Close
நவம்பர் 22, 2024 6:01 காலை

புதுக்கோட்டை மாவட்டத்தில் 48,868 பேருக்கு ரூ.370 கோடியில் நலத்திட்ட உதவிகள்: முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கல்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடந்த விழாவில் பயனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்

புதுக்கோட்டையில் முதலமைச்சர் தலைமையில் (08.06.2022) நடைபெற்ற அரசு விழாவில் ரூ.166.84 கோடிமதிப்பில் 1,399 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து, 48 ஆயிரத்து 868 பயனாளிக ளுக்கு ரூ. 370 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிக ளும் ரூ.81.31 கோடியில் முடிவுற்ற 140 திட்டப்பணிகள் திறந்து வைக்கப் பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி பேசியதாவது:

அமைச்சர்கள் ரகுபதி , மெய்யநாதன், அரசு உயர் அலுவலர் கள  ஆகியோர்  இணைந்து  ஆட்சித் தலைவரின் ஒத்துழைப் போடு, மக்கள் பிரதிநிதிகளுடைய உற்சாகத்தோடு மிக எழுச்சியோடு இந்த விழாவை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

மெய்யநாதன் அமைச்சரவைக்குப் புதியவராக இருந்ததாலும், அவர் எப்படிச் செயல்படுவார் என்கிற தயக்கம் எனக்கு முதலில் இருந்தது. ஆனால் முதல் முறை சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்தபோதும், இப்போது ஆட்சிப் பொறுப்பிற்கு வந்ததற்குப் பிறகு தனது துறைக்கான மானியக் கோரிக்கைக்கு பதில் அளித்து பேசுகிறபோது, ஒரு தேர்ந்த அமைச்சராக, இரண்டாவது முறையாக அமைச்சராக அவர் பொறுப்பேற்றிருக்கிறார் என்ற அளவிற்கு அவர் அழகாகப் பேசினார்.

சுற்றுச்சூழல் துறை என்பது கொஞ்சம் டெக்னிக்கலான துறை. இன்றைய உலகில் மிக முக்கியமான துறையும் கூட. அதிலும் தனிப்பட்ட ஆர்வத்தைச் செலுத்தி அந்தத் துறையில் சிறப்பாக ஆளுமையை அவர் செலுத்தி வருகிறார். அதுமட்டுமல்ல, விளையாட்டுத் துறையிலும் தமிழ்நாடு பல்வேறு சாதனைகளைப் படைக்க, அவரது உற்சாகம் காரணமாக அமைந்திருக்கிறது.

அமைச்சர் ரகுபதியைப் பற்றி நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டிய அவசியமில்லை. அரசின் பல்வேறு சட்டங்களை நிறைவேற்றுவதிலும், தமிழக அரசின் வழக்குகளைத் திறம்பட கையாண்டு மாநில உரிமைகளை நிலைநாட்டுவதிலும் அவரது பங்களிப்பு இன்றியமையாதாக அமைந்திருக்கிறது. தமிழகத்திற்கு நல்ல அமைச்சர்களைக் கொடுத்த இந்த புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மொத்தம் 81 கோடியே 31 லட்சம் ரூபாய் செலவில், 140 பணிகள் முடிவுற்று இன்றைக்கு இந்த விழாவிலே திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. 166 கோடியே 84 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 1,399 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறேன். .தனிநபர்கள் பயன் பெறக்கூடிய வகையில் 48 ஆயிரத்து 868 பயனாளிகளுக்கு 370 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் பொதுமக்களிடம் மனு வாங்கிய முதல்வர் ஸ்டாலின்

விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கைத் தேவையையும் பூர்த்தி செய்வதுதான் திராவிட மாடல்:

மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமானால், அதிகாரத்துக்கு வந்தாக வேண்டும் என்பதை உணர்ந்ததால், தேர்தலில் குதித்த திராவிட முன்னேற்றக் கழகம், மக்கள்தான் எங்களுக்கு முக்கியமே தவிர, இப்படிப்பட்ட பதவிகள் அல்ல. எத்தகைய திட்டத்தைக் கொண்டு வந்தாலும், அதனை வாக்கு வாங்கக்கூடிய தந்திரம் என்று கொச்சைப்படுத்துபவர்கள் சிலர் இருக்கிறார்கள்.

வாக்குகளை வாங்குவதற்காகத்தான் இதை எல்லாம் நிறைவேற்றுகிறோம் என்று குற்றம் சாட்டக்கூடியவர்கள், விமர்சனம் செய்யக்கூடியவர்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள். நான் கேட்கிறேன், இருளர்களுக்கோ, குறவர்களுக்கோ, மாற்றுத்திறனாளிகளுக்கோ, திருநங்கைக ளுக்கோ  வாக்கு வங்கி அதிகமாக இருக்கிறதா? அவர்கள் வாக்கு வங்கி உள்ளவர்களா?

