Close
செப்டம்பர் 20, 2024 5:56 காலை

பிரதமர் மோடி தமிழகத்திற்குச் சேர வேண்டிய ரூ.28 ஆயிரம் கோடியைத் தந்து உதவ வேண்டும்: சிபிஎம் மாநிலச்செயலர் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் செய்தியாளர்களுகு பேட்டியளித்த சிபிஎம் கட்சி மாநிலச்செயலர் கே. பாலகிருஷ்ணன்

தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடி தமிழகத்திற்குச் சேர வேண்டிய ரூ.28 ஆயிரம் கோடியை வழங்கி வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள உதவ வேண்டும் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலர்  கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் மே 24, 25 தேதிகளில் புதுக்கோட்டையில் நடைபெற்றது. அதனையொட்டிய புதன்கிழமை கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:

கடந்த இரண்டு நாட்களாக புதுக்கோட்டையில் நடைபெற்ற கட்சியின் மாநிலக்குழு கூட்டத்தில் இன்றைய அரசியல் சூழல் மக்களின் வாழ்வாதாரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

மத்திய அரசு 17 முறை விலைகளை உயர்த்திவிட்டு 2 முறை மட்டுமே குறைத்துள்ளது.  பெட்ரோல், டீசல் விலையில் ரூ.10, ரூ.8 என்கிற சிறு அளவில்தான் குறைத்துள்ளது. அதே நேரத்தில் பெட்ரோலில் 10 விழுக்காடு எத்தனால் கலக்கப்படுகிறது. இதனால், குறைக்கப்பட வேண்டிய விலையை நுகர்வோருக்குத் தராமல் பெட்ரோலிய நிறுவனங்கள் கொள்ளையடிக்க மோடி அரசு அனுமதித்துள்ளது.

மக்களின் மீது சுமத்தப்பட்டுள்ள வரி உயர்வுகளையும், நாசகரக் கொள்கைகளையும் திரும்பப்பெற வலியுறுத்தி மே 25 முதல் வருகின்ற 31- வரை இடதுசாரிக் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இணைந்து மக்களிடையே பிரசாரம் மற்றும் போராட்டங்களை நடத்தவுள்ளோம்.

பஞ்சு செயற்கையான பற்றாக்குறை

ஒரு கெண்டி பருத்தியின் விலை வெறும் 35 ஆயிரம் என்று இருந்ததை 1 லட்சத்து 18 ஆயிரம் என்கிற அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. செயற்கையாக மார்க்கெட்டில் பற்றாக்குறையை உருவாக்கி கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிப்பதற்கு மோடி அரசு துணைபோகிறது.

இதனால், பல்வேறு நூற்பாலைகள் மூடப்பட்டு வருகின்றன. இதுகுறித்து தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். மக்களவை உறுப்பினர் கனிமொழி ஜவுளித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தி உள்ளார்.

ஆனாலும், நடவடிக்கை இல்லை. அதிகமான நூற்பாலைகள் தமிழ்நாட்டில் இருப்பதை குஜராத்துக்கு மாற்றும் நடவடிக்கைகளில் மோடி ஈடுபட்டுள்ளாரோ என்கிற சந்தேகம் வருகிறது. இந்திய பருத்திக் கழகம் மூலம் ஒன்றிய அரசு நேரடியாக பருத்தியை கொள்முதல் செய்ய வேண்டும்.

பிரதமர் மோடி இன்று தமிழகத்திற்கு வருவதன் மூலம் சில திட்டங்கள் தொடங்கப்படும் என்பது நல்லதுதான். அதே நேரத்தில் ஒன்றிய அரசு தமிழகத்திற்கு சேரவேண்டிய சுமார் 28 ஆயிரம் கோடி ரூபாய் நிதிப் பாக்கித்தொகையை தரும் பட்சத்தில் தமிழகத்தில் ஏராளமான வளர்ச்சித் திட்டங்களை உருவாக்க முடியும்.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எல்லா பொருட்களின் மீதான விலை உயர்வும், வேலை இல்லாத் திண்டாட்டமும் உயர்ந்துகொண்டே வருகிறது. மக்களின் மீதான இக்கொடூரத் தாக்குதலைக் கண்டித்து பாஜக அல்லாத கட்சிகள் வலுமிக்க போராட்டத்திற்கு முன்வர வேண்டும்.

