Close
நவம்பர் 21, 2024 1:42 மணி

‘திமுக ஆட்சியைப்பார்த்து வயிறு எரிகிறார்கள்’ தொண்டர்களுக்கான கடிதத்தில் முதலமைச்சர் விமர்சனம்..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி -கோப்பு படம்

திமுக ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள் என்பது சிலருக்கு வயிற்று எரிச்சலாக இருக்கிறது. அதனால் வயிறு எரிந்து போகிறார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், விருதுநகர் மாவட்டத்தில் நவம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் மேற்கொண்ட பயணம் குறித்தும், அங்கு மேற்கொண்ட ஆய்வுப்பணிகள் குறித்தும் முதல்வர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

விருதுநகரில் மேற்கொண்ட பணிகள் குறித்து குறிப்பிட்ட முதல்வர் “இதனைப் பொறுக்க முடியாமல்தான் அரசியலில் எதிர்முகாமில் இருப்பவர்கள் வன்மத்துடன் வார்த்தைகளை வெளிப்படுத்துகிறார்கள். வதந்திகளைப் பரப்புகிறார்கள். வயிற்றெரிச்சலில் புலம்புகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி தன் நிலை மறந்து விமர்சனம் செய்கிறார்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பெயரிலான திட்டங்களும், கட்டிடங்களும் மக்களுக்குப் பெரும்பயன் அளிப்பதைக் கண்டு பொறுக்க முடியாமல், கலைஞர் பெயரை வைப்பதா என்று அநாவசியமாகப் பொங்குகிறார்.

அம்மா உணவகங்களையும் நடத்துகிறோம்

தலைவர் கலைஞரைப் போலவே மக்கள் நலனுக்காகப் பாடுபட்ட தலைவர்களைப் போற்றவும் இந்த அரசு தவறியதில்லை. தந்தை பெரியார் பிறந்தநாளைச் சமூகநீதி நாளாகவும், அரசியல் சட்டம் வகுத்து தந்த டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளைச் சமத்துவ நாளாகவும், அருட்பிரகாச வள்ளலார் பிறந்தநாளைத் தனிப்பெருங்கருணை நாளாகவும் கடைப்பிடிக்கிறது இந்த திராவிட மாடல் அரசு.

அயோத்திதாசப் பண்டிதர் பெயரில் மேம்பாட்டுத் திட்டம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் என அரும்பெரும் தலைவர்கள் பெயரில் பல திட்டங்கள் தொடங்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்குப் புரியும் வகையில் சொல்ல வேண்டுமானால், அ.தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட அம்மா உணவகத்தையும் முன்பை விடச் சிறப்பாக நடத்தி வருவது திராவிட மாடல் ஆட்சிதான்.

திராவிட மாடல் ஆட்சியில் ஒவ்வொரு நாளும் மக்களின் நலன் காக்கும் நாட்களேயாகும். அதனால்தான் ஒவ்வொரு மாவட்டச் சுற்றுப் பயணத்திலும் மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள். அதைப் பார்த்துச் சிலர் வயிறு எரிகிறார்கள். ஏதேதோ பேசுகிறார்கள். அவர்கள் பேசட்டும். நாம் சாதிப்போம். கழக ஆட்சியின் வெற்றிச் சரித்திரம் தொடரட்டும்” என தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top