தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 -ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே கே.புதுப்பட்டியில் மாபெரும் கோலப்போட்டி நடைபெற்றது.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 76 -ஆவது பிறந்தநாள் விழாவானது பிப்.24 முதல் தமிழகம் மட்டுமல்லாது அனைத்து மாநிலங்களில் உள்ள அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளான ஞாயிற்றுக் கிழமை(பிப்.25) புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் அரிமளம் தெற்கு ஒன்றியம் சார்பில் திருமயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கே.புதுப்பட்டி பகுதியில் மாபெரும் கோலப்போட்டி நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் கே.புதுப்பட்டி நகரில் உள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் வீட்டு வாசலில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் உருவங்கள் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இரட்டை இலை சின்னங்கள் கொண்ட வண்ணக் கோலங்களை வரைந்து தங்களது திறமைகளை காட்டினர்.
இந்நிகழ்விற்கு புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளரும்,முன்னாள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பி.கே வைரமுத்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோலப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பட்டுப்புடவை வெள்ளி நாணயம், வெள்ளி குங்குமச்சிமிழ் உள்ளிட்ட பரிசு பொருட்களை வழங்கி பேசியதாவது:
அண்ணா திமுக ஆட்சிக்காலத்தில் மகளிருக்கு கொண்டு வந்த நலத்திட்ட உதவிகள் குறித்தும், விரைவில் வர இருக்கும் நாடாளுமன்ற, சட்டமன்ற பொது தேர்தல்களில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து புரட்சி தமிழர் எடப்பாடியாரின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் பி.கே. வைரமுத்து குறிப்பிட்டார்.
முன்னதாக, வருகை தந்த பி.கே. வைரமுத்துக்கு, தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் மற்றும் அரிமளம் தெற்கு ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும் சால்வை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து கட்சிக் கொடியை ஏற்றி வைத்த அவர் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் கோல போட்டியில் கலந்து கொண்ட பெண்கள் வரைந்திருந்த கோலங்களை பார்த்து அவர்களிடம் புகைப்படம் எடுத்தும், அப்பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பையும் ஏற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து கோல போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு வெள்ளி குங்கும சிமிழ், வெள்ளி காசு உட்பட பட்டு புடவைகள்,மரக்கன்றுகளை பரிசாக வழங்கினார்.
அண்ணா திமுக ஆட்சிக்காலத்தில் மகளிருக்கு செய்த நலத்திட்ட உதவிகள் குறித்தும், வர இருக்கும் நாடாளுமன்ற, சட்டமன்ற பொது தேர்தல்களில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து புரட்சி தமிழர் எடப்பாடியாரின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
ஏற்பாடுகளை, புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிவா, அரிமளம் தெற்கு ஒன்றிய செயலர் செல்வராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தொழிலதிபர் பி. கே. வி. குமாரசாமி மற்றும் அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.