தமிழ்நாட்டில் வெறுப்பு அரசியலுக்கு இடம் தராத ஆட்சியை முதல்வர் மு. க. ஸ்டாலின் நடத்திக் கொண்டு இருக்கிறார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எம். சின்னதுரை பாராட்டினார்.
புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற பணிகள் தொடங்கி வைத்து மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சிறப்புரையாற் றினார்.
இவ்விழாவில் கலந்துகொண்டு முன்னதாக கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம். சின்னதுரை பேசியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்று முதல் முறையாக புதுக்கோட்டைக்கு வந்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை மாவட்டத்தில் உள்ள 16 லட்சம் மக்களின் சார்பாக வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். தங்களின் இந்த வருகை மாவட்ட வளர்ச்சியில் மேலும் முன்னேற்றம் அடையும் என்ற நம்பிக்கை உள்ளது.
அகில இந்திய அளவில் வெறுப்பு அரசியலுக்கு இடம் தறாத சிறப்பான ஆட்சியை தாங்கள் நடத்திக் கொண்டு இருக்கிறீர்கள். இந்த நேரத்தில் மாவட்ட மக்களின் சில கோரிக்கைகளை முன்வைக்க விரும்புகிறேன்.
புதுக்கோட்டை மாவட்ட மக்களின் நூற்றாண்டு கனவுத் திட்டமான காவிரி, வைகை, குண்டாறு திட்டம் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தை தங்கள் கரங்களால் தொடங்கி வைக்கும் வகையில் விரைந்து பணிகளை முடிக்க வேண்டுகிறேன்.
மாவட்டத்தில் உள்ள ஏழை, எளிய மக்களின் கல்வி வளர்ச்சியை கருத்தில் கொண்டு கீரனூரில் அரசு பொறியியல் கல்லூரி தொடங்க வேண்டுகிறேன். மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மாவட்டத்தில் உள்ள இயற்கை வளங்களைப் பயன்படுத்தி புதிய தொழிற்சாலை கள் தொடங்க வேண்டும் என்று எம். சின்னதுரை எம்எல்ஏ பேசினார்.