முட்டையில் மந்திரம் செய்தால் நீட் தேர்வு ரத்தாகுமா? என்று பாஜக தலைவர் கு. அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
“என் மண் என் மக்கள்” எழுச்சி யாத்திரையாக மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட சிவகிரி பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை சென்றார்.
சிவகிரி அரசு மருத்துவமனையில் தொடங்கிய இந்த பாதயாத்திரையில் அண்ணாமலைக்கு தாரை தப்பட்டை, செண்டை மேளம் முழங்க மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரை, காவடியாட்டம் சூழ சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த பாதயாத்திரை தியாகி குமரன் சிலை, பேருந்து நிலையம் வழியாக தேர்முட்டியில் நிறைவு பெற்றது.பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மொடக்குறிச்சி எம்எல்ஏ டாக்டர் சி.சரஸ்வதி வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம்,தெற்கு மாவட்டத் தலைவர் வேதானந்தம், முன்னாள் தெற்கு மாவட்ட தலைவர் சிவகுமார், தங்கராஜ்,
வழக்கறிஞர் பிரிவு என்.பி. பழனிசாமி முன்னிலை வகித்தனர்.
பொதுக்கூட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
தமிழகத்தில் பிற தொகுதிக்கு இல்லாத ஒரு சிறப்பம்சம் மொடக்குறிச்சி தொகுதிக்கு உண்டு. தமிழகத்தில் தாமரை மலராது என்று கூறி வந்த வேளையில் மொடக்குறிச்சி தொகுதியில் பாஜக வெற்றி பெற்று நம் இருப்பை உணர்த்திய தொகுதி இது. தேசியமும் ஆன்மிகமும் கொடி கட்டி பறந்தது மொடக்குறிச்சி தொகுதி ஆகும்.
இந்த தொகுதியில் உள்ள காவிரி ஆற்றின் நடுவே காங்கேயம் பாளையம் நட்டாற்றீஸ்வரர் கோயிலில் உள்ள சிவலிங்கம், அகத்திய முனிவரால் மண்ணால் செய்யப்பட்டதாகும்.
பல சிறப்பு மிக்க மனிதர்கள் உருவான பூமி இது.
இந்தியாவின் தலைசிறந்த கல்வெட்டு ஆராய்ச்சியாளர் புலவர் ராசு மூலமாக 1800 ஆண்டுகளுக்கு முந்தைய இந்தியாவின் முதல் இசை கல்வெட்டு தோன்றிய இடம் அரச்சலூர் என்பதை உலகிற்கு எடுத்துக் கூறியவர் புலவர் ராசு.
அதேபோல கொடுமணல் பகுதியில் 2300 ஆண்டுகளுக்கு முன்பு நம் மக்கள் வாழ்ந்த இடத்தை தொல்பொருள் ஆராய்ச்சி மூலமாக உலகுக்கு எடுத்துக்காட்டியவரும் புலவர் ராசு தான். அதேபோல 1935 -இல் இந்த பகுதியை சேர்ந்த கே. பி. சுந்தராம்பாள் திரையுலகில் கொடி நாட்டி அப்போதே ஒரு லட்சம் சம்பளம் வாங்கிய முதல் நடிகை அவர்தான். முதன் முதலாக மேல்சபைக்கு திரைப்படத்துறையில் இருந்து தேர்வு செய்யப்பட்டு 1951 ஆம் ஆண்டில் எம்பியாக தேர்வு செய்யப்பட்ட வரும் கே பி சுந்தராம்பாள் தான்.
அதேபோல,எழுத்தாளர் தூரன் இந்த பகுதியில் சிறப்பு வாய்ந்தவராக திகழ்கிறார். ஆன்மிகமும் தேசியமும் தழைத்து ஓங்கி உள்ள இந்த மொடக்குறிச்சி தொகுதியில் அண்மையில் குலவிளக்கு அம்மன் கோவில் கதவில் பெரியார் உருவப் படத்தை வரைந்து வைத்துள்ளதாக தகவல் வந்தது.
கடவுள் மறுப்பாளரான பெரியாரின் படத்தை இந்து கோவிலின் கதவில் வரைந்து வைக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? 18 கிராம மக்களால் வழிபடக்கூடிய குலவிளக்கம்மன் கோவிலில் இது போன்ற பெரியார் படத்தை இந்து சமய அறநிலைத்துறை வரைந்து வைத்திருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. கோவில் நிர்வாகத்தை எடுத்து நடத்தும் அருகதை இந்து சமய அறநிலையத்துறைக்கு கிடையாது.
இந்த பகுதி மக்களின் நல்வாழ்வுக்காக கீழ்பவானி அணைக் கட்டு கீழ்பவன் வாய்க்காலில் பாசனம் பெறுவதற் கான நடவடிக்கை எடுத்தவர் சுதந்திர போராட்ட தியாகி என ஈஸ்வரனின் பிறந்தநாள் இன்று.காமராஜரும், எம்.ஏ.ஈஸ்வரன் போன்றவர்களும் அந்த காலத்தில் பெரிதும் பாடுபட்டார்கள். ஆனால் தற்போதைய தமிழக அரசின் ஆட்சியில் விவசாயிகளுக்கு போதுமான பாசன வசதி செய்து தராமல் விவசாயிகள் நலிவடைந்து வருகிறார்கள்.
