பாஜகவுக்கு அமமுக நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறது என, திருவண்ணாமலையில் டிடிவி தினகரன் தெரிவித்தார்
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று இரவு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தனது மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்தார். டிடிவி தினகரன், அண்ணாமலையாரின் தீவிர பக்தர் என அனைவரும் அறிந்ததே.
கோவிலில் உள்ள சம்பந்த விநாயகா் சந்நிதி, அருணாசலேஸ்வரா் சந்நிதி, உண்ணாமுலையம்மன் சந்நிதிகளில் தனது மனைவியுடன் தரிசனம் செய்த டிடிவி தினகரனுக்கு, கோவில் நிர்வாகம் சாா்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. இவருடன் திருவண்ணாமலை மாவட்ட அமமுக நிா்வாகிகள் பலா் வந்திருந்தனா்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் கூறுகையில்,
தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவுக்கு அமமுக நிபந்தனையற்ற ஆதரவை அளிக்கிறது.
இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி வெற்றி பெறுவார். கடந்த 10 ஆண்டுகளாக எந்தவித ஊழல் குற்றச்சாட்டும் இல்லாமல் இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் ஆட்சியாக நரேந்திர மோடி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது,
தொடர்ந்து தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களை பெற்றுத் தரவும் மூன்றாவது முறையாக பதவி ஏற்கின்ற நரேந்திர மோடி இந்தியாவை உலகத்திலேயே ஒரு தலைசிறந்த நாடாக வல்லரசு நாடாக உயர்த்துவார்.
தொடர்ந்து அவர் வெற்றி பெற வேண்டும் , இந்தியா உயர்ந்த நாடாக வரவேண்டும் என்ற ஒரே நல்ல நோக்கத்தோடு அந்த கூட்டணி இணைந்திருக்கிறோம்.
மக்களவைத் தேர்தலில் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள இருக்கிறேன், என டிடிவி தினகரன் தெரிவித்தார்.