புதுக்கோட்டையில் திமுக மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்கும் விழா தடிகொண்ட ஐயனார்கோயில் திடலில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. நிகழ்ச்சியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு 1,051 கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழியை வழங்கினார்.
நிகழ்ச்சியில் உதயநிதிஸ்டாலின் பேசியதாவது: எனக்கு பேச்சைவிட செயல்தான் பிடிக்கும். அதனால் குறைந்த அளவே பேசுவேன். என்னை திருமண நிகழ்ச்சிக்கு அழைத்தபோது மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கினால் வருவேன் என்றேன். அதை ஏற்பாடு நிர்வாகிகள் செய்தனர். நீங்கள்தான் இந்த கழகத்தின் உயிர். நீங்கள் இல்லை என்றால் திமுக இல்லை. முழு வெற்றிக்கும் கட்சியின் மூத்த முன்னோடிகளின் பங்கு அதிகம் என்பதில் பெருமைப்படுகிறேன்.
மூத்த முன்னோடிகளுக்கு தாய் கழகம் சார்பில் மருத்துவ உதவி கிடைக்கும். அதேபோல இளைஞரணி சார்பில் கிடைத்த பரிசுகளை, நன்கொடைகளை ரூ.10 கோடி சேர்த்து வங்கியில் உள்ளது. அதன் வட்டியை எடுத்து மருத்துவ உதவி செய்ய இருக்கிறோம்.
நான் பெரியார், அண்ணாவை பார்த்ததில் உங்கள் ஒவ்வொருவரையும் பெரியார், அண்ணாவாகப் பார்க்கிறேன். நான் வரும்போது என்னை மூன்றாம் கலைஞர் என்று அழைத்தார்கள். இனிமேல் அப்படி அழைக்க வேண்டாம். ஒரே கலைஞர் தான். அதனால் மூன்றாம் கலைஞர் என்று அழைக்க வேண்டாம். ஐயனார்கோவில் ராசியானது என்கிறார்கள். எனக்கு ராசிகளில் நம்பிக்கை இல்லை என்றார் உதயநிதிஸ்டாலின்
விழாவில் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் வெள்ளி செங்கோல் வழங்கினார். அமைச்சர்கள் எஸ். ரகுபதி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்எல்ஏ முத்துராஜா, நிர்வாகிகள் ரா.சு. கவிதைப்பித்தன், கே.கே.செல்லப்பாண்டியன், கீரை. தமிழ்ராஜா, விராலிமலை பழனியப்பன், த. சந்திரசேகரன், முன்னாள் எம்எல்ஏ பெரியண்ணன்அரசு, அரு. வீரமணி, சண்முகம், நைனாமுகமது, நகரச்செயலர் ஆ.செந்தில் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.