Close
நவம்பர் 22, 2024 5:11 காலை

இந்தியாவிலேயே இலாகா இல்லாமல் சிறையிலுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி தான்

ஈரோடு

பள்ளிப்பாளையத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசுகிறார், முன்னாள் அமைச்சர் தங்கமணி

இந்தியாவிலேயே இலாகா இல்லாமல்சிறையிலுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிதான் என்றார்  முன்னாள் அமைச்சர் மற்றும் எம்எல்ஏ தங்கமணி .

முன்னாள் முதல்வர் அண்ணா 115 -ஆவது பிறந்தநாளையொட்டி நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் நகர அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கட்சியின் அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்டச் செயலாளரும்,  முன்னாள் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ. தங்கமணி பேசியதாவது:

ஈரோடு

திராவிட இயக்கத்தை உருவாக்கி, மக்களுக்கான இயக்கமாக அதை மாற்றி, முந்தைய காங்கிரஸ் ஆட்சியை அகற்றி தமிழகத்தில் ஆட்சிப்பீடத்தில் அமர்ந்தவர் முன்னாள் முதல்வர் அண்ணா. அவர் ஆட்சியில் அமர்ந்தபோது, இந்த வெற்றி முழுவதும் எம்ஜிஆரைத் தான் சேரும் என்று அவருக்கு பெருமை சேர்ந்தவர் அண்ணா.

அவருக்குபின், முதல்வர் பொறுப்பில் அமர்வது கருணாநிதியா, நாவலர் நெடுஞ்செழியனா என்ற போட்டி ஏற்பட்டபோது, கருணாநிதியின் இல்லத்துக்கே தேடிச் சென்று ஆதரவு தெரிவித்து கருணாநிதியை முதல்வராக்கியவர் எம்ஜிஆர்.

கருணாநிதி முதல்வராக்குமாறு எம்ஜிஆர் கைகாட்டவில்லையென்றால் நெடுஞ்செழியன் தான் முதல்வராகி இருப்பார். எம்ஜிஆர் போட்ட பிச்சையால் தான் கருணாநிதி முதல்வரானார். பிற்காலத்தில் அண்ணாவை தலைவராக ஏற்று அவரது பெயரால் அதிமுக என்ற இயக்கத்தை உருவாக்கி, அண்ணாவின் ஆட்சியை மீண்டும் ஏற்படுத்துவேன் என்று சபதமேற்று 1977-இல் அதிமுக ஆட்சியை உருவாக்கியவர் எம்ஜிஆர்.

முதல்வராக பொறுப்பேற்ற எம்ஜிஆர் 11 ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சியை கொடுத்தார். அதன்பின் முதல்வராகி கட்சியையும், ஆட்சியையும் கட்டிக் காத்தவர் ஜெயலலிதா. அவருக்கு பின் முதல்வரான எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினார்.

தற்போது எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் அண்ணா பிறந்தநாளையொட்டி அதிமுக சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், திமுக ஏன் பொதுக்கூட்டங்களை நடத்தவில்லை. வேலூரில் மட்டும் பெயரளவில் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தி விட்டு திமுக ஒதுங்கிக் கொண்டது என்றால் அண்ணாவைக் கொண்டாடும் உரிமை அதிமுகவுக்கு தான் உள்ளது என்பது தான் அர்த்தம்.

திமுகவுக்கு கொள்ளையடிக்க வேண்டும், ஊழல் புரிவதில் தான் ஆர்வமே தவிர அண்ணாவின் பிறந்தநாளை கொண்டாட அவர்கள் தயாராக இல்லை.
ஜெயலலிதாவும், எடப்பாடியாரும் முதல்வராக இருந்தபோது செயல்படுத்திய நல்ல பல திட்டங்களை திமுக ஆட்சிக்கு வந்ததும் நிறுத்தி விட்டது.

வளர்ச்சித் திட்டங்களும், நலத்திட்டங்களும் இருந்தால் தான் தமிழகம் முன்னேறும் என்பதை உணர்ந்து திட்டங்களை செயல்படு்த்தினார்கள். ஆனால், ஜெயலலிதா, எடப்பாடியார் கொண்டு வந்த பல நல்லத் திட்டங்களை திமுக அரசு நிறுத்தி விட்டது.

2006 -இல் மக்களுக்கு 2 ஏக்கர் நிலம் தருவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த கருணாநிதி ஆட்சி முடியும்போது, மக்களுக்கு தருவதற்கு நிலம் இல்லை. என் இதயத்தில் இடம் இருக்கிறது என்று கூறி வாக்களித்த மக்களை ஏமாற்றியவர் கருணாநிதி.

அதேபோல அவரது மகன் ஸ்டாலின் 520 வாக்குறுதிகளை கொடுத்து விட்டு இப்போது 100 வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் மக்களுக்குத் தெரியும். எந்தந்த திட்டங்களை நிறைவேற்றினார் என்பதும், அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களில் எதையெல்லாம் நிறுத்தி வைத்துள்ளார் என்பதெல்லாம் மக்கள் அறிவார்கள்.

