இப்போதெல்லாம் அரசியல் கட்சி நிகழ்ச்சிகளுக்கு கூட்டம் சேர்ப்பதற்குள் கட்சிக்காரர்களுக்கு தாவு தீர்ந்துவிடுகிறது. காசு கொடுத்து கூட்டி வந்தாலும் ‘கொள்கை(?) பிடிப்பில்லாததால்’ பாதியிலேயே வண்டியைக் கிளப்பி விடுகிறார்கள்.
இந்நிலையில் திருப்பூர் அதிமுகவினர் வித்தியாசமான ஒரு புதிய உத்தியை அரசியல் உலகத்துக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.
திருப்பூர் பெருமாநல்லூரில் கடந்த ஞாயிற்றுக் கிழமை அதிமுகவின் 53-ம் ஆண்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது. பொதுவாக முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளும் கூட்டங்களில் கூட, கூட்டத்தினர் அங்கொருவரும் இங்கொருவருமாக அலை பாய்ந்தபடியே இருப்பார்கள்.
இந்தக் கூட்டத்துக்காக ‘ஆர்வமுடன்’ திரண்டு வந்திருந்த சுமார் 2 ஆயிரம் பேரும் அப்படியே பேஸ்ட் பொட்டு ஒட்டியது போல் சேர்களில் ஆடாமல், அசையாமல் உட்கார்ந்து ‘கண்ணும் கருத்துமாய்’ பொதுக்கூட்டக் கருத்துகளை உள்வாங்கினார்கள். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் 2026-ல் அதிமுக-வை அரியணையில் அமர்த்துவது தொடர்பாக பொதுக்கூட்டத்தில் ஆவேசமாக பேச, அதைக் கூட்டம் கைதட்டி ஆர்ப்பரித்தது.
மேடைக்கு முன்னால் அமர்ந்திருந்த அனைவரும் நகராமல் அப்படியே உட்கார்ந்திருந்ததை பார்த்து முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களுக்கே ‘கொஞ்சம்’ சந்தேகம் வந்து விட்டது.
ஆனால், கூட்டத்தை ஏற்பாடு செய்தவருக்குத்தானே அந்த ரகசியம் தெரியும். கூட்டத்துக்கு வரும் ஒவ்வொருவரும் அவரவர் அமர்ந்திருக்கும் சேர்களை கூட்டம் முடிந்ததும் அவர்களே வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம்” என்று விநோத பிரச்சாரம் செய்து விழாக் கமிட்டி கூட்டம் கூட்டி இருக்கிறது.
இதற்காக கூட்ட மேடைக்கு முன்பாக 2 ஆயிரம் புத்தம் புது பிளாஸ்டிக் சேர்களை வாங்கிப் போட்டிருந்தார்கள். முன்னறிவிப்பைப் பார்த்து விட்டு முன்கூட்டியே திரண்ட மக்கள், பொதுக்கூட்ட திடலை கூட்டத்தால் நிரப்பி விட்டார்கள். இதில் பலபேர் குடும்பம் குடும்பமாக வந்து சேர்களை ஆக்கிரமித்துக் கொண்டார்கள்.
கூட்டம் முடிவதற்காக காத்திருந்தவர்கள், கூட்டம் முடிந்ததுமே ஒரே குடும்பத்தில் அரை டஜன் சேர்கள் வரை பிரத்யேகமாக வண்டி பிடித்து அள்ளிச் சென்றனர்.
கட்சி கூட்டத்துக்கு ஆள் சேர்த்ததுடன் சேர்த்த கூட்டத்தை கலையவிடாமல் பார்த்துக் கொள்ள திருப்பூர் அதிமுகவினர் கையாண்ட இந்த புது உத்தியானது இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திமுகவின் ‘திருமங்கலம் ஃபார்முலா’ வை பின்பற்றி இது அதிமுகவின் ‘திருப்பூர் ஃபார்முலா’வா?