Close
செப்டம்பர் 13, 2024 1:03 காலை

நாடுதழுவிய(28,29) வேலை நிறுத்தம்: தஞ்சைமாவட்டத்தில் லட்சம் பேர் பங்கேற்க ஏற்பாடு

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மின்வாரிய தொமுச அலுவலகத்தில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கை

ஒன்றிய மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளைக் கண்டித்து 28,29 தேதிகளில் நடைபெறும் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் தஞ்சை மாவட்டத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து தொழிற்சங்கம் சார்பில் கூட்டறிக்கை!! தஞ்சை மாவட்டத்தில் செயல்படுகின்ற தொமுச, சிஐடியு, ஏஐடியூசி ,ஐஎன்டியூசி, ஏஐசிசிடியூ, எச்எம்எஸ் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் வெளியிட்ட கூட்டறிக்கை: பொதுத் துறையை தனியாருக்கு விற்பதை எதிர்த்து, விலைவாசி, பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வை கண்டித்து, அமைப்புசாரா நல வாரியங்களை சீர்குலைப்பது எதிர்த்து, புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தியதை கைவிடுவது,மின்சார சட்டத் திருத்த மசோதா, மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை ரத்து செய்வது ,விவசாய விளை பொருளுக்கு குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்வது ,  நூறுநாள் வேலைக்கான ஊழியத்தை 600 ரூபாயாக உயர்த்தி வழங்குவதுடன், நகராட்சி, பேரூராட்சிகளுக்கு விரிவுபடுத்துவது உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும்ஸ

ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத கொள்கைகளுக்கு எதிராக தேசிய தொழிற்சங்கங்கள் மார்ச் 28,29  இரண்டு நாட்கள் நாடு தழுவிய 48 மணி நேர பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் இந்தப் பொது வேலைநிறுத்தத்தில் வங்கி, இன்சூரன்ஸ், போக்குவரத்து, தொலைத்தொடர்பு, ரயில்வே ,மின்சாரம், அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், இளைஞர்கள்,பெண்கள், கைத்தறி நெசவாளர்கள், உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்கள், எவர்சில்வர் ,பித்தளை பாத்திரம், குத்துவிளக்கு பட்டறை உரிமையாளர்கள், அனைத்து தரப்பு தொழிலாளர்கள்.

ஆட்டோ ,கார் ,வேன், டெம்போ ,லாரி, சரக்கு வாகன ஓட்டுனர்கள், உரிமையாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், கூட்டுறவு ஊழியர்கள், நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்கள், உள்ளாட்சித் துறை பணியாளர்கள், சாலையோர வியாபாரிகள், டாஸ்மாக் ஊழியர்கள், மருந்து விற்பனை பிரதிநிதிகள் என தஞ்சை மாவட்டத்தில் சுமார் லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

மார்ச் 28 ஆம் தேதி காலை 11 மணிக்கு தஞ்சாவூர் ஆற்றுப் பாலத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டு தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெறுகிறது.

கும்பகோணம், பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையங்கள் முன்பும் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. மார்ச் 29 அன்று தஞ்சாவூர் ரயில் நிலையம் முன்பும், கும்பகோணம், பட்டுக்கோட்டை ரயிலடி முன்பும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளது.

மோடி அரசின் மக்களுக்கு எதிரான கொள்கைகளைக் கண்டித்து நடைபெறும் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் வணிகப் பெருமக்கள், பொதுமக்கள், அனைவரும் பங்கேற்று வெற்றி பெறச்செய்ய வேண்டுமாறு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என்று கூட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்

 சனிக்கிழமை  காலை 11 மணியளவில் தஞ்சாவூர் மின்வாரிய தொமுச அலுவலகத்தில் தொமுச மாவட்ட செயலாளர் கு.சேவியர், சிஐடியு மாவட்ட செயலாளர் சி.ஜெயபால், ஏஐடியூசி மாவட்ட செயலாளர் ஆர். தில்லைவனம், ஐஎன்டியூசி மாவட்ட செயலாளர் என்.மோகன்ராஜ், ஏஐசிசிடியூ மாவட்ட துணை செயலாளர் பி.ரமேஷ், எச்எம்எஸ் மாவட்ட செயலாளர் ஜி.முருகேசன் உள்ளிட்டோர் கூட்டறிக்கையை வெளியிட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் ஏஐடியூசி மாநில செயலாளர் சி.சந்திரகுமார், மாவட்ட தலைவர் வெ. சேவையா,. துணை செயலாளர் துரை. மதிவாணன், ஐஎன்டியுசி மாவட்ட தலைவர் ஏ.ரவிச்சந்திரன், தொமுச மின்வாரிய சங்க தலைவர் பச்சமுத்து , டிசிடபிள்யூ நிர்வாகிகள் சண்முகம், சதீஷ்பிரபு, சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர்கள் கே.அன்பு, பேர்நீதிஆழ்வார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top