Close
நவம்பர் 18, 2024 2:55 மணி

ஆவடி நாசர் மீண்டும் அமைச்சரானதற்கு இந்த வரலாற்று பின்னணி தான் காரணமா?

அமைச்சர் ஆவடி நாசர்

தமிழ்நாடு அமைச்சராக இருந்த ஆவடி நாசர், திடீரென்று பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்தார். அவரிடமிருந்து, அமைச்சர் பதவி பறிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சற்றும் எதிர்பாராத நிலையில் திடீரென்று ஆவடி நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதன் பின்னணி தொடர்பாகப் பல்வேறு காரணங்கள் அரசியல் களத்தில் அலை பாய்கின்றன. நினைவில் நின்றிருக்கும் பழைய தகவலைப் பதிவிடுவது, நிகழ் யுக நிலைப்பாடுகளுக்குக் கிடைத்த முத்திரையாக அமையும்.

திமுகவின் முன்னணி  தலைவர்களில் ஒருவராக  விளங்கியவர் மதுராந்தகம் ஆறுமுகம். அவர் அண்ணா காலத்து அரசியல்வாதி.  மாவட்டச் செயலாளராக இருந்து, சென்னையின் புறநகர்ப் பகுதியில் இருந்த மாவட்டத்தில் கட்சியைக் கட்டிக் காத்து வளர்த்து வந்தவர்.

அடிக்கடி  மதுராந்தகத்திலும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் பிரம்மாண்டமான முறையில் திமுக பொதுக்கூட்டங்கள் நடத்துவது மதுராந்தகம் ஆறுமுகத்திற்கு வழக்கம். அத்தகைய கூட்டங்களுக்கு கலைஞர் உட்பட ஏராளமான திமுக தலைவர்களை அழைத்து, அவர் சொற்பொழிவுகளை நிகழ்த்த வைத்திருக்கிறார்.

இவ்வாறாக அவர் நடத்திய பொதுக்கூட்டங்களுக்கு வந்த பேச்சாளர்களுள் கலைஞரை அடுத்து வைகோ முக்கியமானவர். அவரின் உரைகளும், அந்த உரைகளுக்கு மக்களிடம் இருந்து கிடைத்த கரவொலிகளும் மதுராந்தகம் ஆறுமுகத்தை மகிழ வைத்தன. ஆகவே வைகோவுடன் மதுராந்தகம் ஆறுமுகம் நெருங்கிப் பழகத் தொடங்கினார். இதனால் இருவருக்கும் இடையே அரசியல் சார்ந்த இறுக்கமும் நெருக்கமும் பின்னிப் பிணைந்து இருந்தன.

திமுகவை உடைத்துக் கொண்டு வைகோ வெளியே செல்வது என்ற காலகட்டம் வந்த போது, பல மாவட்டச் செயலாளர்கள் வைகோவுடன் செல்லக்கூடிய சூழ்நிலைகள் உருவாகின. அத்தகையோரின் பட்டியலில் மதுராந்தகம் ஆறுமுகமும் இருந்தார்.

எனவே கலைஞருக்கும் மதுராந்தகம் ஆறுமுகத்துக்கும் இடையே இருந்த கனிவான உறவு கசந்து போனது. ஆறுமுகத்தை அவர் வேறு முகமாகவே பார்க்கத் தொடங்கினார். வைகோ ஆதரவாளர்களாகக் கருதப்பட்ட சில மாவட்டச் செயலாளர்களின் செல்வாக்கைச் சிதைக்கக் கலைஞர் திட்டமிட்டார். அதன்படி திமுகவின் சில மாவட்ட அமைப்புகளை இரண்டாக பிரித்துத் தன் விசுவாசிகளை மாவட்டச் செயலாளராக நியமிக்கக் கலைஞர் வியூகத்தை வகுத்தார்.

அண்ணாவையே எதிர்த்துப் போர்க் குரல் எழுப்பிப் பழக்கப்பட்டவர் மதுராந்தகம் ஆறுமுகம். நேரே கலைஞரைச் சந்தித்தார். ” நீங்கள் எந்த மாவட்டத்தை வேண்டுமானாலும் பிரித்துக் கொண்டோ உடைத்துக் கொண்டோ அரசியல் நடத்துங்கள். ஆனால் என் மாவட்டத்தை மட்டும் தயவுசெய்து இரண்டாகப் பிரித்து விடாதீர்கள்.” என்று கேட்டுக் கொண்டார்.

