக்கொண்டுள்ளார். அவர் கொடுத்த சில வாக்குறுதிகளை டி.கே. சிவக்குமார் ஏற்றுக்கொண்டார்.
அதோடு அமைச்சரவையில் டி.கே.சிவக்குமாரின் ஆதரவாளர்களுக்கு நிதித்துறை உட்பட 4 பெரிய துறைகள் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ராகுல், கார்கே ஆகியோர் பேசியும் இறங்கி வராத டி.கே. சிவக்குமார் சோனியா காந்தி பேசிய பின்பே இறங்கி வந்துள்ளார் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. 10 புதுமுகங்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பளிக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பா?
பதவியேற்பு விழாவிற்கு எதிர்க்கட்சித் தலைவர்களை அழைக்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சித் தலைவர்களும் பாரதீய ஜனதா அல்லாத மாநில முதல்வர்களும் பங்கேற்பார்கள் என்றும் தெரிகிறது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது டுவிட்டர் பதிவில், ‘கர்னாடக மக்களின் நலனுக்கும் முன்னேற்றத்திற்கும் சமூக நீதியை ஏற்படுத்தவும் காங்கிரஸ் உறுதி எடுத்துள்ளது. 6.5 கோடி கன்னடர்களுக்கு வாக்குறுதிய ளிக்கப்பட்ட 5 உத்தரவாதங்களை நாங்கள் நிறைவேற்று வோம்’ என்று பதிவிட்டு சித்தராமையா, டி.கே.சிவகுமாருடன் கைகோர்த்த புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.