புதுக்கோட்டை அருகேயுள்ள திருவப்பூர் ரயில்வே கிராசிங் பகுதியில் புதிய மேம்பாலம் கட்ட மத்திய அரசு அனுமதி கிடைத்துள்ளது என்றார் திருச்சி மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் சு. திருநாவுக்கரசர்.
புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ரமலான் நோன்பு நிகழ்வில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:மாநிலங்களுக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரகதொல்லை தருவதற்காக ஆளுநர்களை மத்தியஅரசு கருவிகளாக பயன்படுத்துவது கண்டனத்துக்குரியது.
அரசியல் சட்டப்பட்டி ஆளுநர் பதவி என்பது மத்திய அரசால் நியமிக்கப்படும் பதவியாகும். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுக்குதான் ஆளுநரை விட அதிகாரம் உள்ளது. மாநில அரசுகளின் சட்டங்களை நிராகரிப்பது தவறு. மேற்கு வங்கம், புதுச்சேரி போன்ற மாநிலங்கள் உதாரணம்.
நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை இடையில் நிறுத்தி வைப்பது அதிகார துஷ்பிரயோகம். நாடாளுமன்றத்தில் ஆளுநரை மாற்ற வேண்டும் என்ற பிரச்னை ஏற்பட்டது. இப்படி முரண்பாடு ஏற்பட்டுவிட்ட பிறகு எப்படி ஆளுநர் வைத்த தேனீர் விருந்தில் கலந்து கொள்ளமுடியும்.
அதனால்தான் இரு அமைச்சர்கள் ஆளுநரை நேரில் சந்தித்து தமிழக அரசின் முக்கிய மசோதாக்களின் நிலை குறித்து கேட்ட போது குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதற்கு கால வரம்பை கூற முடியாது என கூறியதைத் தொடர்ந்து, முரண்பாடு நடந்து கொண்டிருக்கும் காரணத்தால் தேனீர் விருந்தில் கலந்து கொள்ள முடியாது என தமிழக அரசு எடுத்த முடிவு சரியானதே.
2024 – மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக 25 இடங்களை பிடிக்கும் என மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். அது அவரது கனவு. கனவு காண்பதற்கு எல்லோருக்கும் உரிமை உள்ளது. மீதமுள்ள இடங்களுக்கும் சேர்த்து கனவு காண வேண்டியதுதானே. ஆனால் இது கனவாகவேதான் முடியும் நனவாகாது.
தமிழ்ப்புத்தாண்டில் வைத்த தேனீர் விருந்து வைத்ததை திமுக புறக்கணித்தாகக் கூறுவது தவறு. திமுகவை பொருத்தவரை தை 1 -இல் தான் தமிழ்புத்தாண்டு என்ற கொள்கையுடையது. அதே நேரம் ஆன்மீகம் நம்பிக்கை உள்ளவர்கள் சித்திரை 1 -ஆம் தேதியை கொண்டாடுகின்றனர். கடவுள் இல்லை என்பவர்களும் கடவுள் உண்டு என்பவர்களும் உள்ளனர். அதனால் சாமி கும்பிட வேண்டும், சாமி கும்பிடக்கூடாது என கட்டாயப்படுத்தி சட்டம் போட முடியாது.என்னைப் பொருத்தவரை தை முதல் நாளையோ சித்திரை முதல் நாளையோ கொண்டாடுவதில் தவறில்லை.
ப. சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோது இந்தியை வரவேற்பதாக எப்போதுமே கூறியதில்லை. ஆனால், அமித் ஷா ஆங்கிலத்துக்கு பதிலாக இந்தியை பயன் படுத்த வேண்டும் என கூறுவது தவறானது. ஒரே நாடு ஒரே மொழி ஒரே இனம் என்பது சாத்தியமில்லை. தேவையில்லாத வேலை.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு எம்பி க்கள் சிபாரிசு செய்யும் நடைமுறையை ரத்து செய்தது கண்டனத்துக்குரியது. இதில் 10 என்ற ஒதுக்கீட்டை அதிகரித்திருக்க வேண்டும். இது நல்ல முடிவல்ல. மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
மேம்பாலம் அப்பகுதியை கடந்து செல்லும் வாகனங்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் அனுமதிக்கப்படுகிறது. நாம் கேட்ட இரண்டு மூன்று பாலங்களில் திருவப்பூர் ரயில்வே மேம்பாலம் அமைக்க விரைவில் மத்திய அரசின் அனுமதி கிடைத்துவிடும். அடுத்த தேர்தலுக்குள் பாலப்பணிகள் தொடங்கிவிடும் என்றார் திருநாவுக்கரசர்.
இதில், புதுகை எம்எல்ஏ டாக்டர் வை. முத்துராஜா, மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி. முருகேசன், காங்கிரஸ் நிர்வாகிகள் ஏ. சந்திரசேகரன், இப்ராகிம்பாபு, பென்னட்அந்தோணிராஜ், நகர்மன்ற உறுப்பினர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.