உலக அளவில் மஞ்சள் ஏற்றுமதியில் இந்தியா 80 சதவீதம் பூர்த்தி செய்து வருகிறது. மொத்தம் 1.1 மில்லியன் டன் மஞ்சள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. முன்பு இந்தியாவில் ஈரோடு தான் மஞ்சள் விளைச்சலில் முதலிடத்தில் இருந்தது. தற்போது தெலங்கானா மாநிலம் நிஜமாபாத் முதலிடத்தில் உள்ளது.
சமீபத்தில் நிஜமாபாத்தில் தேசிய மஞ்சள் வாரியத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். வரும் 2024 ஆம் ஆண்டில் மீண்டும் பிரதமராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டால் பிராந்திய மஞ்சள் வாரியத்தை ஈரோட்டில் நாங்கள் அமைத்து தருவோம் என்று உறுதி அளிக்கிறேன்.
நீட் தேர்வை ரத்து செய்ய 50 லட்சம் கையெழுத்து வாங்கி அனுப்புவதாக திமுகவினர் கூறுகின்றனர். 1.50 கோடி தொண்டர்கள் தங்கள் கட்சியில் இருப்பதாக கூறிக்கொள்ளும் திமுகவினரால் வெறும் 50 லட்சம் கையெழுத்து தான் வாங்க முடியுமா?
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முட்டையை காட்டி நீட் தேர்வை ரத்து செய்ய மந்திரம் செய்வதாக கூறுகிறார்.முட்டையில் மந்திரம் செய்தால் நீட் தேர்வு ரத்து ஆகி விடுமா?நீட் தேர்வுக்கு எதிரான வழக்கில் தீர்ப்புக் கூறிய உச்ச நீதிமன்றம் நீட் தேர்வு யாருக்கும் எதிரானது அல்ல என்று உறுதிப்பட கூறியுள்ளது.
நீட் தேர்வை ரத்து செய்வதற்கு எதிராக வாதாடியவர் நளினி சிதம்பரம் தான்.இன்னும் சொல்லப்போனால் நீட் தேர்வை கொண்டு வந்தது கடந்த காங்கிரஸ் ஆட்சியில் தான். நீட் தேர்வை அமல்படுத்த காங்கிரஸ் ஆட்சியில் சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்த திமுகவைச் சேர்ந்த காந்திசெல்வன் தான் கையெழுத்திட்டார்.
நீட் தேர்வால் பாதிப்பு என்று திமுக அரசு பொய் பிரசாரம் செய்து வருகிறது. நீட் தேர்வு மூலம் சாதாரண ஏழை மக்களின் பிள்ளைகள் கூட மருத்துவக் கல்வியில் சேர்ந்து பயன் பெற்று வருகிறார்கள் என்பது மக்கள் எல்லோருக்கும் தெரியும். நீட் தேர்வில் பங்கேற்று மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தவர்கள் யார் என்ற பட்டியலை வெள்ளை அறிக்கை மூலம் தமிழக அரசு வெளியிட்டால் யாரெல்லாம் பயனடைந்துள்ளார்கள் என்ற விவரம் தெரிந்து விடும். இதை நாங்கள் பலமுறை கேட்டோம். திமுக அரசு வெள்ளை அறிக்கை விவகாரத்தில் “பம்மாத்து” செய்து வருகிறது.நீட் தேர்வு விவகாரத்தில் திமுக மக்களை ஏமாற்றி வருகிறது. திமுகவின் ஏமாற்று வித்தைக்கு மக்கள் இரையாகி விடக்கூடாது.
தமிழக அளவில் ஈரோட்டில் தான் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக் கின்றன. எனவே புற்றுநோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு ஈரோட்டில் கேன்சர் இன்ஸ்டிடியூட் அமைக்க வேண்டும்.
வலிமையான பாரதம் அமைய மீண்டும் மோடி பிரதமர் ஆக வேண்டும். வரும் 2024 ஆம் ஆண்டில் மோடியை பிரதமராக்க இங்கிருந்து பாஜக எம்.பி.யை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அண்ணாமலை பேசினார்.
பேட்டி செய்தி…
பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு எந்த அளவிற்கு மோசமாக உள்ளது என்பதற்கு ஆளுநர் மாளிகை முன்பு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதே நபர் பாஜக அலுவலக முன்பு பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்டு உள்ளார்.
இதற்கு வழக்கான காரணத்தை சொல்லுவார் அது என்ன என்றால் நீட் தேர்வுக்கு ஆளுநர் கையெழுத்து போடவில்லை என்று சொல்வார். இதற்கு முன்பும் இந்த குற்றவாளி பல இடத்தில் கருக்கா வினோத் செய்து உள்ளார்.
தமிழக அரசு பாஜக தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகளின் கைது நடவடிக்கையில் முனைப்பு காட்டும் உளவுத்துறை ஆளுநர் மாளிகை விவகாரத்தில் கோட்டை விட்டு உள்ளது.
எந்தவிதமான கண்காணிப்பு இல்லாததால் இது கண்டனத் துக்குரியது. இனி இறைவனை தான் காப்பாற்ற வேண்டும் என்ற நிலை உள்ளது. இதற்கு தமிழக முதல்வர் பதில் சொல்ல வேண்டும்.
கருக்கா வினோத் மீண்டும் ஆறு மாதம் கழித்து குண்டு போடுவார் என பந்தயம் தான் கட்ட வேண்டிய உள்ளது.இதனால் முதல்வர் காவல்துறை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்.
நாளை ஜனாதிபதி ஆளுநர் மாளிகை வர உள்ள நிலையில் இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மூலம் சாதாரணமான மக்களின் பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது என்றார் அண்ணாமலை.