Close
நவம்பர் 22, 2024 4:18 காலை

இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தேன்: துரை வைகோ, எம்பி

சென்னை

எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தியுடன் துரை வைகோ சந்திப்பு

இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களை சந்தித்தேன் என நாடாளுமன்ற மதிமுக உறுப்பினர் துரை வைகோ தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் முதல் கூட்டம் அக்டோபர் 7 -ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்திருந்த நான் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் முன்னணி தலைவருமான அன்புக்குரிய  ராகுல் காந்தி அவர்களை சந்தித்து என் மகள் மணவிழா அழைப்பிதழ் அளிக்க விரும்பினேன்.

அவரை சந்திப்பதற்கும் நேரம் கேட்டேன். காஷ்மீர் , அரியானா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருந்த நேரத்தில் ராகுல் அவர்களை சந்திக்க வாய்ப்பு இருக்குமா என்ற ஐயம் ஏற்பட்டது.

ஆனால் 9 -ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு சந்திக்கலாம் என்று அழைப்பு வந்தது.டெல்லியில் எண்:10, ஜென்பத் சாலையில் உள்ள  ராகுல் காந்தி அவர்களின் இல்லத்தில் நண்பகல் 12 மணிக்கு அவரைச் சந்திப்பதற்கு சென்றேன்.

அரியானா, காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் ஏராளமான தலைவர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் அவர்களை சந்திக்க காத்திருந்தனர்.

சென்னை
ராகுகாந்திக்கு தனது மகளின் திருமண அழைப்பிதழ் அளித்த துரைவைகோ எம்பி

இருந்தாலும் 12 மணி அளவில் எனக்கு நேரம் ஒதுக்கித் தந்திருந்தார்.
இன்முகத்துடன் வரவேற்று உபசரித்த திரு ராகுல் காந்தி அவர்கள் நமது இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்களின் உடல் நலன் குறித்து அக்கறையுடன் கேட்டறிந்தார்.

முதலில் அவருக்கு காஷ்மீரில் வெற்றிக் கனியைப் பறித்ததற்காக வாழ்த்து தெரிவித்தேன். அரியானாவிலும் காங்கிரஸ் ஆட்சி அமைந்திருக்கும். ஆம் ஆத்மி கட்சியுடன் தேர்தல் உடன்பாடு ஏற்படாமல் போனது, அவர்கள் 1.8% வாக்குகளை பெற்றது, போன்ற காரணங்களால் அங்கு ஆட்சி நீங்கள் அமைக்க முடியவில்லை.இருந்தாலும் கடந்த தேர்தலை விட காங்கிரஸ் கட்சி கூடுதலாக 11% வாக்குகளை பெற்றிருக்கிறது.

அரியானாவில் காங்கிரஸ் பெற்ற வாக்குகள் 39.09%பாஜக பெற்ற வாக்குகள் 39.94%. நூல் இழையில்தான் பாஜக ஆட்சி அமைத்திருக்கிறது. வேறும் 0.8% வாக்குகள் தான் உங்களுக்கும் அவர்களுக்கும் வித்தியாசம், ஆனாலும் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த தேர்தலை விட கூடுதல் இடங்கள் கிடைத்திருக்கின்றன என்று ராகுல் காந்தி அவர்களிடம் நான் தெரிவித்தேன்.

நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியை வலிமைப்படுத்தி உங்கள் முயற்சியால் வலுவான எதிர்க்கட்சி இடத்திற்கு காங்கிரஸ் வந்திருக்கிறது.காஷ்மீர், அரியானா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் பெற்று இருக்கிற வெற்றி அடுத்து வருங்காலங்களில் காங்கிரஸ் கட்சி நல்ல இடத்திற்கு வரும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.

மக்கள் ஆதரவுடன் உங்கள் தலைமையில் இந்தியாவில் நல்ல ஒரு ஆட்சி அமையும் காலம் நிச்சயமாக வரும் என்று வாழ்த்தி பாராட்டுகளை தெரிவித்தேன்.தமிழ்நாட்டின் அரசியல் நிலைமை, திராவிட இயக்க அரசியல் பற்றி எல்லாம் நிறைய கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.

தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தின் தனித்துவ கோட்பாடுகளான சுயமரியாதை, சமூக நீதி, சமத்துவம், மதச்சார்பற்ற தன்மை போன்றவை இந்தியா முழுவதும் பிரதிபலிக்க வேண்டும் என்பது அவரது விருப்பம்.

