மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு முயன்ற சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் காவல்துறையைக் கண்டித்து சிபிஎம் கட்சியினர் காத்திருக்கும் போராட்டம்
கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு முயற்சித்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் காவல்துறையி னரைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கருக்காக் குறிச்சி ராஜா குடியிருப்பைச் சேர்ந்த ஆத்மநாதன்-கவிதா தம்பதியரின் மகள் காளீஸ்வரி. தலித் வகுப்பைச் சேர்ந்த காளீஸ்வரியை கடந்த செவ்வாய்க்கிழமையன்று அதே ஊரைச் சேர்ந்த வீரப்பன் மகன் தர்மராஜ்(28) பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.
இதுகுறித்து வடகாடு காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தெம்படைந்த தர்மராஜ் மற்றும் அவரைச் சேர்ந்த சுப்பிரமணியன், சுரேஷ் சரவணன், பாலு உள்ளிட்ட 14 பேர் கும்பல் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்குள் புகுந்தும், தடுக்க வந்த அண்டை வீட்டாரையும் கொலை வெறியுடன் தாக்குல் தொடுத்துள் ளனர்.
வடகாடு காவல் நிலையத்தில் காத்திருக்கும் போராட்டம்:
தாக்குதலில் படுகாயமடைந்த தங்கையா, கிருஷ்ணமூர்த்தி, கவிதா, அமுதா, கலைச்செல்வன், அஜித்குமார் ஆகியோர் தற்பொழுது புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காவல்துறை யினரோ இருவரை மட்டும் கைது செய்துள்ளனர். மற்றவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.
இந்நிலையில், தாக்குதல் தொடுத்த அனைவர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெள்ளிக்கிழமை வடகாடு காவல் நிலையத்தில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ஸ்ரீதர், சி.அன்புமணவாளன், த.அன்பழகன், சு.மதியழகன், ஒன்றியச் செயலாளர்கள் எல்.வடிவேல், எஸ்.மணிவண்ணன், ஆர்.காமராஜ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் சி.ஜீவானந்தம், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றியச் செயலாளர் செல்வரெத்தினம், மாவட்ட துணைச்செயலாளர் சந்திரபாண்டியன், ஜனநாயக மாதர் சங்க மாவட்டத் தலைவர் பி.சுசீலா, பொருளாளர் எஸ்.பாண்டிச்செல்வி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் கீதா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவாத்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் இரண்டு தனிப்படை அமைத்து அனைத்துக் குற்றவாளிகளையும் விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுப்பது, பாதிக்கப்பட்ட தலித்மக்களின் குடியிருப்புக்கு உரிய பாதுகாப்பு அளிப்பது, முறையாக நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் மீது உரிய விசாரணை செய்து துறைரீதியான நடவடிக்கை எடுப்பது என உறுதியளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேசிய சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், அதிகாரிகள் அளித்துள்ள வாக்குறுதியை அடுத்து நாம் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்கிறோம். காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் மாவட்ட அளவிலான போராட்டத்தை நடத்துவோம் எனத்தெரிவித்தார். இதனையடுத்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.
எம்எல்ஏ எம்.சின்னதுரை ஆறுதல்: இந்நிலையில், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னதுரை எம்எல்ஏ, மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், சிபிஐ(எம்எல்) மாவட்டச் செயலாளர் பழ.ஆசைத்தம்பி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் சி.அன்புமணவாளன், செயலாளர் சி.ஜீவானந்தம் உள்ளிட்டோர் பார்த்து ஆறுதல் கூறினர்.