Close
ஜனவரி 9, 2025 7:54 காலை

ராமதாஸ், அன்புமணி மோதலுக்கு காரணம் என்ன?

சமீபத்தில் விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில், தமிழ்நாடு – புதுச்சேரி பா.ம.கவின் சிறப்பு புத்தாண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் கவுரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய மருத்துவர் ராமதாஸ், “அன்புமணிக்கு உதவியாக மாநில இளைஞரணி தலைவராக முகுந்தன் பரசுராமனை அறிவிக்கிறேன்” என்றார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி, “கட்சியில் சேர்ந்து நான்கு மாதங்கள் தான் ஆகின்றன. என்ன அனுபவம் இருக்கும் ? அவனுக்கு இளைஞர் சங்கத் தலைவர் பதவியா ? கட்சியில் உள்ள அனுபவம் வாய்ந்தவர்களுக்கு பதவி கொடுங்கள். களத்தில் நல்ல திறமையான ஆட்கள் வேண்டும்” என்று ஆவேசமாக கூறினார் அன்புமணி.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய மருத்துவர் ராமதாஸ், ` நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். நான் சொல்வதைக் கேட்கவில்லை என்றால் யாரும் இந்தக் கட்சியில் இருக்க முடியாது.” என்றார்.

அதையடுத்து சென்னை பனையூரில் புதிதாக அலுவலகம் திறந்திருப்பதாக கூறிய அன்புமணி, தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரும் தன்னை அங்கு வந்து சந்திக்குமாறும் கூறிவிட்டு வெளியேறினார்

பொதுக்குழு கூட்ட மேடையில், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் ராமதாசும், அன்புமணியும் கருத்து மோதலில் ஈடுபட்ட சம்பவம் அக்கட்சிக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

அதேசமயம் அப்பாவும், மகனும் மேடையில் மோதிக்கொள்வதற்கு காரணமான அந்த முகுந்தன் வேறு யாருமல்ல, மருத்துவர் ராமதாஸின் மூத்த மகளான ஸ்ரீகாந்தியின் மகன். அதாவது அன்புமணி ராமதாஸின் உடன்பிறந்த அக்காள் மகன். முகுந்தன் தற்போது தமிழக அரசியல் களத்தில் ஒரே நாளில் விவாதப் பொருளாக மாறியிருக்கிறார்.

இதுகுறித்து பா.ம.க நிர்வாகிகள் கூறியதாவது: “பா.ம.க-வின் தலைவர் பதவியை ஜி.கே மணி அன்புமணிக்கு கொடுத்து விட்டதால், அதற்கு நன்றிக்கடனாக அவர் மகன் ஜி.கே.எம்.தமிழ்க்குமரனுக்கு மாநில இளைஞரணி தலைவர் பதவியை வழங்கினார் ராமதாஸ். ஆனால் லைகா திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் முக்கிய பதவியில் இருந்த தமிழ்க்குமரனால் கட்சிப் பணியில் சரியாக ஈடுபட முடியாததால் கட்சிக்குள் ஏற்பட்ட விமர்சனங்களையடுத்து கடந்த 2022-ம் ஆண்டு தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார் .

இதையடுத்து அந்தப் பதவிக்கு யாரையும் நியமிக்காத நிலையில், 2024 மார்ச் மாதம் 24-ம் தேதி தன்னுடைய மூத்த மகளின் மகனான முகுந்தனை மாநில சமூக ஊடகப் பேரவையின் தலைவராக அறிவித்தார் ராமதாஸ். முகுந்தனின் நியமனம் அப்போதே அன்புமணிக்குப் பிடிக்கவில்லை.

முகுந்தன் பெயரளவுக்குத்தான் அந்தப் பதவியில் இருந்தாரே தவிர, கட்சிப் பணி எதையும் சீரியசாக செய்யவில்லை. இந்த நிலையில், இளைஞரணி பதவியை தனக்கு விசுவாசமானவர்களுக்கு கொடுத்து அருகில் வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்தார் அன்புமணி. ஆனால் அந்தப் பதவியை தன்னுடைய சொந்த பேரனுக்கு கொடுக்கலாம் என்று முடிவெடுத்தார் ராமதாஸ்.

அப்பாவுக்கும், மகனுக்கும் நீடித்து வந்த பனிப்போர்தான், இன்று மேடையில் வெடித்திருக்கிறது. விசுவாசத்தை சொந்தம் ஓரம் கட்டிவிட்டது” என்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top