Close
செப்டம்பர் 20, 2024 4:07 காலை

62 குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா  எம். சின்னதுரை எம்எல்ஏ வழங்கல்

புதுக்கோட்டை

பயனாளிகளுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்குகிறார், கந்தர்வகோட்டை எம்எல்ஏ - சின்னத்துரை

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வீட்டுமனைப் பட்டா கோரி கடந்த மே 30 ஆம் தேதி  நடத்தப்பட்ட போராட்டத்தின் விளைவாக,  62 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள்  வழங்கப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்  எம். சின்னதுரை தலைமையில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்ட போராட்டம் கடந்த மே 30 -ஆம் தேதி நடைபெற்றது.
பல்வேறு வகையான புறம்போக்குகளில் ஏழை, எளிய மக்கள் நீண்டகாலமாக வசித்து வரும் வீட்டுமனைகளுக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும் என அந்தப் போராட்டத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
அந்தப் போராட்டத்தின் விளைவாக, கந்தர்வகோட்டை மருத்துவர் நகரில் வசித்து வரும் 62 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப்  பட்டாவை வருவாய்த் துறை அலுவலர்கள் தயார் செய்தனர். அவற்றை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் . எம்.சின்னதுரை செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
இந்நிகழ்வில் கந்தர்வகோட்டை வட்டாட்சியர் காமராஜ் கந்தர்வகோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்ச்செல்வி, ஆத்மா கமிட்டி சேர்மன் நியூஸ் ராஜேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ. ராமையன், ஒன்றியச் செயலாளர் வி. ரத்தினவேல் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
ஏற்கெனவே இதே போராட்டத்தின் விளைவாக 50-க்கும் மேற்பட்டோருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் முயற்சியில் நடத்தப்பட்ட போராட்டத்தின் விளைவாக பட்டாக்கள் வழங்கப்பட்டது குறித்து அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top