முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழாவைமுன்னிச்சு பின்னி மில் மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது
முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழாவினையொட்டி சென்னை புளியந்தோப்பு பின்னி மில் மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவினை ஓராண்டுக்கு சிறப்பாகக் கொண்டாடுவது என திமுக தலைமை முடிவு செய்துள்ளது. மேலும் தமிழக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு தொடர் நிகழ்ச்சிகளுக்கு திமுகவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். நூற்றாண்டு தொடக்க விழா இன்று (சனிக்கிழமை) மாலை ஆறு மணி அளவில் புளியந்தோப்பு பின்னி மில் மைதானத் தில் நடைபெற உள்ளது.
இதற்கான பணிகளில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தொடர்ந்து இரவு பகலாக வேலை செய்து வருகின்றனர்.
100 அடி அகலம் கொண்ட பிரதான மேடை கலைநயத்துடன் கோட்டை வடிவில் அமைக்கப்பட்டு வருகிறது.
அதன் அருகில் இசைக் கச்சேரி நடத்துவதற்காக மற்றொரு சிறிய மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. விழா நடைபெற மைதானம் நான்கு புறமும் சுற்றுச் சுவர்கள் உள்ளது. இந்த சுவர்களில் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப் பட்ட முக்கிய திட்டங்கள்,
பல்வேறு முக்கிய மாநில தேசிய அளவிலான அரசியல் தலைவர்களுடன் உரையாடும் காட்சிகள் அடங்கிய பதாகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
நுழைவு பகுதியில் சுமார் 100 அடி உயரம் கொண்ட கம்பங்களில் பெரிய அளவிலான திமுக கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.
தொண்டர்கள், தலைவர்கள் அமர்வதற்காக பகுதிகள் பிரிக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 50 ஆயிரம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள் ளன.
விழாவிற்கான ஏற்பாடுகளை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் திமுக முன்னணி தலைவர்கள் செய்து வருகின்றனர். தொடக்கவிழா நிகழ்ச்சியில் சுமார் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாக திமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
கூட்டத்தில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான பி.கே.சேகர்பாபு வரவேற்புரை நிகழ்த்துகிறார்.
பொதுச்செயலாளர், அமைச்சர் துரைமுருகன் தலைமை வகிக்கிறார். பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர், அமைச்சர் கே.என்.நேரு மற்றும் துணைப் பொதுச் செயலாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர்.
கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை நிகழ்த்துகிறார்.
கூட்டணி கட்சி தலைவர்கள் கே.எஸ்.அழகிரி, தி.க.தலைவர் கி வீரமணி, வைகோ, கே.பாலகிருஷ்ணன், இரா.முத்தரசன், தொல்.திருமாவளவன, ஈ. ஆர் ஈஸ்வரன், கே.எம். காதர் மொய்தீன், எம்.எச். ஜவாஹிருல்லா, தி. வேல்முருகன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். திருவிக நகர் வடக்கு பகுதி செயலாளர் செ. தமிழ்வேந்தன் நன்றி கூறுகிறார்.