இப்படி வாக்கு வங்கி இல்லாதவர்களது வாழ்க்கைக்கும், அவர்களது தேவைக்கும் உதவிகளைச் செய்யும் அரசு தான் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அரசு என்பதை நீங்கள் புரிந்து கொண்டாக வேண்டும். திராவிட முன்னேற்றக் கழக அரசினுடைய நோக்கம் சிந்தனை, செயல் ஆகிய அனைத்தும் மக்கள் நலன்தான், சாதாரண மக்களின் நலன்தான், ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்தான். தன்னுடைய வாழ்நாள் முழுக்க கடைசி நாள்வரை, கடைசி நொடிவரை சிறுநீர் வாளியைச் சுமந்துக் கொண்டு, பகுத்தறிவை ஊட்டி எந்த மக்களின் சுயமரியாதைக்காக தந்தை பெரியார் பாடுபட்டாரோ.

உலக அரசியலை எல்லாம் எடுத்துச் சொல்லி, அரசியல் எழுச்சியையும், தமிழ் உணர்வையும் பேரறிஞர் அண்ணா  எந்த மக்களுக்காக உணர்வு ஊட்டினாரோ, எங்களை எல்லாம் உருவாக்கிய பெரியார் அவர்களுடைய மொழியில், இது மூன்றாம் தர அரசு கூட அல்ல, நான்காம் தர அரசு. நாங்கள் நான்காவது தரத்தைச் சார்ந்திருக்கக் கூடியவர்கள்; ஆகவே, நாலாந்தர அரசு நாட்டிலே இருக்கிறது.

நாலாந்தர மக்களுடைய நல்வாழ்வுக்காகப் பாடுபடும் அரசு இது என்பதை இறுமாப்போடு, பெருமையோடு, கர்வத்தோடு-பெரியார் அவர்களுடைய பெயரிலும் பேரறிஞர் அண்ணா பெயரிலும் சொல்லிக் கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். சமூகநீதிக்காகவும் சமத்துவத்துக்காகவும் தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட நம்முடைய தலைவர் கலைஞர் எந்த மக்களுக்காகப் பாடுபட்டாரோ, அந்த மக்களின் அரசுதான் இன்று கோட்டையில் நடக்கிறது. அந்த மக்களுக்கான அரசையே தொடர்ந்து நடத்துவோம் என்பதை நான் இங்கு உங்கள் முன்னால் நின்று முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான் இங்கேயும் குறிப்பிட விரும்புகிறேன்.

ஆகவே, இங்கே பேசியிருக்கக்கூடிய பல சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரவர் தொகுதியில் இருக்கக்கூடிய சில பிரச்னைகளை, கோரிக்கைகளைச் சுட்டிக்காட்டி, ஆனால், அதே நேரத்தில் ஏற்கெனவே சொன்ன அந்த உறுதிமொழியை, வாக்குறுதியை ஓரளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளதற்கு , மகிழ்ச்சியையும் நன்றியை தெரிவித்தனர்.

ஆகவே, இன்னும் சில கோரிக்கைகள், பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும், நான் மறுக்கவில்லை. இங்கே நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் பேசுகின்றபோது, இங்கு அனைவரும் எடுத்து வைத்த கோரிக்கைகளை   வழி மொழிவதாகக் குறிப்பிட்டார்.

நீங்கள்  இங்கே மட்டுமல்ல, சட்டமன்றத்திலும் சரி, மக்கள் மன்றத்திலும் சரி எந்தக் கோரிக்கைகளை வைத்தாலும் அதில் இருக்கக்கூடிய உண்மையை, நியாயத்தை இந்த அரசு புரிந்துகொண்டு, அதற்குரிய நடவடிக்கையை நிச்சயமாக, உறுதியாக எடுப்போம் என்ற நம்பிக்கையை, உறுதியை இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லிக் கொள்கிறேன் என்றார் முதல்வர் ஸ்டாலின்.

விழாவில், அமைச்சர்கள் கே.என். நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்,கே.ஆர்.பெரியகருப்பன்,ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர்கள்சு.திருநாவுக்கரசர், கார்த்தி ப.சிதம்பரம், ஜோதிமணி, நவாஸ் கனி, எம்.எம். அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர்கள், டாக்டர் முத்துராஜா, எஸ்.டி.ராமச்சந்திரன், எம்.சின்னத்துரை ஆகியோர் பேசினர்.

நகர்மன்றத் தலைவர் திலகவதிசெந்தில், நகரச்செயலர் ஆ. செந்தில், நிர்வாகிகள் எம்.எம். பாலு, க. நைனாமுகமது, நகர்மன்ற உறுப்பினர்கள் எம். லியாகத்அலி, அறிவுடைநம்பி, எஸ். மூர்த்தி  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு வரவேற்றார். நிறைவாக மாவட்ட வருவாய் அலுவலர் ம.செல்வி நன்றி கூறினார். பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷாபார்த்திபன் தலைமையிலான போலீஸார் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top