ஈரோடு
அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மக்கள்

எம்ஜிஆர் கொண்டு வந்த சத்துணவுத் திட்டத்தை கேலி பேசிய கருணாநிதி பிற்காலத்தில் சத்துணவுத் திட்டத்தை நிறுத்தினால் எதிர்ப்பு வரும் எனக்கருதி சத்துணவுடன் முட்டை வழங்குவதாக அறிவித்தார். பின்னர் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா முட்டை வழங்குவதை நிறுத்தவில்லையே. நல்ல திட்டமாக இருந்தால் அதை ஆதரித்தவர் ஜெயலலிதா.

ஆனால், ஜெயலலிதாவும், எடப்பாடியாரும் நிறைவேற்றிய பல நல்ல திட்டங்களை ஸ்டாலின் நிறுத்தி விட்டார். மகளிருக்கு ஸ்கூட்டி வாங்க அளித்து வந்த ரூ.25,000 மானியம், மாணவர்களுக்கு லேப்டாப், தாலிக்கு தங்கம், அம்மா கிளீனிக் போன்ற பலத் திட்டங்களையும் ஸ்டாலின் நிறுத்தி விட்டார். தற்போது சொத்து வரி, வீட்டு வரி, மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு என அனைத்து கட்டணங்களையும் உயர்த்தியதுதான் ஸ்டாலின் அரசு செய்த சாதனை.

ஊழல் செய்ததாக கைதாகியுள்ள செந்தில்பாலாஜியை முதல்வர் உள்பட அனைத்து திமுக அமைச்சர்களும் சென்று சந்திக்க என்ன காரணம். இந்தியாவிலேயே இலாகா இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்ட அமைச்சராக திகழும் ஒரே நபர் செந்தில்பாலாஜி தான்.

செந்தில்பாலாஜி சிறைக்கு சென்றதை மறைக்க வேண்டும் என்பதற்காக சநாதனத்தை கையில் எடுத்து தேவையில்லாமல் சர்ச்சையை கிளப்பி மக்களை மறக்கச் செய்வதில் திமுக இறங்கியுள்ளது.

பிரதமர் மோடிக்கு எதிராக 28 கட்சிகளைச் சேர்த்து இண்டியா என்ற கூட்டணியை ஏற்படுத்தியுள்ளார்கள். அந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல தலைவர்கள், சநாதனத்துக்கு எதிராக திமுக பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். செந்தில்பாலாஜிக்கு ஆதரவாக உள்ள திமுகவினர் பொன்முடியை ஏன் கண்டு கொள்ளவில்லை என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.

திமுக அமைச்சரான பி.டி.ஆர்.தியாகராஜன், அக்கட்சியின் செயல்பாட்டை விமர்சித்ததால் தான் அவரிடம் இருந்த நிதித்துறை அமைச்சர் பதவியை பறித்து டம்மி அமைச்சராக்கியுள்ளனர்.

2011ல் முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றபோது கடும் மின்வெட்டு அமலில் இருந்தது. கடும் நஷ்டத்தில் இருந்த மின்சார வாரியத்தில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி மின்கட்டணத்தை உயர்த்தாமல் ஜெயலலிதா பார்த்துக் கொண்டார்.

ஆனால், ஸ்டாலின் ஆட்சியில் மின்கட்டணத்தை கடுமையாக உயர்த்தி விட்டனர். கேட்டால், வருவாய் குறைந்து விட்டதாகக் கூறுகிறீர்கள். மின்சாரம் என்பது வருவாய் ஈட்டும் துறையல்ல. அது ஒரு சேவை சார்ந்த துறை. அது மக்களுக்காக செயல்படுத்த வேண்டிய துறை என்பதால் அதை வருவாய் நோக்கத்தில் பார்க்கக் கூடாது என்று பேசினார் தங்கமணி.

கூட்டத்தில் நகரச் செயலாளரும், முன்னாள் நகர்மன்றத் தலைவருமான பி.எஸ்.வெள்ளியங்கிரி வரவேற்றார். நகர பொருளாளர் சிவகுமார், நகர பேரவைச் செயலாளரும், நகர்மன்ற முன்னாள் துணைத்தலைவருமான டி.கே.எஸ் என்கிற டி.கே.சுப்பிரமணி, ஆனங்கூர் ஊராட்சி மன்றத் தலைவர் சிங்காரம்,
மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினரும், பள்ளிபாளையம் ஒன்றியக்குழு தலைவர் தனலட்சுமி செந்தில், பள்ளிபாளையம் ஒன்றியச் செயலாளர் செந்தில், வடக்கு ஒன்றிய செயலாளர் குமரேசன், குமாரபாளையம் நகரச் செயலாளரும், நகர்மன்ற உறுப்பினருமான கே.எஸ்.எம். பாலசுப்ரமணியம், ஆலாம்பாளையம் பேரூர் செயலாளர் செல்லதுரை, குமாரபாளையம் நகர அவைத்தலைவர் எஸ்.என்.பழனிசாமி, பள்ளிபாளையம் நகர அவைத் தலைவர் குப்புராஜ், தலைமைக்கழக பேச்சாளர் எஸ்.மணிமேகலை முன்னிலை வகித்தனர்.

செய்தி- ஈரோடு மு.ப.நாராயணசுவாமி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top