Close
செப்டம்பர் 19, 2024 11:13 மணி

புதுக்கோட்டையில் பெரியார் பெருந்தொண்டர் இர.புட்பநாதன் காலமானார்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட திராவிடர் கழக முன்னாள் தலைவர் இர. புட்பநாதன்

புதுக்கோட்டையில் வாழ்ந்து வந்த  பெரியார் பெருந்தொண்டர்   இர.புட்பநாதன் 19.07.2022 அன்று மாலை 4.30-மணியளவில் காலமானார்.

இர. புட்பநாதன் 20.05.1930-  ல் புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுனை எனும் சிற்றூரில்  இரபேல் அடைக்கலமேரி ஆகிய தம்பதியருக்கு  தலைமகனாக பிறந்தார். தனது  93-வயதில் உடல் நலக்குறைவு,  வயது முதிர்வின் காரணமாக   செவ்வாய்க்கிழமை பிற்பகலில்   காலமானார்.

வாழ்க்கைக்குறிப்பு: கிராமச் சூழலில் வாழ்ந்து வந்த  இவர் தனது 17-ஆம் வயதில்,  1947-ஆம் ஆண்டு புதுக்கோட்டை திலகர் திடலில் நடைபெற்ற திராவிடர் கழகப் பரப்புரைக் கூட்டத்தில் நாவலர் இரா.நெடுஞ்செழியன்  உரைவீச்சைக் கேட்டு தந்தை பெரியாரின் கொள்கையின் வசமானார்.

அன்று முதல் கொள்கை வீரராக மாற்றிக் கொண்டார்.
1954-ஆம் ஆண்டு நடந்த தொடர் வண்டி இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் புதுக்கோட்டை நகரத் திக தலைவர் பாலையவனம் சின்னராசா தங்கவேலு தலைமையில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர். அதன் பிறகு தந்தை பெரியாரின் ஆணையை ஏற்று 1957-ஆம் ஆண்டு  உணவகப் பெயர்ப் பலகை அழிப்புப் போராட்டத்தில் புதுக்கோட்டையில் பங்கெடுத்துக் கொண்டார்.

அவர் செய்து வந்த பட்டிகைக் கல் தொழிலில் படிக்கல், கல்தூண் போன்றவற்றை விற்று வாங்கும் விதமாக தேவகோட்டைக்கு 1970-ஆண்டில் குடும்பத்துடன் சென்றிருக்கிறார். அங்கு தொழில் மட்டுமல்லாது இயக்கப் பணிகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.

அதனால் 1975-ஆம் ஆண்டில் தேவகோட்டை திராவிடர் கழகத் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர்.அங்கிருந்து மீண்டும் புதுக்கோட்டைக்கு 1981-ஆம் ஆண்டில் வந்த பிறகு தொழில் மட்டுமல்லாது கழகப் பணியையும் செம்மையாகச் செய்து வந்தார். அதன் விளைவாக 1983-ஆம் ஆண்டில் புதுக்கோட்டை நகர திராவிடர் கழகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

இதற்கிடையில் புதுக்கோட்டை மாவட்டம் 1974-ஆம் ஆண்டு தனி மாவட்டமாக தொடங்கிய பிறகு 1977-ஆம் ஆண்டில் புதுக்கோட்டை மாவட்டத் திராவிடர் கழகம் உருவானது. அப்போது அ.அடைக்கலம் என்பவரை மாவட்டத் தலைவராகவும் பெ.இராவணன் மாவட்டச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
பின் 10.01.1982-முதல் 18.02.1989 வரை பி.வி.வடிவேலு என்பவர் மாவட்டக் கழகத் தலைவராக பணியாற்றி வந்த நிலையில்  19.02.1989-முதல் 26.06.2001-வரை 12-ஆண்டு காலம் மாவட்டத் தலைவராகப் பணியாற்றி வந்தார். 1983-ஆம் ஆண்டு முதல் திராவிடர் கழகம் அறிவித்த அத்தனை போராட்டங்களிலும்  பங்கேற்று சிறை சென்று வந்திருக்கிறார்.
இவர் மாவட்டத் திராவிடர் கழகத் தலைவராக இருந்த காலத்தில் தமிழகமே வியந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க இளைஞரணி மாநாட்டை புதுக்கோட்டையில் நடத்தி ஆசிரியர் வீரமணிக்கு  எடைக்கு எடை வெள்ளி கொடுத்த சாதனைக்கு சொந்தக்காரர்.

டெல்லி பெரியார் மய்யத்திற்காக 35-கிராம்வரை தங்கம் சேகரித்து வழங்கியதோடு டெல்லியில் நடந்த திறப்பு விழாவிற்கும் சென்று வந்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து பொதுக்குழு உறுப்பினராகவும் தற்போதுவரை கழகக் காப்பாளராகவும் தலைமைக் கழகத்தால் அறிவிக்கப் பட்டு செயலாற்றி வந்தார்.
இவர் ‘தனது இறுதி மூச்சுவரை கருப்புச் சட்டைக்காரனாக – பெரியார் தொண்டனாக இருந்துதான் சாவேன்’ என்ற மரண சாசனத்தை ஏற்படுத்தித் தந்திருக்கிறார்.  இவரது இறுதிச் சடங்கு நல்லடக்கம் ஆலங்குடி சாலையில் உள்ள அசோக் நகர் கல்லறைத்தோட்டத்தில்  20.07.2022 புதன்கிழமை பிற்பகலில் நடைபெற்றது.

இவருடைய வாழ்விணையர்.இன்னாசியம்மாள் அவர்கள் சில காலங்களுக்கு முன் மறைந்து விட்டார். இவருக்கு நான்கு ஆண் வாரிசு, இரு பெண் வாரிசு என ஆறுபேர் ஆவர். அவர்களில் இரண்டாவது வாரிசான வளர்மதியும் அண்மையில் மறைந்து விட்டார். மற்றவர்களான ரபேல்ராஜ், ரீத்தா என்ற மகளும், பாஸ்கர், ஆம்ஸ்ட்ராங்,  வழக்கறிஞர் ஜவகர் ஆகிய ஐந்து  வாரிசுகள் உள்ளனர்.

இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் முக்கிய பிரமுகர்கள் நூற்றுக்கணக்கானோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துச்சென்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top