புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவராக திமுகவைச் சேர்ந்த திலகவதி செந்தில் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார்.
அண்மையில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட வார்டு உறுப்பினர்களின் முதல் கூட்டம் புதுக்கோட்டை நகர்மன்றக் கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்ற மறைமுக தேர்தலில் திமுக சார்பில் நகராட்சியின் 25-ஆவது வார்டில் வெற்றி பெற்ற உறுப்பினர் திலகவதி செந்தில் தனது வேட்புமனுவை, நகராட்சி ஆணையர் நாகராஜனிடம் தாக்கல் செய்தார். அவருக்கு திமுக உறுப்பினர்கள் 35 பேர் வாக்களித்தனர். இந்த தேர்தலில் அதிமுக உறுப்பினர்கள் 8 பேர் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.
தேர்தலின் முடிவில் நகராட்சி ஆணையர் நாகராஜ் புதுக்கோட்டை புதிய நகராட்சி தலைவராக 25வது வார்டு திமுக உறுப்பினர் திலகவதி செந்தில் தேர்ந்தெடுக்கப் பட்டதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அவரை தலைவர் இருக்கையில் அமர வைத்தனர்.
அப்போது புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் வை. முத்துராஜா, நகர திமுக செயலர் க. நைனா முகமது மற்றும் திமுக உறுப்பினர்களும் உடனிருந்தனர்.
தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள திலகவதி (46), வடக்கு மாவட்ட திமுக பொருளாளரான செந்திலின் மனைவி ஆவார். இவர் பிகாம் பட்டதாரியான இவருக்கு இரு மகன்கள் உள்ளனர்.