Close
செப்டம்பர் 20, 2024 3:59 காலை

ஆவின் நிறுவனத்திற்கு மூடு விழா நடத்த திமுக அரசு திட்டமா… தமாகா கேள்வி

ஈரோடு

தமாகா மாநில இளைஞரணித் தலைவர் எம். யுவராஜா

ஆவின் நிறுவனத்திற்கு மூடுவிழா நடத்திட திமுக அரசு திட்டமிடுகிறாக  என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞரணித் தலைவர் எம்.யுவராஜா வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக அரசு ஆவின் உணவுப் பொருட்கள் விலையை திடீரென்று உயர்த்தியுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, 7வது முறையாக ஆவின் உணவு பொருட்கள் விலையை உயர்த்தியுள்ளது. ஏற்கெனவே பல முறை ஆவின் பால், உணவுப் பொருட்கள், இனிப்பு வகைகள், போன்றவை உயர்த்தப்பட்டு உள்ளன. இதுவரை 6 முறை உணவு பொருட்களின் விலைகளை உயர்த்தி உள்ளது.

இந்நிலையில், தற்போது ஆவின் நெய், வெண்ணெய் விலையை மீண்டும் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி ஆவின் நெய் லிட்டருக்கு ரூ.70 அதிகரித்து ரூ.700 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 1/2கிலோ ஆவின் வெண்ணெய் விலை ரூ.250ல் இருந்து ரூ.280 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வரும் நிலையில், வீட்டு வரி, குடிநீர் வரி, மின்சார கட்டணம் என பல கட்டணங்களை உயர்த்தியுள்ளது.

இந்த நிலையில் ஆவின் வெண்ணெய், நெய் அடுத்தடுத்து விலை உயர்த்தப்பட்டு வருவது சாமானிய மக்களிடையே அதிருப்தியை உருவாக்கியுள்ளது. திமுக கூட்டணி கட்சிகள் பொது மக்கள் நலனுக்காக ஆளும் அரசை எதிர்க்காமல் மௌனம் காத்து வருகிறது.

எந்த துறையிலும் சாதிக்காத இந்த திமுக அரசு, ஆட்சியில் இருக்கும் கொஞ்ச காலத்தில் எப்படியாவது ஆவின் நிறுவனத்தை மூடி விட வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறது.

தனியார் பால் பொருட்கள் விற்பனையாளர்களுக்கு சாதகமாக செயல்பட்டு ஆவின் நிறுவனத்தை முடிவுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதா என்ற கேள்வி எழுகிறது. திறமையில்லாத திமுக அரசு பால் கொள்முதல் விலை உயர்த்தாத போது எதைவைத்து ஆவின் பொருட்கள் விற்பனை விலையை உயர்த்தியுள்ளது.

என்று தெரியவில்லை. இந்த விலையேற்றமானது சாதாரண அடித்தட்டு மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவிற்கு சுமையை ஏற்படுத்தி அவர்களை பொருளாதார ரீதியாக பின்னோக்கி செல்ல வழிவகுக்கும். தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என தொடர்ந்து பண்டிகை காலங்கள் நெருங்கி வருவதால், நெய் பயன்பாடு அதிக அளவில் தேவைப்படும் சூழலில் ஏழை, எளிய, நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும்.

இந்த வரலாறு காணாத விலை உயர்வை அறிவித்து மக்கள் மீது மிகப்பெரிய சுமையை சுமத்தியுள்ள திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறோம். 2011 ஆம் ஆண்டு மின்சாரத் தால் ஆட்சியை பறிகொடுத்த திமுக இந்த முறை ஆவின் நிர்வாகத்தால் ஆட்சியை இழக்க நேரிடும்.

எனவே மக்களுக்கு எந்த ஒரு விடியலையும் தராத இந்த திமுக அரசு இனியாவது அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top