உதயநிதி ஸ்டாலினை அவதூறாக பேசிய அயோத்தி கோவில் சாமியார் பரமஹம்ச ஆச்சாரியா உருவ பொம்மையை எரித்து எச்சரிக்கை விடுத்து ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் நடந்த ஆர்ப்பாட்டத் துக்கு, அலங்காநல்லூர் ஒன்றியச் செயலாளர் அகத்தியன் தலைமை வகித்தார்.
மாநில துணை பொது செயலாளர் கார்த்திக், தலித் ராஜா, வீரா செல்வம், மாவட்டச் செயலாளர் தமிழ் குமரன், மாநகர் மாவட்ட ச்செயலாளர் லட்சுமி சசிகுமார், மாவட்ட கொள்கை பரப்பு செய்லாளர் அலங்கை சாந்தி, மேற்கு ஒன்றியச் செயலாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
எரிப்பதற்கு தயாராக வைத்திருந்த உ.பி. சாமியார் உருவ பொம்மையை எரிக்க விடாமல் அலங்காநல்லூர் போலீஸார் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.
கடந்த செப்டம்பர் 3 -ஆம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட ‘சனாதன ஒழிப்பு மாநாட்டில்’ திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது “இந்த மாநாட்டின் தலைப்பில் சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று போட்டு இருக்கிறீர்கள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும்; எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதைஎல்லாம் நாம் எதிர்க்க கூடாது ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம். சனாதனம் என்பது சமத்துவத்திற்கு சமூகநீதிக்கும் எதிரானது” என கூறி இருந்தார்.
பாஜகவினர் எதிர்ப்பு: சனாதனம் என்பது மலேரியா, டெங்கு போன்றது. அதை ஒழிக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு எதிராக பாஜகவினர் தேசிய அளவில் எதிர்வினை ஆற்றி வருகின்றனர். உதயநிதி ஸ்டாலின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க கோரி உச்சநீதிமன்ற வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் டெல்லி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
உதயநிதி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து ராஜஸ்தானில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜேபி.நட்டா ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.
உதயநிதி ஸ்டாலின் விளக்கம்: பாஜகவினரின் கண்டனத்திற்கு பதில் அளித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், ”ஒட்டுமொத்த இந்தியாவும் சனாதனம் குறித்து பேசிக் கொண்டிருக்கிறது. இன்னமும் பேச வேண்டும். நான் முன்பே சொன்னது போல் நிறைய பேருக்கு வயிற்றெரிச்சல் வந்துள்ளது. Genocide (இன அழிப்பு) என நான் சொன்னதாக சிலர் கூறுகிறார்கள். சனாதனம் என்ற கோட்பாட்டை ஒழிக்க வேண்டும் என்றுதான் பேசினேன். இனிமேலும் அப்படிதான் பேசுவேன். எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயாராக உள்ளேன்.
திராவிடத்தை ஒழிக்க வேண்டும் என்கிறார்கள் சிலர். அதற்கு திமுகவினரை கொலை செய்வதாக அர்த்தமா? பிரதமர் மோடி, ‘காங்கிரஸ் முக்த் பாரத் (காங்கிரஸ் இல்லாத இந்தியா)’ என்கிறார். அப்படி என்றால் காங்கிரஸ்காரர்களை பிடித்து கொல்லப் போகிறீர்களா?
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே திராவிடக் கொள்கை. முன்பு பெண்கள் படிக்க கூடாது. பல ஆண்டுகளுக்கு முன்பு மேலாடை அணியக் கூடாது. கோயிலுக்கு செல்லக்கூடாது என்கிறார்கள். இதையெல்லாம் மாற்றியதே திராவிட மாடல். இந்தியா கூட்டணி கூட்டம் வெற்றி அடைந்தது அவர்களை ரொம்ப தடுமாற்றம் அடைய வைத்துள்ளது. இந்தியா கூட்டணி வலுப்பெற்றுள்ளதை திசைத்திருப்பவே பாஜகவினர் வேண்டுமென்றே போலிச் செய்தி பரப்புகின்றனர் என்றார்.
சனாதனம் குறித்த சர்ச்சை இன்னும் ஓயாத நிலையில் உதயநிதி ஸ்டாலின் தலையை சீவி கொண்டு வருபவர்களுக்கு 10 கோடி பரிசாக வழங்கப்படும் என அயோத்தியை சேர்ந்த சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா தெரிவித்துள்ளார். அயோத்தியில் உள்ள மடத்தில் உதயநிதி ஸ்டாலினின் படத்தை கத்தியால் குத்தியும், தீயால் எரித்தும் ஆச்சார்யா சாமியார் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புத்தெரிவித்து பல்வேறு அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
10 ரூபாய் போதும்
இந்த நிலையில் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சனாதனம் ஒழிப்பு குறித்து மீண்டும் மீண்டும் பேசுவேன். நான் இது பற்றி பேசினால் பலர் வயிறு எரிவார்கள் என்பதை நான் ஏற்கெனவே பேசி இருந்தேன். பெண்கள் படிக்க கூடாது என சொன்னார்கள், ஆனால் பெண்களை படிக்க பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்” என கூறினார். மேலும் என் தலையை சீவ 10 கோடி எதுக்கு, 10 ரூபா போதும் என உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார்.