விளையாட்டு அமைப்புகளை பதிவுசெய்வதற்கான அரசின் விதிமுறைகள்? நாடாளுமன்றத்தில் தொல்.திருமாவளவன் கேள்வி
எந்தெந்த விளையாட்டு அமைப்புகள் தன்னார்வ பதிவுபெற்ற அமைப்புகளாக செயல்பட வேண்டும் என்பது குறித்து நடைமுறையில் உள்ள நெறிமுறைகள் பற்றி அரசுக்கு விழிப்புணர்வு இருக்கிறதா?
எந்த விளையாட்டு அமைப்புகள் பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும் என வழிகாட்டுதல்கள் குறிப்பிடுகிறது? தேசிய விளையாட்டு கழகங்கள் மட்டும் பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டுமா அல்லது மாநில, மாவட்ட தாலுகா விளையாட்டு அமைப்புகளும் தனிப்பட்ட அமைப்புகளும் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டுமா?
கேரம், கொக்கோ உள்ளிட்ட பொருளாதாரத்தில் நலிந்துள்ள விளையாட்டுகள் பின்தங்கியுள்ளது என்பதை அரசு அறிந்திருக்கிறதா?
இந்தியாவில் தேவையற்ற தடைகளை நீக்கி விளையாட்டு களை ஊக்கப்படுத்திடும் வகையில் தேசிய விளையாட்டு கழகங்கள் மட்டும் பதிவீடு செய்தால் போதும், மற்ற மாநில, மாவட்ட, தாலுகா, தனிநபர் விளையாட்டு அமைப்புகள் பதிவு செய்யத்தேவையில்லை, அவை தேசிய அமைப்புகளோடு இணைந்து செயலாற்றலாம் என்னும் திட்டம் அரசுக்கு இருக்கிறதா?
மேற்கண்ட கேள்விகளை நாடாளுமன்றத்தில் எழுப்பியிருந் தேன். அதற்கு ஒன்றிய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் எழுத்துப்பூர்வமாக பின்வருமாறு விடையளித்திருக்கிறார்:
ஆரோக்கியமான மேலாண்மை, பொறுப்புடைமை, வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை தேசிய விளையாட்டு கழகங்களில் உறுதிப்படுத்திட 2011 ஜனவரியில் “விளையாட்டு விதிகள்” என்னும் தேசிய விளையாட்டுகள் மேம்பாட்டு விதியை இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் கொண்டு வந்தது.
இதில் தேசிய விளையாட்டு அமைப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கும் நெறிமுறைகள் உள்ளன. இந்த நெறிமுறைகளின் படி உரிய விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்காக தேசிய விளையாட்டு கழகங்களுக்கு அமைச்சகம் அங்கீகாரம் வழங்குகிறது..தேசிய விளையாட்டு கழகங்கள் மாநில அமைப்புகளையும், மாநில அமைப்புகள் மாவட்ட அளவிலும் வட்டார அளவிலும் தன்னார்வ விளையாட்டு அமைப்புகளை தங்களுடன் இணைத்துக் கொண்டுள்ளன.
விளையாட்டு கழகங்கள் தன்னார்வ பதிவுபெற்ற அமைப்புகளாக இருக்க வேண்டும் எனவும் தனியார் நிறுவனமாகவோ கூட்டு நிறுவனமாகவோ இருக்கக் கூடாது எனவும் உரிய விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் வகையில் மட்டுமே செயல்பட வேண்டும் எனவும் ‘விளையாட்டு விதிகள்’ பரிந்துரைக்கிறது. மேலும், தேசிய விளையாட்டு கழகங்கள் தங்களோடு இணைத்துக் கொண்டுள்ள விளையாட்டு அமைப்புகளின் பெயர்களோடு பதிவு எண்களையும் தங்களது இணையதளத்தில் பதிவிட வேண்டும் என அமைச்சகம் அறிவுறுத்தியிருக்கிறது.
ஒலிம்பிக் விளையாட்டு இயக்க ஆட்சிமுறையின் அடிப்படை உலகளாவியக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு அரசின் நெறிமுறைகள் அமைந்துள்ளன. மேலும், தேசிய விளையாட்டு அமைப்புகளின் சுயாட்சி செயல்பாட்டில் முரண்படாத வகையிலும் தலையிடாத வகையிலும் அரசின் நெறிமுறைகள் அமைந்துள்ளன.
கேரம், கொக்கோ உள்ளிட்ட விளையாட்டுகளை நாட்டில் மேம்படுத்திடும் வகையில் தன்னார்வ அமைப்புகளுக்கு ஆதரவளிக்கும் ஊக்கப்படுத்தும் கொள்கையை அரசு எப்போதும் கொண்டுள்ளது என தொல்.திருமாவளவன்
தெரிவித்துள்ளார்.