மேட்டூர் அணை

இயற்கையின் ஒத்துழைப்பால் ஜூன் 12 -ஆம் தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை மே 24-ஆம் தேதியே திறக்கப்பட்டுள்ளது. ஆனால், தூர்வாரும் பணிகள் தொய்வடைந்துள்ளது. உடனடியாக போர்க்கால அடிப்படையில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். தண்ணீர் மட்டும் திறந்துவிட்டால் போதாது. கூட்டுறவு சங்கங்கள் மூலமாக போதுமான அளவு கடன், விதை மற்றும் இடுபொருட்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்ட மக்களின் 50 ஆண்டுகால கனவு காவிரி -வைகை குண்டாறு திட்டம். இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதன் மூலம் வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கும் புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்ட மக்களுக்கு பேருதவியாக இருக்கும். இதை தமிழக அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும்.

கந்துவட்டிக்கொடுமை

கந்துவட்டிக் கொடுமையால் அவிநாசியில் பெண் தற்கொலை செய்துகொண்டது மிகுந்த வேதனைக்குறியது. பொதுத்துறை வங்கிகளும், கூட்டுறவு நிறுவனங்களும் போதிய அளவில் சாமான்ய மக்களுக்கு கடன்கொடுக்க மறுப்பதே இதற்குக் காரணம்.

இதனால், கந்துவட்டிக்காரர்களிடமும், நுண்நிதி நிறுவனங் களிடமும் மக்கள் சிக்கி சீரழிந்து வருகின்றனர். மேற்படி தற்கொலைக்குக் காரணமானவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு கந்துவட்டி தடைச் சட்டத்தை அரசு உரிய முறையில் அமுல்படுத்தவேண்டும்.

பத்திரிகை, ஊடகத்துறையினருக்கு பாதுகாப்பில்லாத 30 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளது. தனியார் நிறுவனத்தின் புகாரைப் பெற்றுக்கொண்டு ஜூனியர் விகடன் பத்திரிகைமீது வழக்கு பதிவு செய்திருப்பது கண்டிக்கத் தக்கது.

அரசு இ-சேவை மையங்கள் மக்களுக்கு குறைந்த கட்டணத் தில் ஏராளமான சேவைகளை செய்து வருகின்றன. இணைப்பு என்கிற பெயரில் அவற்றை படிப்படியாக மூடும் நடவடிக்கை களை மாநில அரசு எடுத்துவருவது சரியல்ல. அவை தொடர்ந்து இயங்குவதற்கும், அதில் வேலை செய்யும் ஊழியர்களை பாதுகாப்பதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேசிய ஊரக வேலை உறுத்திட்டத்திற்கான நிதியை ஒன்றிய அரசு படிப்படியாக குறைத்து வருவது உண்மைதான். அதே நேரத்தில் இங்கு பெரும்பாலான ஊராட்சிகளில் முறை கேடுகள் பெரிய அளவில் நடைபெறுகிறது. 50 பேருக்கு வேலை கொடுத்துவிட்டு 100 பேருக்கு கணக்கு எழுதும் போக்கு உள்ளது. அரசு வெறும் பார்வையாளரா இருக்கக்கூடாது. முறைகேடுகளை சரிசெய்ய வேண்டும்.

மின் கொள்முதல் விலையைக் குறைக்க வேண்டும்

மின்சாரத்துறையைப் பொருத்தவரை கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அரசு செய்ததைத்தான் திமுக அரசும் செய்கிறது. மின்சார வாரியம் செலவுசெய்யும் 66 ஆயிரம் கோடி ரூபாயில் சுமார் 40 ஆயிரம் கோடியை வெளி மாநிலங்களில் மின்சாரம் வாங்குவதற்கே போய்விடுகிறது.