ஆனாலும் கலைஞர் அந்த மாவட்டத்தையும் இரண்டாகப் பிரித்தார். இதனால் மதுராந்தகம் ஆறுமுகம் கொதிப்பின் உச்சிக்கே சென்று கூச்சலிட்டார்.   அந்தக் கோபத்தால்  அவர் வைகோவின் ஆதரவாளராக  முடிவெடுத்து, திமுகவை விட்டு வெளியேறினார். அத்தகைய விலகல் தருணம் பத்திரிகைகளில் பரபரப்பாக அடிபட்டு வந்து கொண்டிருந்த காலகட்டத்தில், சில ஹேஷ்யங்கள் ரெக்கைகட்டிப் பறந்தன.

” ஆவடி நாசர் நான் வளர்த்த பிள்ளை. என் சொல்லை மீறி எதையுமே செய்ய மாட்டான். நான் அழைத்தால் போதும். உடனடியாக அவன் என்னோடு கை கோர்த்துக்கொண்டு வைகோவின் தலைமையை ஏற்றுக் கொள்வான்” என்று பட்டவர்த்தனமாகவே மதுராந்தகம் ஆறுமுகம் முழக்கமிடுவதை வழக்கமாக்கிக் கொண்டார்.

இது செய்தி பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகளாக வட்டமிடத் தொடங்கின. இதனால் ஆவடி நாசரின் மீது கலைஞரின் சந்தேகப் பார்வை சதிராடத் தொடங்கியது.    இத்தகைய சூழ்நிலையில் தினகரன் நாளிதழின் இதழியல் பொறுப்பாளர் ஜெய பாண்டியன் வழிகாட்டுதலின்படி, தினகரன் பத்திரிகையின் தலைமைப் புகைப்படக் கலைஞர் ராஜேந்திரன் ஆவடிக்குச் சென்றார். நாசரிடம் பேசினார்.

நாசரோ,” கலைஞரும் கழகமும் எனக்கு இரு கண்கள். என் உயிர் உள்ளவரை நான் மாறவே மாட்டேன். மதுராந்தகம் ஆறுமுகம் என்னை வளர்த்த பெரியவர்‌ அந்த நன்றி எனக்கு எப்போதும் உண்டு. ஆனால் அவருக்காக நான் திமுகவை விட்டு விலகுவது என்ற பேச்சுக்கே இடமில்லை.” என்று அழுத்தந் திருத்தமாக ஆவடி நாசர் உணர்ச்சிமயமாகப் பேசினார்.

ஆவடி நாசரின் இந்த தன்னிலை விளக்கமானது தினகரன் நாளிதழில் தலைப்புச் செய்தியாக  வெளியானது. அந்த செய்தியின் மூலமாகக் கலைஞரின் இதயக்கனியாகவே ஆவடி நாசர் இனிக்கத் தொடங்கினார். காலம் பல கடந்து போயிருந்தாலும்,  திமுகவுக்கு ஏற்பட்ட இக்கட்டான  சூழ்நிலையில் தன் விசுவாசத்தை நிரூபித்தார் என்ற வகையில் ஆவடி நாசரின் அரசியல் வரலாற்றுப் பக்கங்கள், அவரது சரிவை மீட்டெடுத்து, பரிவைப் பரிசாக்கி, மந்திரி பதவியில் அவரை மிளிரச் செய்திருக்கிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அரசு விழா ஒன்றில் கலந்து கொண்ட  ஆவடி நாசர், அங்கு படம் எடுத்துக் கொண்டிருந்த ராஜேந்திரனைப் பார்த்தார். விழா முடிந்ததும் அருகில் அழைத்தார். இறுக அணைத்தார். அவர்கள் பழைய வரலாற்று நிகழ்வுகளைப் பரவசத்தோடு பரிமாறிக் கொண்டனர். என் விழிகள் விழுங்கிய இந்த நிகழ்ச்சி,நெஞ்சில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதால் இங்கே பதிவிடப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top