மகாத்மா காந்தியின் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியைக் கண்டித்து புதுக்கோட்டை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் திருமயம் தாலுகா அரிமளம் அருகே கே.புதுப்பட்டியில் சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கே.புதுப்பட்டி கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித்தலைவர், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராம.சுப்புராம் தலைமை வகித்து பேசியதாவது:
தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி பொறுப்பேற்றது முதற் கொண்டு வரலாற்றுக்கு எதிரான கருத்துகளை தொடர்ந்து தெரிவித்து வருகிறார். தமிழக மக்களின் நலன்களுக்கு ரோத மாகவும், தமிழ் கலாசாரத்தை சிறுமைப்படுத்துகிற வகையிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் கொண்டாடப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127-ஆவது பிறந்தநாள் விழாவில் மகாத்மா காந்திஜியை கொச்சைப்படுத்துகிற வகையில் கருத்துகளை கூறியிருக்கிறார்.
அதில் அவர் பேசும் போது, ஆங்கிலேயர்களிடம் நாம் சுதந்திரம் பெறுவதற்கு காந்தியின் போராட்டம் பலன் அளிக்கவில்லை, நாம் சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தான் காரணம் என்று காந்தியடிகளை சிறுமைப்படுத்துகிற வகையில் காழ்ப்புணர்ச்சியோடு கருத்துகளை ஆளுநர் கூறியுள்ளார்.
அவரது பேச்சுக்கு, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரியின் கண்டனம் தெரிவித்துடன் சென்னையிலுள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் (ஜன.27) சனிக்கிழமை நடத்தப்படும் என்றும் அறிவித்தார்.
அதேபோல, தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் தங்களது மாவட்டத்துக்குட்பட்ட ஏதாவது ஒரிடத்தில் தமிழக ஆளுநரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட் டங்கள் நடத்த வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, புதுக்கோட்டை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் திருமயம் வட்டம், அரிமளத்தில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது என்றார் ராம.சுப்புராம்.
இதில், அரிமளம் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் கணேசன், அறந்தாங்கி வட்டாரத்தலைவர் எம்.கே.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஜெயலட்சுமி, திருமயம் வட்டார காங்கிரஸ் தலைவர் ஆர்.எம். மணிகண்டன், ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ். கணேஷ்பிரபு, அறந்தாங்கி நகர்மன்ற உறுப்பினர்கள் எம். தனராஜ், சி.வி. கிருபாகரன், அசாருதீன், நகர காங்கிரஸ் தவைவர் கரு.அன்பழகன்.
இளைஞர்காங்கிரஸ் நிர்வாகி ஸ்டாலின்பாக்யராஜ், அறந்தாங்கி வட்டாரத்தலைவர் கூடலூர் முத்து, நகர பொதுச்செயலர் முரளி, ஏம்பல் பெரியதம்பி, வீ.முத்து, ஓபிசி அணி தெற்கு வட்டாரத்தலைவர் கே.வி.கே. அருண்குமார் உள்பட திரளானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.