Close
செப்டம்பர் 20, 2024 1:32 காலை

தமிழகத்துக்கு திமுக விசுவாசமாக இருக்க வேண்டும்:சீமான்

ஈரோடு

ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செந்தமிழன் சீமான்

காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதில் கர்நாடக காங்கிரஸ் கட்சி அந்த மாநிலத்துக்கு விசுவாசமாக இருப்பதை போல தமிழகத்துக்கு திமுக விசுவாசமாக இருக்க வேண்டும் என்றார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் .
ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியின்  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:
நான் தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் சென்று கட்சியை வலுப்படுத்துவதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறேன். பாஜகவை பொருத்தவரை அவர்கள் ஊழல் புரிந்ததாகக் கூற மாட்டார்கள். ரஃபேல் விமானம் வாங்கியதில் ரூ.250 கோடிக்கு மேல் மத்திய அரசு ஊழல் செய்து விட்டதாக முன்பே குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது அதன் கோப்புகளை கூட மத்திய அரசு தாக்கல் செய்யவில்லை. மாறாக ராணுவ அமைச்சகத்தில் இருந்தே அந்த கோப்புகள் மாயமாகி விட்டதாக மத்திய அரசு கூறி விட்டது.

மகாராஷ்டிரத்தில்  42 எம்எல்ஏக்களை விலை கொடுத்து வாங்கியே பாஜக ஆட்சி அமைத்தது. ஒவ்வொரு எம்எல்ஏக் களுக்கும் ரூ. 130 கோடி வீதம் மொத்தம் ரூ. 5000 கோடிக்கு மேல் கொடுத்ததாக குற்றச்சாட்டு இருக்கிறது.

இதை எந்த கணக்கில் சேர்ப்பது. எங்களை பொருத்தவரை பாஜகவும், காங்கிரஸும் ஊழல் கட்சிகளாகத்தான் பார்க்கிறோம்.

மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் (ராமேஸ்வரம்) தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட்டால் நானே அவரை எதிர்த்து போட்டியிடுவேன். அவர் போட்டியிட்டால் மட்டுமே நான் போட்டியிடுவேன். இல்லாவிட்டால் கட்சியினருக்கு வாய்ப்பு அளிப்பேன்.

தமிழக பொருளாதாரத்தில் தனிநபர் வருமானம் அதிகரித் திருப்பதாக பொன்முடி கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு பதிலளித்த சீமான் அவருடைய வருமானம் அதிகரித்திருப் பதாகக் கூறியிருப்பார். எனக்கெல்லாம் வாடகை கட்டுவதற்கு கூட வழியில்லாமல் தான் இருக்கிறேன்.

தொடர்ந்து பேசிய சீமான், இந்தியாவே பொருளாதார சிக்கலில்தான் உள்ளது என்று அனைவருக்கும் தெரியும். வளரும் நாடுகளின் பட்டியலில் கூட இந்தியா இல்லை. 2 கோடி பேருக்கு வேலை தருவதாக பிரதமர் மோடி கூறியிருந்தார். பதவிக்கு வந்து 10 ஆண்டுகளாகியும் எத்தனை பேருக்கு அவர் வேலைவாய்ப்பு அளித்தார். இன்னும் மன் கீ பாத்தில் மட்டுமே பேசுகிறாரே தவிர பத்திரிகையாளர்களைக் கூட சந்திக்க பிரதமர் மோடி தயாராக இல்லை.

திமுக அளித்த வாக்குறுதியில் 80 சதவீதம் நிறைவேற்றிய தாகக் கூறுகிறார்கள். 8% நிறைவேறிய வாக்குறுதியைக் கூறுங்கள். எல்லா குடும்பப் பெண்களுக்கும் உரிமைத் தொகை அளிப்பதாகக் கூறி விட்டு, இப்போது தகுதியுள்ள வர்களுக்கு மட்டும் அளிப்பதாகக் கூறுகிறார்கள்.

எங்கள் வீட்டு பெண்களுக்கு தகுதியை நிர்ணயம் செய்ய இவர்கள் யார் என்பது தான் என் கேள்வி. மகளிருக்கு இலவச பேருந்து பயணம் தேவை என மக்கள் கேட்டார்களா, சாலைப் பணியாளர் முதல் துப்புரவுப் பணியாளர் வரை எல்லோரும் போராடுகிறார்கள்.

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கூட பணியை வழங்க இந்த அரசு தயாராக இல்லை. 30 வயதில் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒருவர் 44 வயதாகியும் ஆசிரியர் பணி கிடைக்காமல் தவிக்கிறார். இன்னும் சிறிது காலத்தில் அவருக்கு வயதுவரம்பு மீறி விட்டதாகக் கூறி பணி வழங்க மறுப்பார்கள்.

இந்த நிலையை உருவாக்கியது அரசு தான். நாடே போராடிக் கொண்டிருக்கும்போது நல்லாட்சியை தந்து கொண்டிருப் பதாகக் கூறுவது கேவலம் இல்லையா,மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டத்தை அளித்துள்ளதாகக் கூறி பெருமை கொள்கிறார்கள்.

இதுவரை மாணவர்களை கையேந்தும் நிலையில் தானே வைத்துள்ளார்கள். காலையும், மதியமும் உணவு அளித்து விட்டு மாணவர்களை பிச்சைக்காரர்கள் கூட்டமாக மாற்றியிருப்பதும் அரசுதானே.

அதேபோல மாதந்தோறும் அரசு தரும் பணத்துக்காக பெண்களை காக்க வைத்திருப்பதும் அரசின் அவலம்தான். தீபாவளி, பொங்கல் என எல்லா பண்டிகைக்கும் மக்களை கையேந்த வைத்திருப்பது தான் இந்த அரசுகளின் சாதனை.
தேர்தலில் கூட்டணி வைக்க மாட்டேன்.

