பீகாரில் ராகுல் யாத்திரைக்கு கூடிய கூட்டத்தை கண்டு பாஜகவும், நிதிஷ்குமாரும் கடும்அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஜன. 30 -ஆம் தேதி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின், ‘இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை’ திங்களன்று பீகார் மாநிலத்திற்குள் நுழைந்த நிலையில், அவரை வரவேற்க பீகார் மக்களும், இந்தியா கூட்டணி தொண்டர்களும் கடல்போல கூடியதால், மேற்குவங்கம் – பீகார் எல்லை ஸ்தம்பித்தது.
இந்தியா கூட்டணியிலிருந்த நிதிஷ்குமார், ஞாயிறன்று பாஜக கூட்டணிக்குத் தாவிய நிலையில், அது, பீகாரில் இந்தியா கூட்டணிக்கு பின்னடைவாக இருக்கும் என பாஜக கணக்குப் போட்டிருந்த நிலையில், ராகுலை வரவேற்க முன்னெப் போதும் இல்லாத அளவில் திரண்ட கூட்டம், பாஜக-வின் மனக்கணக்கை சுக்குநூறாக உடைத் தெறிந்துள்ளது.
இந்த கூட்டம் பாஜக தலைவர்களையும் நிதிஷ்குமாரையும் அதிர்ச்சியில் தள்ளியிருக்கிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி, கடந்த ஆண்டு, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை (தெற்கில் துவங்கி வடக்கு நோக்கி) 4000 கி.மீ. இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டார். தற்போது 2-ஆம் கட்டமாக மணிப்பூர் முதல் மகாராஷ்டிரா வரை (மேற்கு துவங்கி கிழக்கு நோக்கி) ‘இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை’யை ராகுல் மேற்கொண்டு வருகிறார்.
இந்த யாத்திரை, வன்முறை பூமியாக மாறியிருக்கும் மணிப்பூரில் தொடங்கி, அசாம், மேகாலயா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களை கடந்து திங்களன்று பீகார் மாநிலத்தை அடைந்தது. அங்கு கூடிய கூட்டம் தான் அத்தனை பேரையும் கலங்கடித்துள்ளது. பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தான் பாஜக வுடன் சென்றார். மக்கள் செல்லவில்லை என விமர்சனம் எழுந்துள்ளது.
இந்நிலையிலேயே, பீகாரின் எல்லையில் ராகுல் காந்தியின் யாத்திரையை மக்கள் கடல் போல திரண்டு வரவேற்றதும், யாத்திரையால் கிஷன்கஞ் சாலைகள் ஸ்தம்பித்தது. மேற்கு வங்க மாநிலத்திற்கான போக்குவரத்தே துண்டிக்கப்பட்டது போன்ற ஒரு பிரமாண்டமான நிகழ்வு உருவானது. நிதிஷ் பல்டிக்கு பின்னர் நடந்த இந்த நிகழ்வு ஆளும் பாஜக – ஜேடியு கட்சிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நிதிஷ்குமார், பாஜக-வுடன் இணைந்ததால் பீகாரில் ராகுல் காந்தியின் ‘இந்திய ஒற்றுமை நீதி யாத்திரைக்கு ’மக்கள் ஆதரவு குறையும்’ என சில ஊடகங்கள் தனி ஸ்க்ரிப்ட் மூலம் தலைப்புச் செய்திகளாக வெளியிட்டன. ஆனால் ஊடகங்க ளின் செய்திகளுக்கு தங்களது ஆதரவு மூலம் பீகார் மக்கள் சரியான பதிலடியை கொடுத்துள்ளனர்.
அதாவது, ‘இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை’ பீகார் மாநிலம் கிஷன்கஞ்சில் நுழைந்த பொழுது, பிரம்மாண்ட மக்கள் வெள்ளத்தில் யாத்திரை மிதந்து வந்தது. நிதிஷ்குமார் தான் பாஜகவுடன் சென்றார், மக்களாகிய நாங்கள் செல்லவில்லை என யாத்திரை வரவேற்பு மூலம் பீகார் மக்கள் உணர்த்தி விட்டனர்.
பின்னர், பீகாரின் கிஷன்கஞ்சில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரை யாற்றினார். பொதுக்கூட்டத்தில் அவர் கூறுகையில், “ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் சித்தாந்தங்கள் நாட்டில் வன்முறையையும், வெறுப்பையும் மட்டுமே பரப்பி வருகின்றன.
இவர்களது சித்தாந்தங்களால் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த நமது சகோதரர்கள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். சில சகோதரர்கள் ஆர்எஸ்எஸ் – பாஜகவின் சித்தாந்தங்களை ஒழிக்க ஒன்றாகப் போராடுகிறார்கள். மேலும் மொழிகள், சாதிகளை வைத்து வெறுப்பு தூண்டப்படுவதால் மக்களும் சண்டையிடுகிறார்கள். இருப்பினும் நாங்கள் ‘வெறுப்பு என்னும் சந்தையில், அன்பு என்னும் கடையை திறக்க விரும்புகிறோம்’ என ராகுல் காந்தி கூறினார்.
இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை’ இன்று பூர்ணியா மாவட்டத்தில் நுழைகிறது. பூர்ணியாவில் அம்மாநில காங்கிரஸ் கமிட்டி பிரம்மாண்ட பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ள நிலையில், இந்த பேரணியில் ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட், ராஷ்ட்ரிய ஜனதாதளம் ஆகிய கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள் பங்கேற்கின்றனர்.