அ.தி.மு.க பொதுச்செயலாளராக, தனது தலைமையில் மூன்றாவது பொதுக்குழுவை நடத்தி முடித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
அதில், பா.ஜ.க மீதான எந்த விமர்சனத்தையும் அவர் அழுத்தமாக முன்வைக்காதது, கட்சிக்குள் பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது. இதற்கிடையே, அண்ணாமலையும் தினகரனும் கூட்டணி குறித்துப் பேசி, எரியும் தீயில் எண்ணெயை ஊற்றியிருக்கிறார்கள்.
முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் குறித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையின் சர்ச்சைக் கருத்துகளால் 2023, செப்டம்பர் மாதம் முடிவுக்கு வந்தது அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி உறவு. ‘இனி பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை’ என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவந்த எடப்பாடி, 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, பா.ஜ.க எதிர்ப்பு நிலைப்பாடுகளைக் குறைத்துக் கொண்டது சலசலப்பானது.
கடந்த டிசம்பர் 15-ம் தேதி நடந்த அ.தி.மு.க பொதுக் குழுவிலும், தி.மு.க அரசைக் கடுமையாகச் சாடிய எடப்பாடி, மத்திய பா.ஜ.க அரசைப் பகைத்துக்கொள்ள விரும்பாதது போலத் தீர்மானங்களை மென்மையாக நிறைவேற்றியிருப்பது, மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
இதன் பின்னணி குறித்து, அ.தி.மு.க மூத்த தலைவர்கள் கூறியதாவது: “எதிர்க்கட்சியாக அ.தி.மு.க இருக்கும் போது நடக்கும் பொதுக்குழுவில், ஆளும் தி.மு.க அரசைக் கடுமையாக விமர்சனம் செய்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவது வழக்கம் தான்.
அதேபோல, அந்தந்தக் காலகட்டத்து அரசியல் சூழலுக்கு ஏற்ப, மத்திய அரசையும் அ.தி.மு.க பொதுக்குழு கடுமையாகச் சாடிவந்திருக்கிறது. எம்.ஜி.ஆர் காலம் தொட்டு இதுதான் கட்சியின் வழக்கம். அதனால்தான், அ.தி.மு.க செயற்குழு, பொதுக்குழுத் தீர்மானங்கள் எப்போதுமே கவனம் பெறும்.
தற்போதைய பொதுக்குழுத் தீர்மானத்தில், தி.மு.க அரசின் தவறுகள் கடுமையாகத் தோலுரிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், மத்திய அரசைக் குறித்து வெற்றுத் தீர்மானங்களே நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
உதாரணமாக, 16.8.2024-ல் நடந்த செயற்குழுவில், ‘தமிழக மீனவர் நலனில் அக்கறையின்மை மற்றும் மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு போதுமான நிதி ஒதுக்காத மத்திய அரசுக்கு எதிராக’ கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. ஆனால், பொதுக்குழுவில் மத்திய அரசுக்கு எதிராக அப்படி ஒரு கண்டனத் தீர்மானம்கூட நிறைவேற்றப்படவில்லை.
எந்த இடத்திலும் பா.ஜ.க-வைக் காயப்படுத்திவிடக் கூடாது என்பதில் தலைமை மிக கவனமாக இருக்கிறது. முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் ஆகியோர்கூட பா.ஜ.க குறித்து எதுவுமே பேசவில்லை.
நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில், ‘பா.ஜ.க கூட்டணி இனி இல்லை’ என்று அறிவித்த எடப்பாடி தற்போது, சட்டமன்றத் தேர்தல் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று நழுவிவருகிறார்.
இதனால், அ.தி.மு.க-வுக்குள் ‘பா.ஜ.க-வுடன் கூட்டணி வேண்டும்…’ என்றும் ‘கூட்டணி வேண்டாம்’ என்றும் இரு அணிகள் உருவாகி விட்டன. முறிந்ததாக அறிவிக்கப்பட்ட அ.தி.மு.க – பா.ஜ.க உறவு குறித்து, இன்னும் தெளிவாக விளக்க முடியாத குழப்பத்துடன்தான் தலைமையே இருக்கிறது” என்கிறார்கள். அ.தி.மு.க-வுக்குள் பா.ஜ.க எதிர்ப்பு என்பது நாளுக்கு நாள் மங்கிக்கொண்டே போகிறது.
இந்த நிலையில்தான், சமீபத்தில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க தமிழகத் தலைவர் அண்ணாமலை, ‘நேரமும் காலமும் இருக்கிறது. பொறுத்திருந்து பாருங்கள்’ என்று அ.தி.மு.க-வுடனான கூட்டணி குறித்து பொடிவைத்துப் பேசியிருக்கிறார்.
இன்னும் ஒரு படி மேலேபோன டி.டி.வி.தினகரன். ‘அ.தி.மு.க தனது பாவங்களைப் போக்க, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய வேண்டும்’ என்று பா.ஜ.க-வுக்கு ஆள்பிடிக்கும் வேளையில் இறங்கியிருக்கிறார்.
இதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி ஒன்றில், `முதல்வர் வேட்பாளராக, எடப்பாடியை ஏற்றுக்கொள்கிற எந்தக் கட்சிக்கும் சிவப்புக் கம்பளம் விரிக்கத் தயாராக இருக்கிறோம்’ என்றிருக்கிறார்.
அதேநேரத்தில், `கூட்டணி என்பது இயல்பாக நடக்க வேண்டும். கட்டாயக் கல்யாணம்போலக் கட்டாயப்படுத்தினால் வெற்றி கிடைக்காது’ என்றும் பேசியிருக்கிறார்.
சிறுபான்மையினரின் வாக்குகளும் வேண்டும், பா.ஜ.க கூட்டணியும் வேண்டும் என்கிற ‘கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை’ நிலையில் அ.தி.மு.க இருக்கிறது. பா.ஜ.க-வுக்கோ, தனித்து நின்று பலம் காட்ட வேண்டும், அதேநேரம் தோற்றுவிட்டால் என்ன செய்வது என்கிற பயம்.
தேர்தல் வருவதற்கு இன்னும் காலமிருப்பதால், கூட்டணி குறித்த இந்தக் குழப்பத் தீயில், எண்ணெயையும் தண்ணியையும் மாற்றி மாற்றி ஊற்றி இவர்கள் விளையாடிக் கொண்டேயிருப்பார்கள்” என்கிறார்கள்.
இது குறித்து அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்கள் இருக்கின்றன. அந்தத் தேர்தலுக்கு, பா.ஜ.க அல்லாத கூட்டணி அ.தி.மு.க தலைமையில் உருவாகும். இரட்டை நாக்குகொண்ட தி.மு.க-தான், எங்களுக்கு எதிரான பொய்யான குற்றச்சாட்டுகளைப் பரப்பிவருகிறார்கள்.
உண்மையில் பா.ஜ.க-வின் செல்லக்குழந்தை தி.மு.க-தான். வழக்குகளுக்கு பயந்து, பா.ஜ.க-வின் காலில் விழுந்து கிடக்கிறார் தினகரன். அவரைப் போன்ற தன்மானத்தை இழந்தவர்களின் கருத்துகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை” என்றார்.