எங்கள் கொள்கையோடு ஒத்துபோவோருடன் கூட்டணி வைப்போம். இப்போதைய நீட் தேர்வு, ஜிஎஸ்டி வரி, சிஐஏ, மீத்தேன் திட்டம் என அனைத்து திட்டத்தையும் கொண்டு வந்தது காங்கிரஸ் தான். முன்பு காங்கிரஸுக்கு போதிய  பெரும்பான்மை இல்லாததால் அதை நிறைவேற்ற முடியவில்லை.

ஆனால், பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை  உள்ளதால் எளிதாக அவர்கள் நினைக்கும் அனைத்து சட்ட மசோதாக்க ளையும் நிறைவேற்றி விடுகிறார்கள். நாட்டில் ஆளும் கட்சி மட்டும் தான் மாறியதே தவிர  காட்சி எதுவும் மாறவில்லை.

ஒருநாடு தனது பொருளாதார வளர்ச்சிக்கு வெறும் வரியினங்களை மட்டுமே நம்பியிருப்பது அவலமான நிலை ஆகும். வருவாய் தரக்கூடிய பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் தனியார் மயமாக்கி விட்டார்கள்.

ரயில்வே, எல்ஐசி, விமான போக்குவரத்து என அனைத்து பொதுத்துறைகளையும் தனியார் மயமாக்கி விட்டார்கள். சொந்தமாக விமானமே இல்லாத ஒரு நாட்டில் எதற்காக விமான நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று பாடுபடுகிறீர்கள்.

வருவாய் தரக்கூடிய அனைத்து துறைகளையும் தனியாரிடம் ஒப்படைத்து விட்டு, மக்களிடம் இருந்து வரியின் மூலம் ஆட்சி நடத்த வேண்டும் என்று நினைப்பது எப்படி சரியாகும்.
அரசு மதுபானக் கடைகளை நடத்த தடை விதிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்று கூறுகிறது.

ஆனால், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்குமாறு கேட்டால் அதே உச்சநீதிமன்றம் நீட் தேர்வெழுதுமாறு மாணவர்களுக்கு உத்தரவிடுகிறது. குடிப்பதில் கொள்கை முடிவு என்றும், படிப்பதில் தலையிட முடியாது என்றும் கூறுவதை என்னவென்று சொல்வது.

ஆளுநர் ரவி ராஜ்பவனில் இருக்க வேண்டியவர் அல்ல, மனநல மருத்துவமனையில்  இருக்க வேண்டியவர். வள்ளலார், சனாதன கொள்கைக்கு எதிராகத் தான் சுத்த சன்மார்க்க வழியை தொடங்கினார்.

அப்படிப்பட்ட வள்ளலாரை சனாதன கொள்கைக்காகத் தான் சன்மார்க்க வழியைத் தொடங்கியதாக ஆளுநர் கூறுகிறார் என்றால் அவர் நல்ல மனநிலையில் உள்ளாரா என்ற சந்தேகம் எழுகிறது.
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் கூட்டணியில் சேர்த்து கொள்வீர்களா என்று கேட்கிறீர்கள். எங்கள் கொள்கையை ஏற்று யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம். நாங்கள் தடைசெய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்தவரை (பிரபாகரன்) தலைவராக ஏற்றுக் கொண்டவர்கள்.

எங்களோடு கூட்டணி வைத்தால், கொள்கை முடிவில் பல்வேறு சமரசம் செய்து கொள்ள மற்ற கட்சிகள் முன்வராது என்பதால் தான் கூட்டணிக்கு ஒப்பு கொள்வதில்லை.

மணிப்பூர் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டதால் தான் பிரச்னை ஓரளவு முடிவுக்கு வந்தது. இன்னும் மனசாட்சி உள்ள நீதியரசர்கள் இருக்கிறார்கள் என்பதை என்எல்சி விவகாரத் திலும் நாம் பார்த்தோம்.

தண்ணீர் தர மறுக்கும் காங்கிரஸ் கட்சியினரோடு ஏன் கூட்டணி வைக்கிறீர்கள் என்று திமுகவினரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்ப வேண்டும். அவர்கள் மாநிலத்துக்கு அவர்கள் விசுவாசமாக இருப்பதை போல திமுக, தமிழகத்துக்கு விசுவாசமாக இருக்க வேண்டும்.

நாட்டை திசை திருப்பும் செயலில் ஈடுபடுபவர்கள் தான் ஊழல், லஞ்சம் பற்றி பேசுபவர்களாக இருக்கிறார்கள். கனிம வளம், வனம், மணல் என பல்வேறு கொள்ளைகள் நடக்கிறது. அதைப்பற்றி ஏன் அண்ணாமலை போன்றவர்கள் பேசுவதில்லை.

வாக்குக்கு காசு கொடுப்பது பற்றியும் பேசுவதில்லை. வாக்குக்கு பணம் கொடுப்பதில் தான் ஊழல் என்னும் விதை ஊன்றப்படுகிறது. அண்ணாதுரையின் நடைபயணம் தமிழகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றார் சீமான்.
சீமானை கைது செய்யாமல் நான் ஓய மாட்டேன் என்று நடிகை விஜயலட்சுமி கூறியுள்ளாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அந்த விவகாரத்தை அமைதியாக நான் கடந்து செல்லவே விரும்புகிறேன். அதைப்பற்றி பேச எனக்கு விருப்பமில்லை என்றுக் கூறி அந்தக் கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சீமான்.

செய்தி- ஈரோடு மு.ப.நாராயணசுவாமி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top