Close
அக்டோபர் 5, 2024 7:36 மணி

எடப்பாடிக்கு “டைம் முடிஞ்சது”.. அஸ்திரத்தை கையில் எடுத்த அமித் ஷா..! டக் டக்குனு நெருங்கும் தலைகள்..!

அமித் ஷா, அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி (கோப்பு படம்)

எடப்பாடி பழனிசாமிக்கு ‘டைம்’ கொடுத்து கொடுத்துப் பார்த்து ஓய்ந்து போய் கடைசியில் பாஜக மேலிடம் அஸ்திரத்தை கையில் எடுத்திருக்கிறதாம்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் தொடர்ச்சியாக ஏற்பட்டு வந்த கருத்து மோதலால் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறியது. 5 ஆண்டுகளாக தொடர்ந்த கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டது யாருமே எதிர்பார்க்காத ஒன்று. பல முறை அதிமுகவை அண்ணாமலை சீண்டிய போதெல்லாம் பொறுத்துப் பொறுத்துப் போன எடப்பாடி பழனிசாமி, கடந்த ஆகஸ்ட் மாதம், பாஜக கூட்டணியை முறித்துக் கொள்கிறோம் என்ற முடிவை எடுத்தார்.

அதிமுக பாஜக கூட்டணி முறிவு: அதிமுக – பாஜக கூட்டணி முறிவு என்பது நாடகம் தான், தேர்தல் நெருங்கும்போது சேர்ந்து கொள்வார்கள் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. எதிர்க்கட்சிகள் எவ்வளவுக்கு எவ்வளவு விமர்சித்தனவோ எடப்பாடி பழனிசாமியும் அவ்வளவுக்கு அவ்வளவு பாஜகவை அட்டாக் செய்து பேசத் தொடங்கினார். பாஜகவுடன் கூட்டணி இனி ஒருபோதும் இல்லை என அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி.

எடப்பாடி பழனிசாமியின் முடிவு அதிமுக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் உற்சாக டானிக் கொடுத்தது. தொடர்ந்து, லோக்சபா தேர்தலுக்கு தனி கூட்டணியை அமைக்கும் வேலைகளில் இறங்கினார் எடப்பாடி பழனிசாமி. முதலில், தங்கள் கூட்டணியில் இருந்த கட்சிகளுக்கு தூது விட்டார். அதில் பல கட்சிகள், பாஜகவை விட்டுக் கொடுக்காமல், மீண்டும் பழைய கூட்டணி அமைய வேண்டும் எனப் பேசின.

தூது விட்ட பாஜக: பாஜகவும் அதிமுகவை கூட்டணியில் இணைத்துக் கொண்டு லோக்சபா தேர்தலை சந்திக்கலாம் என்ற மனநிலைக்கு வந்துள்ளதாகவும் கூறப்பட்டது. இதை மிரட்டலாகவே அதிமுகவுக்கு சொல்லிப் பார்த்தது பாஜக தரப்பு. பாஜகவைச் சேர்ந்த ராம சீனிவாசன் பாஜகவுடன் கூட்டணி அமைக்கவில்லை என்றால் அதிமுக அரசியல் ரீதியாக விலை கொடுக்க நேரிடும் என்றும் கூறியிருந்தார்.

ஆனால் அதிமுகவோ பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதில் மிகவும் உறுதியாக உள்ளது. எடப்பாடி பழனிசாமி அதை தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகிறார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன், பாஜக – அதிமுகவை மீண்டும் சேர்த்து வைப்பதற்காக எடப்பாடி பழனிசாமியை பலமுறை சந்தித்துப் பேசினார். ஆனாலும், ஈபிஎஸ் பிடிகொடுக்கவே இல்லை.

காத்திருந்த ஓபிஎஸ், தினகரன்: ஒருபக்கம், ஓ. பன்னீர்செல்வமும், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும், எடப்பாடி பழனிசாமி முடிவால் குஷி ஆகினர். பாஜகவை விட்டு ஈபிஎஸ் விலகி இருப்பதால் தங்களுக்கு பாஜக முக்கியத்துவம் கொடுக்கும் என்பது அவர்கள் கணக்கு. ஆனால், பாஜகவோ, அவர்களை எட்டி விரட்டவும் இல்லை, கிட்டே அணைக்கவும் இல்லை.

ஓ.பன்னீர்செல்வமும், டிடிவி தினகரனும் தான் மாறி மாறி, நாங்கள் பாஜகவுடன் கூட்டணி அமைக்க இருக்கிறோம், பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று பேசினார்களே ஒழிய, பாஜக நேரடியாக அவர்களை அழைத்து பேசவில்லை. இருவரிடமும் டிஸ்டன்ஸ் மெயிண்டெயின் செய்து வந்தது. இதற்கெல்லாம் காரணம், எடப்பாடி பழனிசாமி மீண்டும் தங்கள் பக்கம் வர வேண்டும் என்பதற்காகத்தான்.

