பொதுத்துறை நிறுவனம் சார்பில் மாநகராட்சி மருத்துவம னைக்கு ரூ. 25 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்காக மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான ஐ.ஓ.சி. எல்.அன்.ஜி முனையம் சார்பில் கூட்டாண்மை சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் நிதி உதவியை அளித்துள்ளது என வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி தெரிவித்துள்ளார். .
இது குறித்து கலாநிதி வீராசாமி வியாழக்கிழமை வெளிட்ட தகவல்:திருவொற்றியூரில் மாநகராட்சி பல்நோக்கு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு மகப்பேறு, பச்சிளம் குழந்தைக ளுக்கான சிகிச்சை மற்றும் டயாலிசிஸ் சேவைகள் அளிக்கப் பட்டு வருகின்றன.
இம்மருத்துவமனைக்குத் தேவையான அதிநவீன கருவிகளை வழங்குவதற்கு நிதி உதவி அளிக்குமாறு எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இயங்கி வரும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஐ.ஓ.சி. எல்.அன்.ஜி. முனையம் நிறுவனத்திடம் கோரிக்கை வடசென்னை மக்களவை உறுப்பினர் என்ற முறையில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனையடுத்து நிறுவனத்தின் கூட்டாண்மை சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் ரூ. 25 லட்சத்திற்கான காசோலையை மக்களவை உறுப்பினரிடம் அண்மையில் வழங்கினர்.
சென்னை மாநகராட்சியின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் இந்த நிதி சேர்க்கப்பட்டு மாநகராட்சி சார்பில் ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ. 50 லட்சம் செலவில் மருத்துவச் சிகிச்சைக்கான புதிய உபகரணங்கள் விரைவில் வாங்கப்படும்.
இதனால் இம்மருத்துவமனையின் தரம் உயர்த்தப்பட்டு பொதுமக்கள் பெருமளவில் பயன்பெறுவார்கள். நிதி உதவியை விரைவாக வழங்கிய ஐஓசி எல்.என்.ஜி. முனைய அதிகாரிகளுக்கு மக்களவை உறுப்பினர் நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்தார் என அவர் தெரிவித்துள்ளார்.