ராகுல்காந்தியின் நடைபயணமும் அண்ணாமலை மேற்கொள்ளும் நடைப்பயணத்தையும் ஒப்பீடு செய்வது தவறு என காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் தெரிவித்தார்
புதுக்கோட்டையில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:
ஆளுநரின் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஆட்சியே போனாலும் கவலைப்பட மாட்டோம் எனக் கூறியிருப்பது அவரது உறுதித்தன்மையைச் சொல்வதற்காக கூறியிருக்கிறார்.
இதைத் தவிர, ஆட்சியைக் கலைப்பார்கள் எனத்தெரிந்துதான் அவ்வாறு சொல்லியிருக்கிறார் என்றெல்லாம் யோசிக்க வேண்டிய அவசியமில்லை.
முதலமைச்சர் விவரமாக அனுப்பியிருக்கும் கடிதம் குறித்து குடியரசுத் தலைவரும், மத்திய அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தில், எல்லோருக்கும் வழங்க வேண்டும் என்பது ஆசையாக இருந்தாலும், ஏழை, எளியவர்களுக்கு அந்தப் பணம் போய்ச்சேர வேண்டும் என்பதுதானே அடிப்படை.
இப்போது அரசிடம் இருக்கும் நிதியை வைத்து ஒரு கோடிப் பேருக்கு கொடுத்தால், பிறகு நிதி நிலை சரியான பிறகு எல்லோருக்கும் கொடுத்தால் சந்தோஷம். அரசு நிதிநிலையை கவனத்தில் கொண்டு இருக்கும் நிதியை எல்லாவகையான நலத் திட்டங்களுக்கும் பிரித்துதான் கொடுக்க முடியும்.
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடகத்தில் யார் ஆளுகிறார்கள் என்பது பிரச்னை இல்லை. தமிழ்நாட்டின் உரிமைக்காக தபிழ்நாடு காங்கிரஸ் அத்திட்டத்தை உறுதியாக எதிர்க்கும். கடந்த 2 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி வழங்கப்படவில்லை. அதற்கு கொரோனா தாக்கம் காரணமாகக்கூறப்பட்டது.
அதனால் ரூ. 10 கோடி நிதி கிடைக்காமல் போனது. இந்த ஆண்டுக்கான நிதி ரூ. 5 கோடி கிடைத்தால் தொகுதியின் வளர்ச்சிக்கு செய்யலாம். அதற்காக காத்திருக்கிறோம். ராகுல்காந்திதான் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர். இதை தேர்தலுக்கு முன் பலரும் தேர்தலுக்கு பின் சிலரும் ஒப்புக்கொள்வார்கள்,
ராகுல் காந்தியின் பாதயாத்திரையுடன் அண்ணாமலையின் நடைப்பயணத்தை எப்படி ஒப்பிடமுடியும். அது வேறு இது வேறு என்றார் திருநாவுக்கரசர்.
இதில், வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி. முருகேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.