தமிழக அரசுக்கு எதிராக போட்டி அரசாங்கம் ஆளுநர் நடத்துகிறார் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்.
ஈரோட்டில் புதன்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நாடு முழுவதும் விலைவாசி கடுமையாக உயர்ந்து வருவதைப் பற்றி மத்திய அரசுக்கு துளியும் கவலை இல்லை.
ஒரு பேரல் பெட்ரோல், 112 டாலராக இருந்தபோது உள்ள விலையே தற்போதும் நீடித்து வருகிறது. ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் போர் நடைபெறும் போது கூட ஒரு பேரல் பெட்ரோல் 77 டாலருக்கு கிடைக்கிறது. பெட்ரோல் டீசல் இன் விலை குறைந்தபாடில்லை.இதனால்தான், நாளுக்கு நாள் விலைவாசி உயர்கிறது.
மத்தியில் பா.ஜ.க, ஆட்சிக்கு வந்து, 10 ஆண்டாகியும் தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி, ஆண்டுக்கு, 2 கோடி பேருக்கு வேலை வழங்கி இருந்தால், 10 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும். ஊழல், குடும்ப அரசியல் குறித்து தான் கடந்த, 10 ஆண்டு களாக பேசி வருகிறார்.அவரால் அமல் படுத்தப்பட்ட திட்டங்கள் பற்றி பேச இயலாதவராக உள்ளார்.
மத்திய தணிக்கை குழுவின் அறிக்கையின் தகவலின்படி, மத்திய அரசு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஊழல் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஊழல் போக்கை கண்டித்து செப்., 12- ல் அனைத்து மாவட்ட தலைநகரிலும், 13, 14 -ல் நகர, ஒன்றியங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
ஆளுநர் ரவி, தமிழக அரசுக்கு எதிராக அரசியல் செய்து வருகிறார். டி.என்.பி.எஸ்.சி., தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் நியமனத்தை திருப்பி அனுப்புகிறார். டி.என்.பி.எஸ்.சி.,யில் தலைவர் நியமிக்கப்பட்டால்தான், தகுதியான நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க முடியும்.
ஆளுநர் குறித்து குடியரசு தலைவரிடம் தமிழக எம்.பி.,க்கள் புகார் மனு வழங்கிய பின்னரும், எந்த நடவடிக்கையும் இல்லை. இங்கு ஆளுநர் தனியே போட்டி அரசாங்கம் நடத்துகிறார்.
ஆளுநரை கண்டித்து பல்வேறு கட்சிகளும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. விரைவில் மக்களே ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்துவார்கள். இலங்கைக்கு இந்தியாவும், தமிழகமும் தொடர்ந்து உதவுகிறது.
ஆனால், இலங்கை கடற்படையும், இலங்கை கடற்கொள்ளை யர்களும், நம் தமிழக மீனவர்களை தாக்குவதும், அவர்களது படகுகள் உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களை கொள்ளை அடிப்பதை மத்திய அரசு தடுத்து நிறுத்தி வேண்டும்.
நீட் தேர்வை காங்., அரசு கொண்டு வந்தாலும், கச்சத்தீவை இந்திரா காந்தி இலங்கைக்கு வழங்கி இருந்தாலும், மாநிலங்களின் தேவையை அறிந்து, தற்போதைய மத்திய அரசு பெற்றுத்தர வேண்டியது கடமை என்பதை உணர வேண்டும்.
அ.தி.மு.க. மாநாட்டில், நீட் தேர்வு விலக்கு பெற தி.மு.க., அரசு முயலவில்லை என தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். கடந்த அ.தி.மு.க. ஆட்சியிலும் நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு பெற, அப்போதைய அமைச்சர் விஜயபாஸ்கர், எம்.பி., தம்பிதுரை போன்றோர், பல முறை மத்திய அரசை அணுகினர். அதுபோல, தி.மு.க. அரசும் முயன்று வருவதை உணர்வதுடன், இப்பிரச்னையில் அனைத்து கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.
தி.மு.க., மாநாடு நடத்தினால், கூட்டணி கட்சியினரையும் அதில் பங்கேற்க அழைப்பார்கள். ஆனால் அ.தி.மு.க., மாநாட்டிலும், அண்ணாமலையின் நடைபயணத்தில் கூட கூட்டணி கட்சியினரைக்கூட அழைக்கவில்லை. இது அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே உள்ள பிரிவை காட்டுகிறது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில், எங்களது அணி பலம் வாய்ந்ததாக இருக்கும் என்பதை கூறி கொள்ள விரும்பு கிறோம்.கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பும் பொழுது மட்டுமே தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடும் வடிகாலாகத்தான் கர்நாடகா இருக்கிறது.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பில் தெரிவித்தபடி ஒவ்வொரு மாதமும் உரிய நீரை வழங்க வேண்டும். வறட்சி காலத்தில் எவ்வாறு தண்ணீர் வழங்க வேண்டும் என வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படு கிறதோ அதன்படி தண்ணீர் வழங்க கர்நாடகம் முன்வர வேண்டும் என்றார் முத்தரசன்.
பேட்டியின் போது, எம்.எல்.ஏ., மாரிமுத்து, முன்னாள் எம்.எல்.ஏ., பெரியசாமி, மாவட்ட செயலாளர் பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தி.. மு.ப.நாராயணசுவாமி, ஈரோடு.