Close
ஏப்ரல் 4, 2025 11:55 காலை

காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்..!

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்

காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏவுமான ஈ வி கே எஸ் இளங்கோவன் காலமானார். அவருக்கு வயது 75.

இளங்கோவன் காலமானார்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக தகவல் வெளியானது. மூச்சுத் திணறல் காரணமாக சென்னை,ராமாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், கடந்த மாத இறுதியில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்று, அவரது உடல்நலன் குறித்து விசாரித்து வந்தனர். தொடர் சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல்நலனில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் அவரது உடல்நிலை மீண்டும் மோசமடைந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் இன்று காலை தெரிவித்து இருந்தன.

இந்த நிலையில் அவர் காலமானதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

ஈவிகேஎஸ் இளங்கோவன் யார்?

பெரியாரின் குடும்பத்தைச் சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன், தீவிரமான அரசியல்வாதியாக செயல்பட்டவர். தமிழக அரசியலில் தீவிரமாக களமாடிய அரசியல்வாதிகளில் அவரும் ஒருவர். அவரது அனல் பறக்கும் பேச்சு அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் அரசியலில் இருந்து சற்று ஒதுங்கி இருந்த இளங்கோவன் அவரது மகன் திருமகன் ஈவேரா மறைவை அடுத்து, ஈரோடு கிழக்குத் தொகுதியில் நின்று எம்.எல்.ஏ.வாக மீண்டும் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மகன் உயிரிழந்ததால் காலியான ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-ஆன ஈவிகேஸ் இளங்கோவனின் உடல்நிலையும் தற்போது மோசமடைந்து இருப்பது காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஈவிகேஎஸ் இளங்கோவன், தந்தை பெரியாரின் அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமியின் பேரனும் அவர் மகன் ஈ. வெ. கி. சம்பத் அவர்களின் மகனும் ஆவார். 1948ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி ஈரோட்டில் பிறந்த இவர், சென்னை மாநில கல்லூரியில் பி. ஏ. பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார்.

இளம் வயதிலேயே காங்கிரஸ் கட்சியில் இணைந்து தீவிர களப்பணியாற்றினார். படிப்படியாக உயர்ந்து இரண்டு முறை காங்கிரஸ் மாநில தலைவர் பதவியை வகித்துள்ளார். 1984,1989ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்களிலும், 1996ல் மக்களவை தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top