கடும் கட்டுப்பாடுகளுடன் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் , சி.வி. சண்முகம் ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீபெரும்புதூரில் தனியார் விடுதியில் நடைபெற்றது.
2026 ல் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தேர்தல் வேலைகளை தமிழகத்தில் துவக்கி உள்ளது.
அவ்வகையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு க ஸ்டாலின் இன்று முதல் திமுகவினர் தேர்தல் வேலைகளை துவக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இதேபோல் அதிமுக தமிழகம் முழுவதும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று திருச்சியில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் தங்கமணி உள்ளிட்டோர் சில சர்ச்சை பேச்சுகளால் பெரும் பரபரப்பு அதிமுகவில் மட்டுமல்ல அது அனைத்து அரசியல் கட்சிகள் இடையே அதிர்ச்சி நிலவியது.
இந்த பேச்சுக்கள் அனைத்து தொலைக்காட்சி செய்திகளிலும் முக்கிய இடம் பெற்ற நிலையில் இன்று காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்களில் முக்கிய அதிமுக நிர்வாகிகள் பங்கேற்கும் வகையில் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு ஆலோசனைக் கூட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இதேபோல் சில நிமிடங்கள் மட்டுமே பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு அனைவரும் ஒளிப்பதிவு செய்த பின்பு அரங்கத்தை விட்டு வெளியே செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
மேலும் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனைகள் நடைபெற உள்ளதால் அதன்பின் செய்தியாளர்களை சந்திப்பதாகவும் கூட்டம் குறித்து தெரிவிப்பதாகும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
கூட்டம் நடைபெறும் அரங்கு பத்திரிக்கையாளர்கள் வெளியேறிய பின்பு தாழிடப்பட்டு கூட்டம் நடைபெற்றது.