தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் சமுத்திரக் கரை ஏரி ஆக்கிரமிப்பில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாற்று இடம் உடனடியாக வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழு வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்ட அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சாவூர் ஒன்றிய குழு கூட்டம் (24.4.2022) ஒன்றியக்குழு உறுப்பினர் ஏ. பெருமாள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி மாவட்ட,மாநில முடிவுகள் குறித்து சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் சமுத்திரக்கரை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட போது அந்த பகுதியில் சுமார்50 ஆண்டு காலமாக வசித்து வந்த இருபத்தி ஏழு குடும்பங்களுக்கு மாற்று இடம் அளிக்கப்படும் என்று அந்த நேரத்தில் அளிக்கப்பட்ட உறுதிமொழி இதுவரை நிறைவேற்றப் படவில்லை.உடனடியாக அந்த குடும்பங்களுக்கு மாற்று இடம் வழங்க மாவட்ட ஆட்சியர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விளார் ஊராட்சி ஒன்றியம் கங்காணியார்தோட்டம் பகுதியில் சுமார் 40 ஆண்டு காலமாக 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சாலை வசதி, சுடுகாடு வசதி என்பது அறவே கிடையாது . இது குறித்து பல தடவை கோரிக்கைகள் அளிக்கப்பட்டும் நிறைவேற்றப் படவில்லை. .இந்தப் பகுதி மக்களுக்கு சாலைவசதி, சுடுகாடு வசதி ஏற்பாடு செய்து தர மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியும், 100 நாள் வேலைத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றிட ஒன்றிய அரசு 2.5 லட்சம் கோடி மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் ஜி.கிருஷ்ணன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஆர். கே.செல்வகுமார், ஒன்றிய குழு நிர்வாகிகள் எம்.ராமலிங்கம், டி.கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.