Close
நவம்பர் 22, 2024 2:14 காலை

தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை: அன்புமணி ராமதாஸ் கண்டனம் 

ஈரோடு

ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாமக தலைவர் டாக்டர் அன்புமணிராமதாஸ்

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் 6 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மாநில அரசுகள் அமல்படுத்தியுள்ள நிலையில்,  திமுக அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல தேர்தல் வாக்குறுதிகளை  நிறைவேற்றவில்லை என பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டினார்.
மாநில அளவிலான 15 மற்றும் 17 வயதுக்குள்பட்ட ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகளை, தமிழ்நாடு பூப்பந்து சங்கத் தலைவராக உள்ள டாக்டர் அன்புமணி ராமதாஸ்  ஞாயிற்றுக்கிழமை ஈரோட்டில் தொடக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:திமுகவுக்கு வாக்களித்த அரசு ஊழியர்களுக்கு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் திமுக துரோகம் செய்து விட்டது. அதேபோல, நீட் தேர்வை ரத்து செய்வதாகக் கூறி அந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.
இப்போது அதிக  விதவைகள், புற்றுநோய், கல்லீரல் நோயாளிகளின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. நமது இளைஞர்களின் எதிர்காலம் குறித்து நான் கவலைப்படுகிறேன். அமைச்சர் முத்துசாமி மதுவிலக்கு அமைச்சராக இல்லை. மாறாக மது விற்பனை துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.
மதுவின் மூலம் கடந்த ஆண்டு 36,000 கோடி ரூபாய் வருமானம் வந்த நிலையில், இந்த ஆண்டு 45,000 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. மாநிலத்தில் மது விற்பனை தவிர, கஞ்சா மற்றும் போதைப்பொருள் பயன்பாடும் அதிகரித்துள்ளது.
இருப்பினும், 1.0, 2.0, 3.0 மற்றும் 4.0 என நடவடிக்கை எடுத்ததாக அறிவித்தார்கள். எல்லா இடங்களிலும் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. போலீஸார்  நினைத்தால் கஞ்சா வியாபாரத்தை தடுக்க முடியும்.
மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை விரைவில் அறிவிப்போம். ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை அமல்படுத்துவது சாத்தியமில்லை. உச்ச நீதிமன்றத்தை அணுகி காவிரி நீரைப் பெற அரசு திறம்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் குவாரிகளை மூட வேண்டும்.
இந்தியாவில் பேட்மிண்டன் போட்டிகளில் பல பதக்கங்களை வீரர்கள் வெற்றி பெற்று வருகிறார்கள் அந்த வரிசையில் தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் உலக அளவில் வெற்றி பெற்று ஒலிம்பிக் போட்டியில் தங்க பதக்கம் வெல்ல வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு பேட்மிண்டன் அசோசியேஷன் சார்பில் உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.
ஈரோடு
ஈரோட்டில் பேட்மிண்டன் போட்டியை தொடக்கி வைத்த டாக்டர் அன்புமணி ராமதாஸ்
இதற்காக கூடுதலாக தமிழக அரசு ஊக்கப்படுத்தும் வகையில் தேசிய அளவில் வெற்றி பெறும் வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.  சங்கர், முத்துச்சாமி, சதீஷ்குமார் உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் சர்வேதேச அளவில் வெற்றி பெற்றுள்ளார்கள்.
நீண்ட காலமாக கொங்கு மண்டல பகுதி மக்களின் கனவு திட்டமான அத்திக்கடவு அவிநாசி திட்டம் ஒரு ஆண்டு காலமாக 90 சதவீதம் முதல் 99சதவீதம் வரை மட்டுமே நிறைவு செய்து உள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது ஆனால் மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. விரைவில் பாண்டியாறு- புன்னம்புழா, காவிரி-வைகை- குண்டாறு உள்ளிட்ட பாசனத்திட்டங்களை தாமதமின்றி தமிழக அரசு  செயல்படுத்த வேண்டும்.
காவிரி ஆற்றினை தாமிரபரணி ஆற்றுடன்  இணைக்க பல்லாயிரம் கோடி செலவு செய். வேண்டிய அவசியம் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.தமிழக அரசு நீர்நிலைகள் மூலம் மழை நீரை சேகரிக்க கூடுதல் முதலீடுகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.தமிழக அரசு மொத்தம் ரூ.1 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்தால் நீர் பாசன திட்டத்தை அனைத்தும் முழுமையாக செயல்படுத்த முடியும்.
கர்நாடக மாநில அரசு மேக்கேதாட்டு வில் அணை கட்டியே தீருவோம் என கர்நாடக முதல்வர் கூறுவது கண்டிக்கத்தக்கது. இந்தியாவில் உள்ள நதிகள் அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். கபினி, கேஆர்எஸ் என அனைத்து அணைகளும் காவிரி நீர் மேலாண்மை வாரியத்தின்  கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்.
நெல் சாகுபடி செய்ய குவிண்டாலுக்கு 2 ஆயிரம் ரூபாய் செலவு ஆகி வரும் நிலையில் விவசாயிகளுக்கு தமிழக அரசு கூடுதல் விலை கொடுக்க வேண்டும். நொய்யல் ஆறு சென்னையில் உள்ள கூவம் ஆறு போல மாறிவிட்டது. கொள்ளிடம் ஆற்றில் 10 மண் குவாரிகள் அமைக்க அரசு முன்வந்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது. தடுப்பணை கட்டினால் மணல் கொள்ளையடிக்க முடியாது என்ற அடிப் படையில் தான் அனுமதி வழங்கி உள்ளது.
என்எல்சி நிறுவனத்திடம் இருந்து 800 மெகவாட் மின்சாரத் திற்காக பல்லாயிரக்கணக்கான விவசாய விளை நிலங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.சூரிய ஒளி சக்தி மூலம் அதிக அளவில் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் நிலை உள்ளது.
தமிழக அரசு காவிரி ஒழுங்குமுறை ஆணையத்திடம் 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் வேண்டும் என முறையீடு செய்த நிலையில் கர்நாடக அரசு குறைந்த அளவில் தான்  தண்ணீர் வழங்குகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்துள்ளனர். குறுவை நெல் சாகுபடியை காப்பாற்ற கர்நாடகம் உடனடியாக கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும்.
நான் மத்திய சுகாதார அமைச்சராக இருந்த போது நீட் தேர்வை ஏற்றுக் கொள்ளவில்லை. நீட் தமிழகத்தில் உள்ள கிராமப்புற மாணவர்கள் மற்றும் சமூக நீதிக்கு எதிரான ஒன்று.  தற்போது நீட் பயிற்சி மையங்கள் வணிக மையமாக மாறி வருகிறது.
 நீட் பயிற்சி பெற்றால் தான் மருத்துவம் படிக்க முடியும் என்ற சூழல் உள்ளது. நீட் தேர்வு திறன் அறிவு சார்ந்த படிப்பு இல்லை.
ஒரு ஆண்டில் 26 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது வேதனைக்குரியது. 2026 -ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைப்போம் என்றார் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.
# செய்தி-ஈரோடு மு.ப. நாராயணசுவாமி #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top