Close
நவம்பர் 21, 2024 7:56 மணி

உயர் நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றுமா ? நம்பியூர் பேரூராட்சி நிர்வாகம்…

ஈரோடு

ஆக்கிரமிப்பு அகற்ற நீதிமன்றம் உத்தரவு

சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை  நம்பியூர் பேரூராட்சி நிர்வாகம்  தாமதமின்றி செயல்படுத்த வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஈரோடு மாவட்டம், நம்பியூர் பேருந்து நிலையத்திலிருந்து புளியம்பட்டி செல்லும் சாலையின் வலது, இடது புறம் சாலையோரங்களின் ஆக்கிரமிப்புகள் நெடுஞ்சாலை துறையினரால் சில மாதங்களுக்கு முன்பு அகற்றப்பட்டது.
பெரும்பாலான ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்ட நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளியங்கிரி, ஆனந்த் ஆகியோருக்குச் சொந்தமான இறைச்சி கடையும் அகற்றப்பட்டது.

மற்ற ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டிருந்த நிலையில் இருவர் மட்டும் மீண்டும் அந்த இடத்தில் இருந்து சற்று பின்புறமாக தள்ளி நம்பியூர் பேரூராட்சிக்குச் சொந்தமான இடத்தில் இறைச்சிக் கடையை மீண்டும் அமைத்துள்ளனர் இவர்கள்  கடை அமைத்த இடம் பொதுவழி என கூறப்படுகிறது.
அந்த பொதுவழி தடத்தை மறித்து கடை அமைக்கப்பட்டதை எதிர்த்து அந்த பாதையை பயன்படுத்தி வருபவர்கள் சார்பில் ராஜேஷ்வரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தார். அங்குள்ள ஆக்கிரமிப்பு கடையால் தங்களது வழித்தடம் பாதிக்கப்படுவதாகவும், பஞ்சாயத்துக்கு  சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு இறைச்சிக் கடையை அகற்ற வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 6-5-2022  -இல் வெளியிட்ட உத்தரவின்படி, 4 வாரங்களுக்குள் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி விட வேண்டும் என்று நம்பியூர் பேரூராட்சி நிர்வாகத்திற்கும், வருவாய் துறையினருக்கும் உத்தரவிட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து வெள்ளிங்கிரி, ஆனந்த் ஆகியோருக்கு நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்பு செய்துள்ள  இடத்தை காலி செய்யுமாறு கெடு விதித்து வருவாய்த்துறையினர் நோட்டீஸ் வழங்கி இருந்தனர்.
நீதிமன்ற உத்தரவின்படி பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து உள்ள இறைச்சி கடையை அகற்ற வேண்டிய பேரூராட்சி நிர்வாகம், உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்த ராஜேஷ்வரனிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிகிறது.
அவருடன் பேச்சுவார்த்தை நடத்திய நம்பியூர் பேரூராட்சித் தலைவரான திமுகவை சேர்ந்தவர். உயர்நீதிமன்ற தீர்ப்பை ஏற்று ஆக்கிரமிப்பை அகற்றாமல்  நோட்டீஸ் அனுப்பிய வருவாய்த் துறை அதிகாரிகளுக்கும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை கண்டும் காணாமல் இருக்குமாறு சொன்னதாகக் கூறப்படுகிறது.
ஆளும் கட்சி என்பதால் எதிர்த்து  நடவடிக்கை எடுக்க முடியாமலும், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த முடியாமலும் அதிகாரிகள் தவிப்பில் உள்ளனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய பேரூராட்சி நிர்வாகமே ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணை போவதால் செய்வறியாது அப்பகுதி மக்கள் திகைத்து நிற்கின்றனர். உயர்நீதிமன்றத்தின் கெடு முடிந்து 2 மாதங்களுக்கு மேலாகியும் ஆக்கிரமிப்பை அகற்ற பேரூராட்சித் தலைவரே தடையாக நிற்கிறார் என்பது தான் பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது

இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத திமுக நிர்வாகி ஒருவர் கூறியதாவது: இப்பிரச்னையால் பொதுமக்களிடம் திமுக ஆட்சிக்கு அவப்பெயர் தான் உருவாகியுள்ளது. மிக விரைவில் நம்பியூர் பேரூராட்சியில் திமுக தன்னுடைய செல்வாக்கை இழந்து விடும் என்பதில் சந்தேகமில்லை.

பல ஆண்டுகளாக அதிமுகவின் கோட்டையாக இருந்த இந்த நம்பியூர் பேரூராட்சியில் இந்த முறை தான் திமுக வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை தக்க வைக்க வேண்டுமென்றால், நம்பியூரில் ஆக்கிரமிப்பு பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். இல்லையெனில் இப்பிரச்னை மீண்டும் தலைதூக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து நம்பியூர்  பேரூராட்சித் தலைவர் செந்தில்குமார் கூறுகையில், கடை அமைந்துள்ள இடம் நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அதற்கு எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  இதில் அரசியல் உள் நோக்கம் இருக்கிறது என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top