நேரா பிரதமர் மோடியே இறங்கி: பாஜக தலைவர்கள் பலர் மறைமுகமாக எடப்பாடி பழனிசாமியிடம் பேசியும் அவரது மனம் மசியாததால், பிரதமர் மோடியே நேரடியாக களத்தில் இறங்கினார். அண்மையில் திருப்பூர் பல்லடத்தில் நடந்த பாஜக பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, எம்ஜிஆரையும், ஜெயலலிதாவையும் புகழ்ந்து தள்ளினார்.

“எம்ஜிஆர் குடும்ப அரசியல் காரணமாக ஆட்சிக்கு வந்தவர் அல்ல. துரதிர்ஷ்டவசமாக, அவரை கேவலப்படுத்துவது போல தமிழகத்தில் திமுகவினர் ஆட்சி நடத்தி வருகின்றனர். எம்ஜிஆர் போலவே நல்ல ஆட்சியை தந்தவர் ஜெயலலிதா அம்மா. அவர் தன் வாழ்நாள் முழுவதையும் பொதுநலனுக்காகவும், மக்களின் வளர்ச்சிக்காகவும் கொடுத்தார். அவருடன் நெருங்கி பணியாற்றி உள்ளேன்.” என உருக்கமாகப் பேசினார் மோடி.

எடப்பாடிக்கு மறைமுக அழைப்பு: அதிமுக கூட்டணியை முறித்துக் கொண்ட பிறகும் எம்ஜிஆர், ஜெயலலிதாவை மோடி புகழ்ந்து பேசினார். ஜெயலலிதா ஊழல் செய்ததாலே தண்டிக்கப்பட்டார் என கடந்தாண்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியது, பாஜக அதிமுக கூட்டணியில் கடும் விரிசலை உண்டாக்கியது. இந்த சூழலில் வழக்கமாக ஜெயலலிதாவை ஜி என்று அழைக்கும் பிரதமர் மோடி, பல்லடத்தில் பேசும்போது அம்மா ஜெயலலிதா என்று குறிப்பிட்டார்.

அதிமுகவை மீண்டும் கூட்டணிக்கு அழைக்கும் நோக்கத்திலேயே பிரதமர் மோடி அவ்வாறு பேசியதாகவும் விவாதங்கள் நடந்தன. பிரதமர் மோடி வந்துவிட்டு போன பிறகும், எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக தரப்பில் இருந்து பலமுறை தூது விடப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், எடப்பாடி பிடிவாதமாக, பாஜக கூட்டணியை மறுத்துள்ளார்.

டைம் ஓவர்: இதையடுத்தே, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரை வெளிப்படையான பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது பாஜக தரப்பு. ஓபிஎஸ், டிடிவி தினகரன் இருவருமே பல மாதங்களாகவே பாஜக கூட்டணி என்ற முடிவில் தான் உள்ளனர். அப்படி இருக்கும்போது, பல்லடம் பொதுக்கூட்டத்திலேயே, கூட்டணி கட்சி தலைவர்களோடு அவர்களையும் மேடையேற்றி இருக்கலாம்.

ஆனால், அவர்களை மேடையேற்றினால், எடப்பாடி பழனிசாமியுடன் நெருங்க முடியாது என்பதற்காகவே இத்தனை நாட்களாக தாமதித்து, இப்போது எடப்பாடி பழனிசாமி இனி இல்லை என்பது உறுதியான உடன் ஓபிஎஸ், தினகரனை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பாஜக அழைத்துள்ளது என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தினர்.

கெடு முடிந்தது: எடப்பாடி பழனிசாமிக்கு, மோடியும், அமித் ஷாவும் கொடுத்த ‘கெடு’ முடிவடைந்துவிட்டது. பாஜக கூட்டணியில் இணைய அதிமுக துளியும் ரெடியாக இல்லை என்பது அறிந்த பின்னர் தான் தேர்தல் அறிவிப்பு நெருக்கத்தில், ஓபிஎஸ், தினகரனுடன் கூட்டணி பேச்சை பாஜக வெளிப்படையாகத் தொடங்கியுள்ளது என்கிறார்கள்.

ஓபிஎஸ், பாஜக கூட்டணியில் எந்த சின்னத்தில் போட்டியிடுவார் என்ற கேள்விகளும் எழுந்து வருகின்றன. தாமரை சின்னத்தில் நிற்க வைக்க பாஜக முயன்று வருவதாகச் சொல்லப்பட்டாலும், இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என ஓபிஎஸ் உறுதியாகக் கூறி வருகிறார்.

இரட்டை இலை?: இப்படியான சூழலில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தேர்தல் ஆணையம், சார்பற்ற சுதந்திர அமைப்பு. அது எடப்பாடி பழனிசாமிக்கு சின்னம் தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது யதேச்சையானது தான்.

அதேசமயம், எடப்பாடி பழனிசாமியை விட்டுவிட்டு, ஓபிஎஸ், டிடிவி தினகரனை பாஜக மேலிடம் வெளிப்படையாக நெருங்கியுள்ள அதே சமயத்தில், எடப்பாடி பழனிசாமியின் இரட்டை இலை சின்னத்துக்கும் சோதனை வந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top