Close
செப்டம்பர் 20, 2024 1:43 காலை

மேக்கே தாட்டு அணை விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

தஞ்சாவூர்

தஞ்சையில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாடு

மேக்கேதாட்டு அணை பற்றி காவிரி ஆணையம் விவாதிக்க எந்தவித சட்ட பூர்வ தடையும் இல்லை என சட்ட ரீதியான கருத்துரை வழங்கிய மத்திய அரசின் சட்ட துறைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாம் நாள் மாநாட்டில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது..

தஞ்சாவூர் தெற்கு மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது மாவட்ட மாநாடு ஜூன் 15 ,16 ஆகிய இரண்டு நாட்கள் தஞ்சாவூரில் நடைபெற்றது.  தஞ்சாவூர் நாஞ்சிகோட்டை ரோடு காவிரி திருமண மண்டபத்தில் துவங்கி நடைபெற்றது . இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் பா.பாலசுந்தரம் ம.விஜயலட்சுமி வாசு.இளையராஜா ஆகியோர் மாநாட்டிற்கு தலைமை வகித்தனர்.

இரண்டாம் நாள் மாநாட்டில் வேலை அறிக்கை மீது விவாதம் நடைபெற்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. வரவு -செலவு கணக்குகளை மாவட்ட பொருளாளர் என்.பாலசுப்பிரமணியம் சமர்ப்பித்தார். பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி.மகேந்திரன், தேசிய குழு உறுப்பினர் கோ.பழனிச்சாமி மாநாட்டை வாழ்த்தி பேசினார்கள். இரண்டு நாட்கள் நடைபெற்ற மாநாட்டினை நிறைவு செய்து. மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் சிறப்புரை ஆற்றினார்.

தஞ்சாவூர்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட 24 -ஆவது மாநாட்டில் மாவட்ட செயலாளராக முத்து உத்திராபதி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மேக்கே தாட்டு அணை குறித்து ஒன்றிய அரசின் சட்டத்துறை காவிரி ஆணைய விவாதிக்க எந்த சட்டபூர்வ தடையும் இல்லை என சட்ட ரீதியான கருத்துகளை வழங்கியுள்ளது. இது எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல, இதுகுறித்து ஒன்றிய பிரதமர் எந்த கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் சாதிப்பது கடும் கண்டனத்துக்குரியது.

கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கே தாட்டு அணை கட்டும் நடவடிக்கையை ஒன்றிய அரசு முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும் என மாநாடு வலியுறுத்துகிறது, சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இறால் பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. சட்ட விதிகளைப் பின்பற்றாமல் கழிவுகளை கடலில் கலக்க விடுகின்றனர். இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு, சுற்றுச்சூழலுக்கு பெரிய அளவில் கேடு ஏற்படுகிறது .எனவே இறால் பண்ணைகளின் விதிமீறல்களை தடுத்து நிறுத் வேண்டும்.

கடல் பாசிகளை சட்டவிரோதமாக பொக்லைன் எந்திரம் வைத்து அள்ளி பெரிய அளவில் லாபம் அடைகின்ற செயல்கள் கடற்கரைப் பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் மீன்வளம் பாதிப்பதோடு சுற்றுச்சூழலுக்கு பெரிய அளவில் கேடு ஏற்படுகிறது , எனவே மாவட்ட நிர்வாகம் இதனை தடுத்து நிறுத்த வேண்டும்.  தஞ்சை மாவட்டத்தில் திருமலைசமுத்திரம் அருகே செயல்பட்டுவரும் சாஸ்திரா பல்கலைக்கழகம் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி உள்ளதை சென்னை உயர்நீதிமன்றம், அரசு கையகப்படுத்த ஆணை பிறப்பித்தும் நிலத்தை மீட்க இதுநாள் வரை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

ஆக்கிரமிப்பு நிலத்தை கையகப்படுத்த காலதாமத படுத்தப்படுவது சரியல்ல , உடனடியாக உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன் வரவேண்டும்.  தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் தமிழ் இலக்கியத்தை முழுநேரமாக பயின்று ஆசிரியர் பயிற்சி பெற்ற மகளிர் உட்பட சுமார் 30 ஆயிரம் பேர் 40 வயதை கடந்தும் தமிழாசிரியர் பணி கிடைக்காமல் வறுமையில் வாடி வருகின்றனர்.

கல்லூரிகளில் ஐந்தாண்டுகள் படிப்பு முடித்து , ஆசிரியர் பயிற்சி பெற்ற தமிழ் ஆசிரியர்களை நியமனம் செய்யாமல், பள்ளி ஆசிரியராக இருந்து கொண்டு பகுதி நேரமாக தமிழ் பயின்றோருக்கு 66 விழுக்காடு தமிழாசிரியர் பணி வழங்கும் அரசாணையை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இந்த அரசாணையை மாற்றி கல்லூரிகளில் நேரடியாக பயின்று, தமிழ் ஆசிரியர் தகுதி பெற்றவர்களுக்கு 66 விழுக்காடு வழங்கி தமிழ் ஆசிரியர் பணி வழங்க வேண்டும்.

ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை அனைத்து வகுப்புகளிலும் தமிழாசிரியர் நியமித்து தாய்மொழி தமிழை வளர்க்க வேண்டும். தஞ்சை மாநகரின் பழைய பேருந்து நிலையம் ,பெரிய கோயில் பகுதிகளில் பொதுமக்கள் சாலையைக் கடக்க மிகவும் கஷ்டப்படும் நிலை உள்ளது. பொதுமக்களுக்கு வசதியாகவும், விபத்துக்களை தவிர்க்கவும் நகரும் படிக்கட்டு அமைத்து, மாற்று ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும்.

அரியலூர்-தஞ்சாவூர்- பட்டுக்கோட்டை ரயில்பாதை அமைக்க வேண்டும் என்ற திட்டம் இந்தப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது ,மத்திய மாநில அரசுகள் இந்த கோரிக்கைக்கு முக்கியத்துவம் அளிக்காமல் காலம் கடத்தி வருகின்றன. மக்களின் பொருளாதார மேம்பாடு ,பொருள் போக்குவரத்து, பயணச்செலவு, பயண நேரம் குறைவு, தென்மாவட்டங்களில் எளிய முறையிலான தொடர்புக்கான வாய்ப்பு  ஆகிய அம்சங்களை பரிசீலித்து அரியலூர்- தஞ்சாவூர்- பட்டுக்கோட்டை ரயில்பாதை அமைத்திட ஒன்றிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  மாநாட்டின் முடிவில் வரவேற்புக் குழுவின் தலைவர் வழக்கறிஞர் சி.சந்திரகுமார் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top