அநீதி நடக்கும் போது அமைதியாக இருப்பதும் அநீதிதான் என்றார் சிபிஎம் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் செய்தியா ளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:
மணிப்பூர் மாநிலத்தில் நடந்துகொண்டிருக்கின்ற சம்பவம் மனித நாகரிக உலகத்தையே கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது. இரண்டு பெண்களை நிர்வாணமாக அழைத்துச் சென்று அந்த மனித மிருகங்கள் செய்திருக்கின்ற காரியத் தால் ஒட்டுமொத்த இந்தியாவே தலைகுனிந்து நிற்கிறது.
இணைச் சேவை முடக்கப்பட்டதால் சம்பவம் நடந்து இரண்டரை மாதங்கள் கழித்தே இச்சம்பவம் வெளி உலகிற்குத் தெரிய வந்துள்ளது. ஆனால், நடந்துள்ள சம்பவம் அந்த மாநில முதல்வர், பிரதமார், உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு முன்னதாகவே தெரியும். மே 18 அன்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. பிறகு எப்படி இவர்களுக்குத் தெரியாமல் இருக்கும்.
ஒன்னரை மாதத்திற்கு முன்பாக உள்துறை அமைச்சர் அந்த மாநிலத்திற்கு சென்றுள்ளார். ஆனால், இதுகுறித்து அவர் ஏன் வாய் திறக்கவில்லை. அந்த மாநில முதல்வர் ஏன் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை. நடவடிக்கை எடுக்காத மாநில முதல்வர் மீது ஒன்றிய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. இதில் முதல் குற்றவாளிகள் அம்மாநில முதல்வர், ஒன்றிய உள்துறை அமைச்சர், பிரதமர் ஆகியோர்தான் என்று குற்றம் சாட்டுகிறோம்.
தங்களது இனவாத அரசியலுக்காக மூன்று மாதங்களாக மணிப்பூர் மாநிலம் பற்றி எரிந்த போதும் அமைதி காத்தது இவர்கள்தான். அநீதி நடக்கும் போது அமைதியாக இருப்பதும் அநீதிதான். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் நாட்டு மக்கள் இவர்களுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள் என்றார்.