அரசு புதிய மின் உற்பத்தி நிலையங்களைத் தொடங்க வேண்டும். இதர மாநிலங்களைப் போல மின்சாரம் வாங்கு கின்ற தனியார் நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கொள்முதல் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் பெண்கள் மீதான குடும்ப வன்முறை நாளுக் குநாள் அதிகரித்து வருவதாக சபீதா பல்கலைக் கழகத்தின் ஆய்வு தெரிவிக்கிறது. ஆணாதிக்க மனோபாவமும், போதைப் பழக்கமுமே இதற்குக் காரணம். இதுகுறித்து அரசு தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும்.

தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைக்க வேண்டும். பெண்களுக்கு உரிய மதிப்பளிக்க வலியுறுத்தி வீடு வீடாகச் சென்று ஆண்களிடம் பிரச்சாரம் செய்து விழிப்புணர் வு ஏற்படுத்த வேண்டும். வருகின்ற ஜூன்மாதம் கடைசியில் இதுதொடர்பாக சென்னையில் மாநாடு மற்றும் கருத்தரங்கம் நடத்தப்படும் .
தமிழக அரசு தவறு செய்தால் சுட்டிக்காட்டவும், தேவைப் பட்டால் போராட்டங்களை நடத்தவும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஒருபோதும் தயங்கியதில்லை. ஆயிரம் மடங்கு மோசமான நடவடிக்கைகளை மோடி அரசு எடுத்து வருகிறது.

1300 ஜவுளி ஆலைகள் மூடப்பட்டுள்ளது உள்ளிட்ட ஏராளமான சான்றுகளை கூறமுடியும். அயோத்தியைத் தொடர்ந்து வாரணாசியிலும் மசூதியை இடிக்கும் நடவடிக்கைகளை பாஜக எடுத்து வருகிறது. வட மாநிலங்களில் இஸ்லாமியர்கள் வாழவே முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.

ஒன்றிய பாஜக அரசின் மதவெறி அரசியலை திமுக கடுமை யாக எதிர்த்து வருகிறது. பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்றும்வரை திமுகவுடன் இணைந்து எங்களின் போராட்டம் தொடரும். காங்கிரசுக்கும் எங்களுக்கும் பொருளாதாரக் கொள்கையில் முரண்பாடு உள்ளது. சொல்லப்போனால், இத்தகைய மோசமான பொருளாதாரக் கொள்கையை தொடங்கி வைத்ததே காங்கிரஸ்தான். மதவெறி எதிர்ப்பு எங்கிற நிலையில் தமிழகத்தில் காங்கிரசுடனும் இணைந்து செயல்படுகிறோம் என்று விளக்கினார்.”

மேலும், பேரறிவாளன் விடுதலையானது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் கொண்டாடப்பட வேண்டிய ஒன்றல்ல. தவறுக்கு உரிய தண்டனை பெற்ற பிறகுதான் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்தத் தீர்ப்பைப் பொறுத்த வரை பேரறிவாளன் விடுலையைத் தாண்டி மாநில அரசின் உரிமை நிலைநட்டப்பட்டுள்ளது என்பதே சிறப்பம்சம் .

திமுக பொறுப்பேற்று ஓராண்டில் ஏராளமன சாவல்களை சந்தித்துள்ளது. கொரோனா அலைகளை எதிர்கொண்டது. சென்னையில் வெள்ளம், புயல் சேதம், பெருமளவிலான பொருளாதார நெருக்கடிகளை தாண்டி பல்வேறு ஆக்கப்பூர் வமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதை வரவேற்கிறோம்.

அதே நேரத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.1000, அரசு ஊழியர் களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம், போக்குவரத்து ஊழியர்க ளுக்கு ஒப்பந்தப் பேச்சுவார்த்தை, ஓய்வுகாலத்தில் கிடைக்க வேண்டிய பணப்பலன் உள்ளிட்ட கோரிக்கைகளை யும் நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்துகிறோம் என்றார் கே.பாலகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்,  மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னதுரை எம்எல்ஏ, மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் ஆகியோர் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top