பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இணைக்கப்பட்டுள்ள உறுப்பு கல்லூரிகளை பிரித்து டெல்டா மாவட்டத்திற்கு தஞ்சாவூரில் தனியாக பல்கலைக்கழகம் அமைக்க வேண்டுமென தஞ்சாவூர் தெற்கு மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24 -ஆவது மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தஞ்சாவூர் தெற்கு மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது மாவட்ட மாநாடு புதன்கிழமை மாலை தஞ்சாவூர் நாஞ்சிகோட்டை ரோடு காவிரி திருமண மண்டபத்தில் தொடங்கியது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் பா.பாலசுந்தரம் ம.விஜயலட்சுமி வாசு.இளையராஜா ஆகியோர் மாநாட்டிற்கு தலைமை வகித்தனர். மருத்துவர் மு.செல்லப்பன் 24 வது மாவட்ட மாநாட்டுக் கொடியினை ஏற்றிவைத்தார். அஞ்சலி தீர்மானத்தை மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சி.பக்கிரிசாமி வாசித்தார். தஞ்சாவூர் மாநகர செயலாளர் ஆர்.பிரபாகர் வரவேற்புரை நிகழ்த்தினார்.
மாநாட்டை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி. மகேந்திரன் தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார். அரசியல் வேலை அறிக்கையை மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி, மாவட்ட துணைச் செயலாளர்கள் ப.காசிநாதன், வீ.கல்யாணசுந்தரம் ஆகியோர் முன் வைத்தனர் .
மாநாட்டின் தீர்மானங்களை மாவட்ட பொருளாளர் என்.பாலசுப்பிரமணியன், நிர்வாக குழு உறுப்பினர்கள் சி.சந்திரகுமார், இரா.திருஞானம், வீரமோகன், .கோ. சக்திவேல் , சீனி.முருகையன், ஆர். கே. செல்வகுமார் ஆகியோர் முன் மொழிந்தனர்.
முதல் நாள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: திருச்சியை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், திருச்சி ,தஞ்சாவூர், புதுக்கோட்டை அரியலூர் , திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இயங்கி வரும் அரசு கல்லூரி மற்றும் தன்னாட்சிக் கல்லூரிகள் உள்ளன.
பரந்துவிரிந்த டெல்டா மாவட்டத்தில் தஞ்சாவூரை தலைமையகமாகக் கொண்டு பாரதிதாசன் கல்லூரி பல்கலைக் கழகத்தில் இணைக்கப்பட்டுள்ள உறுப்புக் கல்லூரிகளை பிரித்து தனியாக பல்கலைக் கழகத்தை உருவாக்கி செயல்படுத்த வேண்டும் .
காவிரி வடிநில பகுதிகளின் நீர் தேவையை பூர்த்தி செய்கின்ற விதத்தில் நீரைத் தேக்கி வைத்து விவசாயம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு பயன்படுத்திட ஒரு பெருந் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த வேண்டும்.
காவிரி வடிநில பகுதிகளில் ஏராளமான ஏரி ,குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நீர்த்தேக்க வாய்ப்புள்ள பகுதிகளாக இருந்தும் முழுமையாக பயன்படுத்தவில்லை, இவற்றை முறையாக கண்டறிந்து பராமரிக்கப்படாததால் மழைநீர் உடனுக்குடன் கடலில் கலந்து வீணாகிறது, இதனை தடுக்கும் விதத்திலும், நிலத்தடி நீரை பாதுகாக்கவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா விவசாய பகுதிகளில் விவசாய உற்பத்தியை மையமாகக் கொண்டு, விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகளை ஏற்படுத்தவும் , உற்பத்திப் பொருட்களை சந்தைப் படுத்துவதற்கான ஏற்பாடுகளையும் இணைத்து செயல்படுத்த மாநில மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தஞ்சை மாவட்டத்தில் பெரும் தொழிற்சாலைகள் இல்லாத நிலையில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் விதத்தில், நிரந்தர பயிற்சி மையம் ஏற்படுத்தவும் , கடனுதவி அளித்து சிறு குறு தொழில் துவங்குவதற்கான விரிவான திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
அரியலூர் -தஞ்சாவூர்- பட்டுக்கோட்டை ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற திட்டம் இந்தப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது ,மத்திய மாநில அரசுகள் இந்த கோரிக்கைக்கு முக்கியத்துவம் அளிக்க அளிக்காமல் காலம் கடத்தி வருகின்றன.
மக்களின் பொருளாதார மேம்பாடு ,பொருள் போக்குவரத்து, பயணச்செலவு, பயண நேரம் குறைவு, தென்மாவட்டங்களில் எளிய முறையிலான தொடர்புக்கான வாய்ப்பு இவற்றை பரிசீலித்து அரியலூர்- தஞ்சாவூர்- பட்டுக்கோட்டை ரயில்பாதை அமைத்திட ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தஞ்சை மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்த்திடவும், விபத்துகளைத் குறைத்திடவும் சாந்த பிள்ளை கேட் மேம்பாலத்தை நான்கு வழிப்பாதையாக மாற்றி அமைத்து செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.