திராவிட இயக்க அரசியல் சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டு இருப்பதால் தமிழர்கள் வித்தியாசமான சிந்தனை கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதனால்தான் அங்கு மதசார்பின்மை கொள்கை வெற்றி பெற்றுள்ளது என்று ராகுல் காந்தி அவர்கள் கூறிய போது மகிழ்ச்சி அடைந்தேன்.

மேலும் இந்தியாவின் பன்முகத்தன்மை,இந்து மதம் சார்ந்த கண்ணோட்டம்,இந்தியாவின் ஆன்மீக கலாசாரத்தில் பல்வேறு வகையான தத்துவக் கோட்பாடுகள் உள்ளன.

ஆனால் பாஜக , ஆர்எஸ்எஸ் போன்றவை இந்துத்துவ சிந்தனை மட்டுமே இந்து மத அடையாளம் என்று கட்டமைக்க விரும்புகின்றன என்று ராகுல் காந்தி அவர்கள் சரளமாக உரையாடினார்.

மேலும் ஈழத் தமிழர்கள் பிரச்னை, தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்படும் போக்குகள் குறித்தும் கருத்துகளை கவலையுடன் பகிர்ந்து கொண்டார்.

கடந்த வாரம் இலங்கை கடற்படையினர் 37 தமிழக மீனவர்களை கைது செய்ததை கண்டித்தும், அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும்  ராகுல் காந்தி அவர்கள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு கடிதம் எழுதியதற்கு நன்றி தெரிவித்தேன்.

என் மகள் திருமண அழைப்பிதழை அவரிடம் கொடுத்ததும் மகிழ்ச்சிப் பொங்க எங்கள் குடும்பத்தை பற்றியும், மகன் ,மகளைப் பற்றியும் கேட்டறிந்தார். மணமகனைப் பற்றியும் விவரங்கள் கேட்டார்.

நீங்கள் மணவிழாவுக்கு வந்தால் எங்கள் குடும்பத்தினர் மகிழ்ச்சி யடைவதை காட்டிலும் எங்கள் இயக்கத் தோழர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள்;

கடந்த மக்களவைக் கூட்டத் தொடர் நிறைவடைந்ததும் மக்களவை சபாநாயகர் அளித்த தேநீர் விருந்தில்எதிர்க்கட்சித் தலைவரான நீங்களும்பிரதமரும் இன்னும் முக்கிய தலைவர்களும் கலந்து கொண்ட போது என்னை உங்கள் பக்கத்தில் அழைத்து அமர வைத்துக் கொண்டீர்கள்.

நாம் இருவரும் அக்கூட்டத்தில் சிரித்து பேசிக் கொண்டிருந்த ஒற்றை படம் எங்கள் தோழர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது; மகிழ்ந்தனர். தாங்கள் மணவிழாவுக்கு வருகைத் தந்தால் இன்னும் மகிழ்ச்சி அடைவார்கள் என்று கூறினேன்.புன்னகை புரிந்தார்.

ஏராளமான பணிகள், முக்கிய பிரமுகர்களை சந்திக்க வேண்டிய சூழலில் சுமார் ஒன்றரை மணி நேரம் அதாவது நண்பகல் 12 மணியிலிருந்து ஒன்றரை மணி வரை ராகுல் காந்தி அவர்கள் இயல்பாக என்னிடம் உரையாடியது மன நிறைவாக இருந்தது.

கன்னியாகுமரியில் இருந்து ராகுல் அவர்கள் நடை பயணம் தொடங்கி சென்ற போது ஹைதராபாத்தில் அவருடன் காலை 6 மணி முதல் 10 மணி வரை நடை பயணத்தில் நானும் பங்கேற்றேன்.நடைப் பயணத்தில் சுமார் இரண்டு மணி நேரம் அவருடன் கலந்துரையாடும் வாய்ப்பு எனக்கு கிட்டியது.

ஒரே கருத்து, ஒரே சிந்தனை; ஓரே அணுகுமுறை எனக்கும் திரு ராகுல் அவர்களுக்கும் இருந்ததை அப்போது உணர்ந்தேன்.இந்த சந்திப்பிலும் அதேபோன்ற மகிழ்ச்சியை அடைந்தேன் என தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top