Close
செப்டம்பர் 20, 2024 3:44 காலை

ஜூலை 12-ல் புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முற்றுகை:  இடதுசாரிக் கட்சிகள், விசிக அறிவிப்பு

புதுக்கோட்டை

ஜூலை.12-ல் புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முற்றுகை இடதுசாரிக் கட்சிகள், விசிக அறிவிப்பு

ஜூலை.12-ல் புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முற்றுகை:  இடதுசாரிக் கட்சிகள், விசிக அறிவிப்பு.

 குற்றவாளிகளை தப்பவிட்டு, பாதிக்கப்பட்ட அப்பாவிகள் மீது பொய்வழக்குப் போடும் காவல்துறையைக் கண்டித்து வருகின்ற ஜூலை 12 அன்று புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என இடதுசாரிக் கட்சிகள், விசிக அறிவித்துள்ளது.

இடதுசாரிக் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு விசிக மாவட்டச் செயலாளர் செப.பாவாணன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருஞானம், சிபிஐ(எம்எல்) கட்சியின் சார்பில் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினரின் செயல்பாடுகள் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. பாதிக்கப்பட்டு காவல் நிலையங்களை நோக்கிவரும் சாமான்ய ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்களை தொடர்ந்து உதாசீனப்படுத்தி வருகிறது. இதுகுறித்து, காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டும் அலட்சியமே பதிலாகத் தரப்படுகிறது.

சமீபத்தில் கறம்பக்குடி தாலுகா கருக்காக்குறிச்சி ராஜா குடியிருப்பைச் சேர்ந்த கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு முயன்ற கயவன் மீது வடகாடு காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. பாதிக்கப்பட்டது தலித் மாணவி என்பதாலும், குற்றவாளி உயர்வகுப்பு என்று சொல்லிக்கொள்ளும் நபர் என்பதாலும் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், தெம்படைந்த அந்த கயவன் தனது அடியாட்களுடன் பாதிக்கப்பட்ட தலித் பெண்ணின் குடியிருப்புகளுக்குள் புகுந்து கொலைவெறித் தாக்குதல் நடத்தியது. இதில் படுகாயமடைந்த 6 பேர் புதுக்கோட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

இடதுசாரிக் கட்சிகள், விசிகவின்  தொடர்ச்சியான போராட்டத்திற்குப் பிறகுதான் குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்து சிலர் கைது செய்யப்பட்னர். அதே நேரத்தில் தாக்குதலில் தனது மூன்று விரல்களையும் இழந்த தலித் இளைஞரை மருத்துவமனையில் இருந்து கட்டாயமாக டிஸ்சார்ஜ் செய்ய வைத்து காவல்துறை தற்பொழுது கைது செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறையில் சாதிய ஆதிக்கத்திற்கு துணைபோகும் கருப்பு ஆடுகள் நிறைந்து இருக்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அல்லது ஆதிகார வர்க்த்தின் அழுத்தத்தின் காரணமாக காவல்துறை தனது கடமையில் இருந்து தவறிவிட்டதோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. எது எப்படி இருந்தாலும் காவல்துறையினரின் இத்தகைய அராஜகப்போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கது.

வடகாடு காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆலங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆதிக்க வர்க்கத்தினரின் அடியாளாக மாறிவிட்டனர் என்கிற குற்றச்சாட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டும் நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. எனவே, இத்தகைய செயல்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளின் ஒப்பதலும் இருக்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

காவல்துறையினரின் இத்தகைய அராஜகப் போக்கை கண்டித்தும், சாதிய ஆதிக்கத்திற்கு துணைபோகும் அதிகாரிகள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வருகின்ற ஜூலை 12 தேதி அன்று புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இந்தப் போராட்டத்திற்கு மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோரை பங்கேற்கச் செய்வது எனவும், மாவட்டம் முழுதும் இதுகுறித்து தீவிரப்பிரச்சாரம் செய்வது எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத்தில் விசிக மாநில துணைச் செயலாளர் தெ.கலைமுரசு, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் த.அன்பழகன், ஒன்றியச் செயலாளர் எல்.வடிவேல், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் டி.சலோமி, செயலாளர் சி.ஜீவானந்தம், மாதர் சங்க மாவட்டப் பொருளாளர் எஸ்.பாண்டிச்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top