புதுக்கோட்டைக்கு வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திமுக இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார்.
திருச்சியில் இருந்து கார் மூலம் அவர் சனிக்கிழமை இரவு புதுக்கோட்டைக்கு வந்தார். அவருக்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, சட்டத்துறை அமைச்சரும், தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான எஸ். ரகுபதி, வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.கே, செல்லபாண்டியன் ஆகியோர் தலைமையில் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது சால்வைகள், பூங்கொத்துகள், புத்தகங்கள் வழங்கி வரவேற்றனர். கட்டியாவயல் அருகே உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவினர் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து வரவேற்பு கொடுத்தனர்.
அப்போது கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதால் நெரிசல் ஏற்பட்டது. பாதுக்காப்புபணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர். காரில் அமர்ந்தபடியே உதயநிதி ஸ்டாலின், தொண்டர்களின் வரவேற்பை பெற்று இருகரம் கூப்பி வணக்கம் தெரிவித்தும், கைகளை அசைத்தும் நன்றி தெரிவித்தார். சிலர் ஆர்வமுடன் செல்பி எடுத்தனர்.
அவர் கடியாப்பட்டியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்குகிறார் தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறந்தாங்கி, ஆலங்குடி, புதுக்கோட்டையில் நடைபெறும் கட்சி நிர்வாகிகளின் இல்ல திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். மாலையில் புதுக்கோட்டை ஆலங்குடி சாலையில் உள்ள தடிகொண்ட அய்யனார் திடலில் நடைபெறும் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றுகிறார்.